ஒரு சம்பவத்தை காரணமாக வைத்துக்கொண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக எவரும் வன்முறைகளைக் கையாள வேண்டாமென பணிவாக வேண்டுகோள் விடுக்கிறேன் என கர்தினால் மெல்க்கம் ரஞ்சித் நாட்டு மக்களிடம் கோரியுள்ளார். மனிதாபிமானமற்ற சிலரே ஆயுதத்தை நம்புவார்கள், மக்கள் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று வன்முறைகள் இடம்பெற்ற நீர்கொழும்பு பலகத்துறைக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பலகத்துறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்து அங்கு சமுகமளித்திருந்த முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடினார்.
நாட்டில் நடந்து முடிந்த பிரச்சினைகளுக்கு அனைத்து முஸ்லிம்களும் காரணமல்ல. இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தைப் போன்று சமாதானத்தையும், கருணையையுமே போதித்துள்ளது. தீவிரவாதத்தை எதிர்த்துள்ளது.
முஸ்லிம்கள் எமது நாட்டில் நீண்டகால வரலாற்றினைக் கொண்டவர்கள். அவர்கள் இலங்கைக்கு வந்து நாட்டின் பல பகுதிகளிலும் பரவி வாழ்ந்தார்கள். அங்கெல்லாம் பள்ளிவாசல்கள் நிறுவப்பட்டன. கிறிஸ்தவ சமயத்துக்கும் இஸ்லாத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.
நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுக்கு அனைத்து முஸ்லிம்கள் மீதும் விரல் நீட்டக்கூடாது. ஒரு சிலரே இந்த தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு பட்டவர்கள். சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டுவதற்கும் நஷ்ட ஈடுகள் வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இந்த சூழலில் நாம் யாரும் ஆயுத போராட்டம் ஒன்றுக்கு தயாராவது ஆரோக்கியமான விடயம் அல்ல. உயிர்ப்பில்லாத மனிதர்களே ஆயுதங்களை கையில் எடுப்பார்கள். அவர்களுக்கு ஆயுதம் ஏந்தும் ஒன்று மட்டுமே தெரியுமே தவிர மனிதாபிமானம் தெரியாது. சிலருக்கு ஆயுதம் மட்டுமே தேவையாக உள்ளது. ஆயுதங்களை ஏந்தாது அனைவரும் தத்தமது மதங்களுக்கு ஏற்ப அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தெரிந்திருக்க வேண்டும் அபோதுதான் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும், ஒரு சம்பவத்தை அடுத்து சிறு சிறு முரண்பாடுகள் ஏற்படுத்தப்படுவது பெரிய மோதலில் முடியும். ஆகவே இவற்றுக்கு இடமளிக்கக்கூடாது. பாதுகாப்பு தரப்பினர் இதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்களின் பாதுகாப்பில் பாதுகாப்புப்படையினரின் பங்கு அதிகமாகும் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.
அதேபோல் சிங்கள, தமிழ், கிறிஸ்தவ மக்கள் எப்போதும் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் . குறிப்பாக முஸ்லிம் மக்களுடன் அன்புடன் எமது உறவுமுறையை கையாள வேண்டும். பயங்கரவாத தாக்குதலை வைத்து இதனையே ஒரு ஆயுதமாக கையில் எடுக்க வேண்டாம். இதற்கு முன்னர் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்தோமோ அதேபோல் இனியும் வாழ வேண்டும். கிறிஸ்தவர்கள் எப்போதும் பொறுமை அன்பு இரக்கத்துடன் வாழ வேண்டும். முஸ்லிம் மக்களுக்கு எதிராக எவரும் வன்முறைகளை கையாள வேண்டாம் என்பது எனது பணிவான வேண்டுகோள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பேராயரின் விஜயத்தில் நீர்கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாக சபை உறுப்பினர்களும், கிறிஸ்தவ ஆலயங்களின் மத குருமார்களும், பலகத்துறை ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.எஸ்.எம். ரிஸ்வி, செயலாளர் எம்.எம்.எம். இர்சாத் ஆகியோர் இணைந்திருந்தனர்.
-Vidivelli