பயங்கரவாதிகள் பிடிக்கப்பட்டாலும் பயங்கரவாத அச்சுறுத்தல் முடியவில்லை
பயங்கரவாதிகள் சிரியாவில் பயிற்சி பெற்றுள்ளனர் என்கிறார் பிரதமர்
புனித உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட பல உண்மைகள் விசாரணைகளில் வெளிவந்துள்ளன. இந்தப் பயங்கரவாதிகள் சிரியா சென்று ஆயுதப்பயிற்சி பெற்றுள்ளதுடன் இவர்களுடன் நெருக்கமான நபர்களை கைதுசெய்யும் அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இவர்களுக்கு எந்தப் பாகுபாடும் பார்க்காது தண்டனை வழங்கப்படுமெனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். இலங்கையிலுள்ள பயங்கரவாதிகள் பிடிக்கப்பட்டாலும் இந்தப் பயங்கரவாத அச்சுறுத்தல் முடியவில்லை. வேறு எந்த வழியிலும் மீண்டும் வரலாம் எனவும் பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட அறிவிப்பு ஒன்றினை விடுத்தபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட சகலருக்கும் நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதேபோல் இந்தப் பயங்கரவாத தாக்குதலை நடத்திய குற்றத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க அரசாங்கமாக செயற்பட்டு வருகின்றோம். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயங்கரவாதிகளுடன் நெருக்கமாக செயற்பட்டு தாக்குதலுக்கு துணைபோன நபர்களை தேடும் பணியே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்களை கைதுசெய்து எந்தவித பாகுபாடும் இல்லாது சட்டத்தின் மூலமாக தண்டனை பெற்றுக்கொடுப்பதே ஒரே நோக்கமாக உள்ளது. அதற்காக அரசாங்கம் உரிய தரப்பினருக்கு சகல ஆலோசனைகளையும் கொடுத்துள்ளோம்.
மேலும் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து பொலிஸ்மா அதிபரிடம் முழுமையான அறிக்கையை பெற்றுள்ளேன். இதில் சகல பாடசாலைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது, சகல ஆலயங்களும் பாதுகாக்கப்படுவதுடன் மக்கள் வழமைபோல் வழிபாடுகளில் ஈடுபட முடியும், போக்குவரத்து சேவைகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன, ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது, விசாரணைகள் பலப்படுத்தப்படுகின்றமை உள்ளிட்ட பல காரணிகளை பொலிஸ்மா அதிபர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்தப் பயங்கரவாத தாக்குதல் ஐ.எஸ். இஸ்லாமிய அமைப்பினால் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் தலைவரினால் இஸ்லாமிய இராச்சிய அழைப்பு விடுத்தபோது பல நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் சிரியா சென்று இணைந்து கொண்டனர். இலங்கையில் இருந்தும் சிலர் சென்றதாக புலனாய்வு அறிக்கை கூறுகின்றது. 2014 ஆம் ஆண்டில் இவர்கள் சென்றுள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி ஊடாக சென்றதாகவே கூறப்படுகின்றது. எனினும் 2014 ஆம் ஆண்டின் பின்னர் இஸ்லாமிய இராச்சியம் உருவாக்கப்பட்ட பின்னர் இங்கிருந்து சிரியா சென்று ஆயுத பயிற்சி பெற்று இங்கு வந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. கொல்லப்பட்ட நபர்கள் அனைவரும் சிரியா சென்று ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளனர். அதேபோல் கைது செய்யப்பட்டுள்ள சிலரும் சிரியா சென்று பயிற்சி பெற்றதாக அறியமுடிந்துள்ளது.
அதேபோல் இந்த தாக்குதலின் பிரதான நபராகக் கருதப்படும் சஹ்ரான் என்ற நபர் 2015ஆம் ஆண்டு சிரியா சென்றுள்ளதாகவும் துருக்கியிலிருந்து சிரியாவுக்கு சென்றபோது அவரது பெற்றோரும் மற்றும் உறவினர்களும் சிரியாவுக்கு சென்றுள்ளனர் என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது. அவரது பெற்றோர்கள் சிறிது காலம் சிரியாவில் தங்கியிருந்து 2016 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகின்றது. இந்தப் பயங்கரவாத நகர்வுகளில் 18 தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. எனினும் அதற்கான இடம் வழங்கப்படவில்லை என்பதும் பாதுகாப்பு அறிக்கை கூறுகின்றது. அதேபோல் இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் வழங்கவும் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஐந்து இலட்சம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தேவாலயங்களை புனரமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. அதேபோல் மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் சகல நடவடிகைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். பாடசாலைகளை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் வழிபாடுகளும் வழமையாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. மக்கள் அச்சத்தில் உள்ளதால் அதனை நீக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.
எவ்வாறு இருப்பினும் இந்த அச்சுறுத்தல் முடிந்துவிடவில்லை, இந்த பயங்கரவாதம் உலகளாவிய பயங்கரவாதம். இதனை இலகுவாக முடிக்க முடியாது. இந்தப் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபட்ட இலங்கையர்களை கைதுசெய்து தடுத்தாலும் வேறு எந்த வழியிலும் இந்த பயங்கரவாதம் தலைதூக்க வாய்ப்புகள் உள்ளன. ஆகவே இதனை சர்வதேச ஒத்துழைப்புடன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்கான சகல தரப்புடன் இணைந்து புலனாய்வு தகவல்களை பரிமாற்றிக்கொண்டு செயற்பட வேண்டும். அதேபோல் நாட்டில் சட்டத்தை பலப்படுத்த வேண்டும். அதற்கான புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாம் கொண்டுவர முயற்சித்து வருகின்றோம். சர்வதேச இராணுவத்தை நாட்டுக்குள் அனுமதிக்க போவதில்லை ஆனால் சர்வதேச ஒத்துழைப்பு வேண்டும். இவ்வாறான காரணிகளை கொண்டு எவரும் தத்தமது அரசியல் சுயலாபம் காணாது நாடாக நாம் அனைரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
-Vidivelli