கைதின் போது கைது செய்யும் உத்தியோகத்தரைக் கேட்க வேண்டியவை:
- கைதிற்கான காரணம்
- கைது செய்யும் உத்தியோகத்தரின் அடையாளம்
- எந்தச் சட்டத்தின் கீழ் அல்லது ஒழுங்கு விதியின் கீழ கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது?
- நீங்கள் அல்லது உங்களது உறவினர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எங்கே தடுத்து வைக்கப்படுவீர்கள்? அல்லது அவன்/அவள் எங்கே தடுத்து வைக்கப்படுவார்?
உங்களது உறவினர் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் நீங்கள் உங்கள் நண்பருடனோ அல்லது உறவினருடனோ பொலிஸ் நிலையத்திற்கு சென்று பின்வருவனவற்றை விசாரிக்கலாம்.
- உங்களது உறவினர் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்?
- எந்தச் சட்டத்தின் கீழ் அல்லது ஒழுங்கு விதியின் கீழ் உங்கள் உறவினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்?
- நீங்கள் உங்கள் உறவினரைச் சென்று பார்வையிடலாமா அல்லது கதைக்கலாமா?
- கைது தொடர்பில் ஏதாவது ஆவணங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாமா?
மேற்கூறியவற்றை உங்களுக்குப் பதிலாகச் செய்வதற்கு சமுதாயத்தில் மதிப்புள்ள ஒருவரை அல்லது சட்டத்தரணி ஒருவரை அணுகலாம். உங்கள் உறவினரைச் சென்று பார்வையிட அனுமதி கோருவதற்கான உரிமை உங்களுக்கு எப்போதும் உண்டு! அவசரகாலத்தில் மாத்திரமே இந்த உரிமை மறுக்கப்படலாம்.
அட்டவணைகளை பார்க்க…
கீழ்வரும் சட்டங்கள் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்றன.
இலங்கையின் அரசியலமைப்பு ஏற்பாடுகளின் படி கைது செய்யப்பட்ட மற்றும் தடுத்து வைக்கப்பட்ட எவரேனும் நபருக்கு:
கைதிற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டும்.
அவர்களது சாதி, சமயம், மொழி, பால் அல்லது அரசியற்கொள்கை என்பவற்றைப் பேணுவதற்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படக்கூடாது.
சித்திரவதைக்கு அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தலாகாது.
கைதோ அல்லது தடுத்து வைக்கப்படலோ சட்டமுரணாக அல்லது எதேச்சையானதாக இருந்தால் நீங்கள் உடனடியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டொன்றை செய்யலாம்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதேச்சையான கைது தடுத்துவைப்பு மற்றும் சித்திரவதை என்பவை தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரிக்க மற்றும் புலனாய்வு செய்ய அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகள் விண்ணப்பமானது குறித்த சம்பவத்தை உடனடுத்து தாக்கல் செய்யப்பட வேண்டுமாகையால், வழக்குத் தாக்கல் செய்தல் தொடர்பில் உடனடியாக சட்டத்தரணியை அணுக வேண்டும்.
உங்களது உறவினர் குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனில் :
பொலிஸ் கைதிற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் உறவினரைச் சென்று பார்வையிடலாம் அல்லது கதைக்கலாம்.
பெரும்பான்மையான குற்றங்களுக்கு உங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர் நீதிவானின் முன் 24 மணி நேரத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
விதிவிலக்கானவை தவிர மற்றைய எல்லா வழக்குகளிலும் உங்கள் உறவினர் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும்.
உங்கள் உறவினரை நீதிமன்றில் சட்டத்தரணி மூலம் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான உரிமை உங்களுக்கு உண்டு அல்லது உங்கள் உறவினர் தங்களைத் தாங்களே நீதிமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தலாம்.
உங்கள் உறவினர் நீதிவான் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டால் அவர்களுக்கு கேட்கப்படுவதற்கான உரிமை உண்டு. மேலும் அவர்களது வழக்கை சுருக்கமாக கூறவேண்டும் என்பதுடன் ஏதாவது முறையில்லா நடாத்துகைக்குட்பட்டிருந்தால் அது தொடர்பில் அறிக்கை செய்ய வேண்டும்.
ஒரு தடவை குற்றம் சாட்டப்பட்டால் தடுத்து வைக்கப்பட்டுள்ள உங்கள் உறவினருக்கு பொலிஸ் பின்வருவனவற்றைக் கூறவேண்டும்.
குற்றச்சாட்டு தொடர்பான முதற்தகவல்
உங்கள் உறவினர் யாருக்கு எதிராக குற்றம் செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளாரோ அவரால் கூறப்பட்ட ஏதேனும் கூற்றுக்கள்.
உங்களது உறவினர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அல்லது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது
செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனில் :
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆட்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பில் 07.07.2006 இல் வெளியிடப்பட்ட ஜனாதிபதி வழிகாட்டல்கள் படி:
கைதை அல்லது தடுத்து வைத்தலை மேற்கொள்ளும் நபர் தனது பெயர் பதவி மூலம் தன்னை கைது செய்யப்படும் ஆளுக்கு அல்லது அவரின் உறவினருக்கு அல்லது நண்பருக்கு இனங்காட்ட வேண்டும்.
கைது செய்யப்பட்ட ஆளுக்கு கைதிற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டும்.
கைது செய்யப்படும் ஆள் தான் இருக்கும் இடத்தை தனது குடும்பத்திற்கு அல்லது நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்காக அவர்களுடன் தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 வயதுக்கு குறைந்த பிள்ளை அல்லது ஒரு பெண் தாம் தெரிவு செய்யும் ஆளுடன் சேர்ந்திருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இயலுமான வரை அவர்கள் ஆயுதம் தாங்கிய படையினரின் அல்லது பொலிஸின் மகளிர் பிரிவில் அல்லது இன்னொரு பெண் இராணுவ அல்லது பொலிஸ் உத்தியோகத்தரின் கட்டுக்காவலில் வைக்கப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆட்கள் தாம் தெரிவு செய்யும் மொழியில் கூற்றுக்களை வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் அதன் பின்பு அந்த கூற்றுக்களை உறுதிப்படுத்தி கையெழுத்து பெறப்பட வேண்டும். (அவர்கள் தமது சொந்த கையெழுத்தில் கூற்றுக்களை மேற்கொள்ள விரும்பினால் அது அனுமதிக்கப்பட வேண்டும்.)
கைதை மேற்கொள்ளும் நபர் அல்லது தடுத்து வைத்தல் கட்டளையை வழங்கும் நபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 48 மணி நேரத்துக்குள் ஏதேனும் கைது அல்லது தடுத்து வைப்பு மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் என்பவற்றை அறிவிக்க வேண்டும்.
-Vidivelli