பயங்கரவாத பூதம் முஸ்லிம்களை அழித்துவிட்டே முடிவுக்கு வரும்
இந்த சூழல் உருவாக முஸ்லிம் அரசியல்வாதிகளே காரணம் என்கிறார் அனுர
நாட்டில் பயங்கரவாதமொன்று தலைதூக்க இந்த அரசாங்கமே காரணமாகும்.அத்துடன், பயங்கரவாத சூழலை அமைத்துக் கொடுத்தது முஸ்லிம் அரசியல்வாதிகளே. இப்போது இது கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இறுதியில் இந்த பூதம் முஸ்லிகளையும் அழித்துவிட்டே முடிவுக்கு வரும் என்பதை மறந்துவிட வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் தெரிவித்தார்.
ஜனாதிபதி, பிரதமரின் தனிப்பட்ட அரசியல் போட்டியில் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்திவிட்டார்கள். முதலில் இவர்கள் தமது தனிப்பட்ட அரசியல் விளையாட்டை கைவிட்டு ஜனாதிபதியும் -பிரதமரும் ஒன்றிணைய வேண்டும், அரசாங்கமாகப் பயணிக்கத் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இந்தக் குற்றம் தடுக்க முடியாது போனதற்கு அரசியல் போட்டியே காரணமாகும். ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் நாற்காலியை தக்கவைக்கவும், அடுத்ததாக தான் ஜனாதிபதி ஆசனத்தில் அமர வேண்டும் என்ற அவாவுடனும், ஜனாதிபதி, மீண்டும் தான் ஜனாதிபதி ஆசனத்தில் அமரவேண்டும் என்ற ஆசையிலும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாது அரசியல் காரணிகளை தேடவே புலனாய்வுத்துறை பயன்படுத்தப்பட்டது. கோத்தாபய, பசில் என்ன செய்கின்றார்கள் என்பதை தேடவே புலனாய்வு பயன்படுத்தப்பட்டது. இந்த அரசியல் மோதலின் விளைவாகவே கடந்த 21 ஆம் திகதி நாட்டில் பயங்கரவாதம் வெடித்தது. இதுகுறித்து பிரதமரும் ஜனாதிபதியும் இந்த சபையில் பொறுப்புக்கூறியாக வேண்டும். இந்தக் காரணிகளை கைவிட்டு செல்ல முடியாது. இந்த தாக்குதல் இரகசிய தாக்குதல் அல்ல. கடந்த காலங்களில் அளவுக்கு அதிகமாக இந்த தாக்குதல் குறித்து பேசப்பட்டு இயக்கமாக செயற்பட்டபோதே அதனை தடுக்க முடியாது நடக்கவிட்டு இந்த ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்தனர் .
அதேபோல் முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்கள் குறித்து கவனிக்காது வியாபாரம் மட்டுமே செய்தீர்கள். முஸ்லிம் வாக்குகளை கொண்டு அரசியல் வியாபாரம் செய்தீர்கள். ஒவ்வொரு முஸ்லிம் அமைச்சரும் மக்களுக்காக அரசியல் செய்யவில்லை. இந்த அரசியல்வாதிகள் ஒருபோதும் தற்கொலை செய்யப்போவதில்லை ஏனெனில் இவர்களின் வாழ்க்கை வேறு. இவர்களுக்கு உள்ள சலுகைகள் எவற்றையும் கைவிட முடியாது. ஆகவேதான் இந்த பூதத்தை சாடியில் இருந்து வெளியில் எடுத்தது முஸ்லிம் அமைச்சர்களே. அமைச்சர்கள் நேரடியாக குண்டுத்தாக்குதலை செய்யாது போனாலும் கூட அதற்கான சூழலை அமைத்துக்கொடுத்தது முஸ்லிம் அரசியல்வாதிகளே. இப்போது இது கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இறுதியில் இந்தப் பூதம் முஸ்லிகளையும் அழித்துவிட்டே முடிவுக்கு வரும். இந்தப் பூதத்தை உருவாக்கிய நீங்களே இறுதியில் அதற்கு இலக்காவீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
தமிழர் தரப்பை நிராகரித்து அவர்களை இந்தப் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றியதன் விளைவு இறுதியில் விடுதலைப் புலிகளில் வந்து முடிந்தது. அதே தவறை இப்போதும் நாம் செய்ய வேண்டுமா? இப்போது முஸ்லிம் சமூகத்தை அவ்வாறு வழிநடத்த வேண்டுமா. இதனை தடுக்க வேண்டியது முஸ்லிம் தலைவர்கள் மூலமாகவே. அதேபோல் முஸ்லிம் சமூகம் இதற்கு இடமளிக்க வேண்டாம். முஸ்லிம் சமூகத்தில்தான் இந்த அடிப்படைவாத குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. இதனை வளர்ப்பதா அழிப்பதா என்பதை முஸ்லிம் மக்கள் தீர்மானிக்க வேண்டும். இந்தக் குற்றங்களை தடுக்க வேறு சமூகத்தால் முடியாது. முஸ்லிம் சமூகமே இதனை நீக்க வேண்டும். ஆகவே நீங்களே இதற்கு தீர்வை கூறுங்கள்.
அதேபோல் பொது சமூகமாக நாம் அனைவரும் என்ன செய்ய வேண்டும். இன்று எதுவுமே நியாயமான செயற்பாடுகள் அல்ல. ஒருபுறம் சிங்கள இனவாதம், இன்னொரு புறம் தமிழ் இனவாதம், இன்னொரு புறம் முஸ்லிம் இனவாதம் தான் அரசியலை கொண்டு செல்கின்றது. ஒரு இனவாதத்தை இன்னொரு இனவாதத்தால் அழிக்க முடியாது. ஆனால் சிலர் இந்த காரணிகளை வைத்துக்கொண்டு மகிழ்ச்சிகரமான அரசியலை செய்கின்றனர். அதற்கு இனவாதத்தை கையில் எடுக்கின்றனர். இனவாதமும் அடிப்படைவாதமும் இன்னொரு இனவாதத்தை பலப்படுத்தும். அது அழிவினை உருவாக்கும். இந்த நேரத்தில் மிகவும் கடினமான அரசியல் என்னவென்றால் ஜனநாயக அரசியல். அதனை செய்யவே நாம் முயற்சித்து வருகின்றோம். அரசியல் செய்ய எவ்வளவோ காரணிகள் உள்ளன. அதனை விடுத்து இனவாதத்தை அரசியலாக்க வேண்டாம். இப்போது இதனை கைவிட்டு தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும்.
ஜனாதிபதிக்கு எதிராக சபை முதல்வர் கடிதம் எழுதுகின்றார், பிரதமர் ஒருவரை குற்றம் சுமத்துகின்றார், ஜனாதிபதி வேறு ஒருவர் மீது குற்றம் சுமத்துகின்றார். அரசாங்கமே அடித்துக்கொண்டால் மக்கள் மீதான பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும். முதலில் பிரதமர், ஜனாதிபதி இருவரும் ஒன்றிணைய வேண்டும். உங்களின் கற்பனை ஜனாதிபதி கனவுகள் அனைத்தையும் ஒரு ஓரமாக வைத்துவிட்டு முதலில் இரண்டு தலைவர்களும் மீண்டும் ஓரிடத்துக்கு வரவேண்டும். தேசிய ஒற்றுமை, சமாதானம் என்பவற்றை கருத்திற்கொண்டு மீண்டும் ஓரிடத்திற்கு வரவேண்டும். அதுதான் தலைமைத்துவ பண்பு. ஜனாதிபதி தனது கடமை பொறுப்புக்களை தெரிந்துகொள்ள வேண்டும். பிரதமரும் அதையே செய்ய வேண்டும். இவர்கள் இதற்குத் தகுதியானவர்களா என்பதை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். உங்களின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டை கைவிட்டு பொதுமக்கள் குறித்து கருத்திற்கொண்டு தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மையை கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும்.
அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை இல்லாமலாக்க வேண்டும். இதனை தோற்கடிக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். பாடசாலை கல்வி முறைமையில் இருந்து இது குறித்து கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். அதேபோல் இதனால் இன்னொரு இனவாதத்தை வளர்த்துவிடவும் வேண்டாம். சகல மக்களின் உரிமைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். அதற்கும் அரசாங்கம் தயாரில்லை என்பது தெரிகின்றது. இந்த அரசாங்கம் தூரநோக்குடன் இன்னமும் செயற்படவில்லை. சிறுபிள்ளைத்தனமான அரசியல் செய்துகொண்டிருக்கின்றனர். பொறுப்புள்ள அமைச்சர்கள் என்ற வகையில் இவர்கள் செயற்படவில்லை. விளையாட்டு வீடுகளுக்கான அரசாங்கமே இந்த அரசாங்கம். ஆகவே இப்போதாவது உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
-Vidivelli