ஊரடங்குச் சட்ட வேளையிலும் வன்முறைகளுக்கு இடமளிப்பதா?

0 812

கடந்த மாதம் நாட்டில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அச்ச நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருந்த முஸ்லிம் சமூகம் கடந்த 5 ஆம் திகதி நீர்­கொ­ழும்பு பகு­தியில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­களால் மேலும் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­களின் போதெல்லாம் முஸ்­லிம்கள் பொறுமை காத்­தி­ருக்­கி­றார்கள். அளுத்­கம, அம்­பாறை, திகன வன்­மு­றைகள் இதற்கு சிறந்த உதா­ர­ணங்­க­ளாகும்.

நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­கடை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட போரு­தொட்ட, பல­கத்­துறை பிர­தே­சத்தில் முச்­சக்­க­ர­வண்டி சங்­கங்­களைச் சேர்ந்த இரு குழுக்­க­ளி­டையே கடந்த 5 ஆம் திகதி மாலை ஏற்­பட்ட முறுகல் நிலையே வன்­மு­றை­க­ளுக்குக் கார­ண­மாக அமைந்­துள்­ளது. பல­கத்­து­றையில் உரு­வான கைக­லப்பு நீர்­கொ­ழும்பில் முஸ்­லிம்கள் செறிந்து  வாழும் பகு­தி­களில் வன்­மு­றை­களைத் தோற்­று­வித்­துள்­ளது.

பெரி­ய­முல்ல, செல்­லக்­கந்த, தெனி­யா­வத்த பகு­தி­க­ளிலே வன்­மு­றைகள் பர­வ­லாக இடம்­பெற்­றுள்­ளன. 50 வீடுகள் தாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், 10 முச்­சக்­கர வண்­டிகள், 6 மோட்டார் சைக்­கிள்கள் சேதங்­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பெரி­ய­முல்ல ஜும்ஆ பள்­ளி­வாசல் தர­வுகள் தெரி­விக்­கின்­றன. ஒரு முச்­சக்­கர வண்டி எரி­யூட்­டப்­பட்­டுள்­ளது. வீடு­களின் முன்­னா­லுள்ள கேட்கள் கோட­ரி­யினால் வெட்டப்­பட்டு வீடுகள் தாக்­கப்­பட்­டுள்­ளன.

‘நீர்­கொ­ழும்பு வன்­மு­றை­க­ளுக்குக் காரணம் மது­போ­தையே’ என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். இதுவே கார­ண­மென முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களும் தெரி­விக்­கின்­றன. ஆனால் அப்­ப­குதி மக்கள் இது திட்­ட­மி­டப்­பட்ட தாக்­கு­தல்கள் என்றே தெரி­விக்­கின்­றனர். திக­னயில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள் போன்று ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்த சந்­தர்ப்­பத்­திலே இடம்­பெற்­ற­தாக பெரி­ய­முல்ல மக்கள் தெரி­விக்­கின்­றனர். பெரி­ய­முல்ல ஜும்ஆ பள்­ளி­வாசல் செய­லாளர் இஸ்­மதுல் ரஹ்­மானும் இதனை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

நீர்­கொ­ழும்பு பொலிஸ் பிரிவில் சம்­பவம் இடம்­பெற்ற கடந்த 5 ஆம் திகதி இரவு 7 மணி முதல் மறு­தினம் 6 ஆம் திகதி காலை 7 மணி­வரை ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்­தது. பெரி­ய­முல்­லயில் அன்­றைய தினம் இரவு 8 மணிக்கும் 12 மணிக்கும் இடை­யிலே வன்­மு­றைகள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன.

ஊர­டங்குச் சட்டம் அமு­லி­லி­ருந்த வேளையில் கட­மை­யி­லி­ருந்த இரா­ணுவம், விமா­னப்­படை, பொலிஸார் ஏன் வன்­மு­றை­களைத் தடுத்து நிறுத்­த­வில்லை என்ற சந்­தேகம் எழு­கி­றது. இந்த வன்­மு­றைகள் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­டதா? இதன் பின்­ன­ணியில் ஏதும் சக்­திகள் செயற்­பட்­டுள்­ளதா? என்­பதை குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் தேடிப்­பார்க்க வேண்டும்.

தெனி­யா­வத்­தை–­அ­சனார் தக்­கியா பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வா­சலின் 8 கண்­ணா­டிகள் மற்றும் குர்ஆன் பிர­திகள் வைக்­கப்­பட்­டி­ருந்த பெட்­டியின் கண்­ணா­டிகள்  உடைத்து நொறுக்­கப்­பட்­டுள்­ளன. இச்­சம்­ப­வ­மா­னது மீண்டும் இன ரீதி­யி­லான கல­வரம் ஒன்­றினை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­யா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது.

இதே­வேளை பொலிஸார் வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய இரு­வரைக் கைது செய்­துள்­ளனர். இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­வர்­களைக் கைது செய்­வ­தற்கு நான்கு  பொலிஸ் குழுக்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன. வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் அனை­வரும் கைது­செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு உச்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும்.

நேற்றுக் காலை பெரியமுல்ல பிர­தே­சத்தில் விமா­னப்­ப­டை­யினர், இரா­ணு­வத்­தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டனர். அச்­சந்­தர்ப்­பத்தில் பல முஸ்லிம் இளை­ஞர்கள் கைது­செய்­யப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர்­க­ளது கைய­டக்கத் தொலை­பே­சியில் வன்­முறை சம்­ப­வங்­களின் பதி­வுகள் இருந்­த­தாலே கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இவ்­வா­றான கைதுகள் நியா­ய­மற்­றவை என மக்கள் தெரி­விக்­கின்­றார்கள்.

இச்­சம்­ப­வத்தில் சேதங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு உரிய நஷ்­ட­யீ­டுகள் வழங்­கப்­படும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது. வழங்­கப்­படும் வாக்­கு­று­திகள் கட்­டாயம் நிறை­வேற்­றப்­பட வேண்டும். அம்­பா­றையில் வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. உரிய நஷ்டங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் நஷ்டயீடுகள் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்டுகிறோம். அம்பாறை நஷ்டயீடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை நீர்கொழும்புக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.

வன்முறைகள் நிகழ்ந்து விட்டதன் பின்பு நஷ்டயீடுகள் வழங்குவதை விடுத்து வன்முறைகள் நிகழாமலிருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதே அரசாங்கத்தின் கடமையாக அமைய வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.