பொறுப்புகள் உணரப்படாத போது

0 700
  • அலி றிசாப்

எமது கன­வுகள், இலட்­சி­யங்கள் மற்றும் எதிர்­கால எதிர்­பார்ப்­புக்­க­ளையும் முற்­றாக அழித்­து­விட்டு வாழப்­போகும் வாழ்க்­கையில் ஒரு கேள்­விக்­கு­றியை தீவி­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட மிலேச்­சத்­த­ன­மான கொலை வெறித்­த­ன­மான குண்டுத் தாக்­கு­தல்கள் இந்­நாட்டில் ஏற்­ப­டுத்­தி­விட்­டது. இது வர­லாற்றில் என்றும் மன்­னிக்­க­மு­டி­யாத பெரும் குற்­ற­மாகும்.  அத்­துடன் இக் கொலை வெறி­யர்கள் இஸ்­லாத்தின் மீதும் இந்­நாட்டின் முஸ்­லிம்கள் மீதும் அழிக்க முடி­யாத அவப்­பெ­யரை உண்­டாக்­கி­விட்­டார்கள். இதனால் ஏற்­பட்ட பொரு­ளா­தார இழப்­புக்­க­ளை­விட இனங்­க­ளுக்­கி­டை­யி­லான உறவு விரி­ச­லினால் ஏற்­பட்­டுள்ள இழப்பு மதிப்­பிட முடி­யா­த­தொன்­றாகும்.

இதற்கு யார் பொறுப்பு?

அரச புல­னாய்வுத் துறை­யிலும் பாது­காப்புப் பொறி­மு­றை­க­ளிலும் ஏற்­பட்ட பல­வீ­னமே இத்­தாக்­கு­த­லுக்குக் கார­ண­மென அந்­நிய சமூ­கங்­களும் எமது சமூ­கத்தின் தலை­மை­களும் அறிக்­கைகள் விட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. அதுவும் ஒரு கார­ண­மாக இருக்­கலாம். அதற்­காக அர­சாங்­கத்­தையே முழு­வ­து­மாகக் குற்றம் சாட்ட முடி­யாது. உதா­ர­ண­மாக ஜனா­தி­பதி சர்­வ­மத தலை­வர்­க­ளுடன் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கூட்­டத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி,  “தாம் ஏற்­க­னவே 2014 மற்றும் 2017 ஆம் ஆண்­டு­களில் ISIS என்ற பயங்­க­ர­வாத இயக்கம் அதன் செயற்­பாட்­டா­ளர்கள் பற்­றிய தகவல் அறிக்­கை­யொன்றை புல­னாய்­வுத்­து­றைக்கு வழங்­கி­ய­தாகக் குறிப்­பிட்டார்” அவர் அவ்­வாறு சொன்­னதன் பிற்­பாடே சமூ­கத்­திற்கு அவ்­வ­றிக்கை தொடர்பில் தெரிய வந்­தி­ருக்கும். ஆனால் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா இப்­ப­யங்­க­ர­வாத இயக்கம் பற்­றிய போது­மான தெளிவை எமது சமூ­கத்­திற்கோ அல்­லது எமது இளை­ஞர்­க­ளுக்கோ வழங்க முயற்­சிக்­க­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். அவ்­வாறு வழங்­கப்­பட்­டி­ருந்தால் அல்­லது இளை­ஞர்கள் வழி­காட்­டப்­பட்­டி­ருந்தால் இப்­ப­யங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றி­ருக்க வாய்ப்­பேற்­பட்­டி­ருக்­காது.

அடுத்­த­தாக முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­களம் சமூ­கத்தின் மீதுள்ள தனது பொறுப்பை சரி­யாகச் செய்­ய­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது. ஹஜ், உம்ரா மற்றும் வக்பு சபைச் செயற்­பா­டு­க­ளுடன் தனது பொறுப்பைச் சுருக்கிக் கொண்­டு­விட்­டது. பதி­யப்­பட்­டுள்ள அல்­லது பதி­யப்­ப­டாத மஸ்­ஜி­து­களின் செயற்­பா­டுகள் மற்றும் நோக்­கங்கள் பற்­றியோ எவ்­வித கரி­ச­னை­யையும் அவை மேற்­கொண்­ட­தாக இல்லை. சமூ­க­நல இயக்­கங்­களைப் பதிவு செய்­வ­துடன் அதன் காரி­யங்­களை வரை­ய­றுத்துக் கொள்­கின்­றது. குறித்த இயக்­கங்­களின் செயற்­பா­டுகள், அதன் வரு­மான மூலங்கள், அதன் மீதான உள்­ளகக் கணக்­காய்­வுகள் மற்றும் அவ்­வி­யக்­கங்­களின் செயற்­பா­டு­களின் மீதான கள மீளாய்வு போன்ற எதை­யுமே முறை­யாகச் செய்­ய­வில்லை என்­பது இப்­ப­யங்­க­ர­வாதத் தாக்­குதல் சாட்சி பகர்­கின்­றது. திணைக்­களம் ஒவ்­வொரு வரு­டமும் ஹஜ்­ஜுக்­காக வேண்­டியும் மற்றும் ஏனைய சேவை­க­ளுக்­கா­கவும் அற­விடும் கட்­ட­ணத்தைக் கொண்டே சமூக நல அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மேற்­கொள்­ளலாம். நாட்­டி­லுள்ள 250 க்கு மேல் பதி­யப்­பட்­டுள்ள அறபிக் கல்­லூ­ரிகள் மீதான தர­நி­ய­மங்கள் மற்றும் தொழிற்­ப­யிற்­சி­யுடன் கூடிய பொது­வான பாடத்­திட்டம் தொடர்­பிலும் போது­மான திட்­டங்­களோ முயற்­சி­களோ திணைக்­க­ளத்­தினால் இன்னும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பது சமூ­கத்தின் துர­திஷ்­டமோ அல்­லது திணைக்­களப் பொறுப்­பா­ளர்­களின் செயற்­றி­ற­னற்ற, சமூகப் பொறுப்­பற்ற தன்­மையோ கார­ண­மாக இருக்­கலாம். முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­களம் அதன் பெய­ரி­லுள்ள விரி­வான கருத்­துக்கு அதன் செயற்­பா­டுகள் இல்லை எனும்­போது வருத்­த­மாக இருக்­கின்­றது. அதன் பொறுப்­பற்ற தன்­மை­யினால் தற்­போது எவ்­வித குற்­றங்­க­ளு­மற்ற அப்­பா­வி­யான அறபிக் கல்­லூ­ரி­களின் அதி­பர்­களும் மஸ்ஜித் நிர்­வா­கி­களும் பயங்­க­ர­வாத சட்­டத்தின் கீழ் விசா­ரிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

நாட்­டி­லுள்ள இஸ்­லா­மிய இயக்­கங்­களும் தன்னை மட்­டுமே வளர்த்துக் கொள்­வ­திலும் மற்­றைய இயக்­கங்கள் மீது சேறு பூசு­வ­திலும் காலத்தைக் கடத்­தி­யதே தவிர தேசிய நன்­மைக்­காக ஒன்­றி­ணைய மறந்­து­விட்­டன. ஒரு சில பிக்ஹ் கருத்து முரண்­பாட்­டுக்­காக ஒரு பேரி­யக்கம் பல துண்­டு­க­ளாகப் பிரிந்து தனக்­குள்ளே சண்­டை­யிட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. உதா­ர­ண­மாக தவ்ஹீத் ஜமாஅத் இன்று எத்­தனை துண்­டு­க­ளாகப் பிரிந்­துள்­ளன. அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்­வா­கி­களும் அண்­மைய பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்குப் பொறுப்பு சொல்­லி­யாக வேண்டும். அத்­துடன் ஏதோ­வொரு தவ்ஹீத் ஜமா­அத்­தி­லி­ருந்து பிரிந்து தீவி­ர­வாதக் கருத்­துக்­களால் உள்­வாங்­கப்­பட்டு தற்­கொலை செய்து கொண்­ட­வர்­களின் இறப்­புக்கும் ஏனைய தவ்ஹீத் ஜமா­அத்­துக்­கள் பொறுப்பு சொல்­லி­யாக வேண்டும். அவர்கள் பிரிந்து போகும்­போது அவர்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். ஆனால் அவர்கள் அப்­படிச் செய்­யா­ததற்குக் காரணம் விட்டுக் கொடுப்பும் புரிந்­து­ணர்வும் மற்றும் தலை­மைத்­துவப் போட்­டி­யுமே கார­ண­மாக இருந்­தி­ருக்கும்.

இன்னும் சில இயக்­கங்கள் பழ­மை­யான தஃவா முறை­க­ளுடன் தம்மை வரை­ய­றுத்துக் கொண்டு செயற்­ப­டு­வ­தனால் தீவிர போக்­கினால் ஈர்க்­கப்­பட்­டுள்­ள­வர்­களை அணுகி அவர்­களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளக் கூடி­ய­வா­றான அணு­கு­மு­றைகள் அற்­ற­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றார்கள். அத்­துடன் அந்­நிய நாடு­க­ளுக்கு தஃவா பணிக்­காக இலட்­சக்­க­ணக்கில் செல­வ­ழித்துக் கொண்டு செல்லும் அவர்­க­ளினால் தன் நாட்டில் அந்­நிய சமூ­கத்தின் மத்­தியில் இஸ்­லாத்தைப் பற்­றிய தெளி­வான பார்­வையை முன்­வைக்க அவர்­களால் முடி­யாமல் போய்­விட்­டது என்­பது கவ­லைக்­கு­ரிய விடயம். தனிப்­பட்ட அமல்­களில் மட்டும் கவனம் செலுத்தி சமூ­க­நலன் சார்ந்த விட­யங்­களை முற்­றாக ஒதுக்­கி­யதன் விளைவே இத்­தீ­வி­ர­வா­தி­களின் உரு­வாக்கம். தஃவாவின் முழு­மை­யான வடி­வத்தை இவ்­வி­யக்­கத்­த­வர்கள் உண­ரா­த­வரை எமது சமூ­கத்தில் தீவி­ர­வா­தி­களின் உரு­வாக்­கமும் எம்­ம­வர்கள் மீதாக சந்­தேகப் பார்­வையும் நிலைத்துக் கொண்டே இருக்கும்.

முறை­யான கட்­ட­மைப்­பையும் செயற்­றிட்­டங்­க­ளையும் கொண்ட இயக்­கங்­கள்­கூட ஏதோ ஒரு வகையில் தோற்­று­விட்­டன என்று சொல்­லலாம். அதன் இளைஞர் வலு­வூட்டல் மற்றும் சமூக மேம்­பாட்டுத் திட்­டங்கள் போதிய செயற்­றிறன் அற்ற தன்­மையை இப்­ப­யங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. நாட்­டுக்கும் சமூ­கத்­துக்கும் தேவை­யா­னதைச் செய்­யாமல் வெளி­நாட்டு உதவி நிறு­வ­னங்­களின் நிகழ்ச்சி நிர­லின்­படி அவர்கள் சொல்லும் வேலைகளை மட்டும் செய்வதனால் ஏற்படும் விளைவுகள் சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிவிடும்.

மேற்கூறப்பட்ட காரணங்கள் மட்டுமல்லாமல் சமூகத்தின் தனிநபர்கள் ஒரு முஸ்லிம் என்ற வகையில் தான் செய்ய வேண்டிய கடமையைப் பொறுப்புடன் செய்யாமல் விட்டதனாலும் மற்றும் பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் செயற்பாடுகளில் அவர்கள் பெரியவர்களானாலும் கூட கவனக் குறைவாக இருந்தமையும் அழுத்திச் சொல்லக்கூடிய காரணங்களாக இருக்கின்றன என்பதை கடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் உறுதி செய்கின்றன.

பொறுப்பு பெரியதோ அல்லது சிறியதோ அதிலிருந்து விலகிச் செல்லும்போது ஏற்படக்கூடிய விளைவுகளையும் இழப்புக்களையும் மதிப்பிட முடியாது என்பது குறித்த பயங்கரவாதத் தாக்குதல்கள் உறுதி செய்து கொண்டிருக்கின்றன.
-Vidiveli

Leave A Reply

Your email address will not be published.