முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து கடமைக்கு வருவதை எதிர்த்து நேற்று அவிசாவளை–புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் போராட்டம் நடத்தி பாடசாலை வாயிலை மூடி நேற்று தடைகளை ஏற்படுத்தினார்கள்.
பாடசாலைக்கு சாரியணிந்து வருமாறு வலியுறுத்தியதையடுத்து இச்சம்பவம் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
நேற்று பிற்பகல் இவ்விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் மேல் மாகாண ஆளுநரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. கலந்துரையாடலையடுத்து குறிப்பிட்ட 10 முஸ்லிம் பட்டதாரி ஆசிரியைகளையும் உடனடியாக மேல் மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களுக்கு இடமாற்றுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
நேற்று மேல் மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாகாண கல்விப் பணிப்பாளர் நோனிஸ், புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலய அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட 10 ஆசிரியைகள் என்போர் கலந்து கொண்டிருந்தனர்.
புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தில் 800 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இங்கு 41 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களில் 12 பேர் முஸ்லிம் ஆசிரியர்களாவர். இவர்களில் ஒருவர் ஆண் ஆசிரியர். ஏனைய 11 பேரும் பெண்கள். 11 ஆசிரியைகளில் ஒருவர் பிரசவ விடுமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவதாவது, நேற்று முன்தினம் தமிழ், சிங்கள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறிப்பிட்ட 10 ஆசிரியைகளும் அபாயா அணிந்து கடமைக்குச் சென்றுள்ளனர். அன்று இனிமேல் அபாயா அணிந்து பாடசாலைக்கு வரவேண்டாமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அவர்கள் அபாயா அணிந்து கடமைக்குச் சென்றபோதே பெற்றோர்களால் அவர்களுக்கு பாடசாலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli