பெரியமுல்லையில் வன்முறைகள் பதிவு: 50 வீடுகள், 15 வாகனங்கள், 10 கடைகள் சேதம்; இருவர் கைது
பேராயர் மல்கம் ரஞ்சித், உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி ஸ்தலத்துக்கு விஜயம்
நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போருதொட்ட, பலகத்துறை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சங்கங்களைச் சேர்ந்த இரண்டு குழுக்களிடையே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட முறுகலை அடுத்து நீர்கொழும்பு நகரில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. இந்த அசம்பாவிதங்களின்போது வீடுகள் பல தாக்கப்பட்டதுடன் உடைமைகளும் சேதமாக்கப்பட்டன. பள்ளிவாசல் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்கானது.
சில வீடுகளில் நகைகள் , பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தின்போது பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிலர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றபோது நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆயினும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல்களை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்டவர்களும் சம்பவத்தை நேரில் கண்டவர்களும் தெரிவிக்கின்றனர்.
பெரியமுல்லை லாசரஸ் வீதி, பெரியமுல்லை செல்லகந்த வீதி, தளுபத்தை, கல்கட்டுவை வீதியில் சமகி மாவத்தையில் அமைந்துள்ள வீடுகள் பலவற்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியன தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளன. பெரியமுல்லை லாசரஸ் வீதியில் தெனியவத்த பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தை அடுத்து முஸ்லிம் மக்கள் பெரும் அச்சத்துடன் இருந்தனர். சிலர் தமது உறவினர்களுடைய வீடுகளுக்கு பாதுகாப்பு தேடிச் சென்றனர்.
பள்ளிவாசல் மீதும் தாக்குதல்
இதேவேளை நீர்கொழும்பில் தெனியாவத்த அசனார் தக்கியா பள்ளிவாசல் நேற்று முன்தினம் இடம்பெற்ற வன்முறைகளின்போது தாக்கப்பட்டுள்ளது. தக்கியா பள்ளிவாசலின் 8 கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசலின் குர்ஆன்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியும் உடைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பெரிய முல்லை கல்கட்டுவ, செல்லக்கந்த பகுதிகளில் 50 வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் நகைகளும், பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன. பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. 10 முச்சக்கர வண்டிகள், 6 மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. வீடுகளின் கதவுகள் கோடரியினால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளன என பெரிய முல்லை ஜும்ஆ பள்ளிவாசலின் செயலாளர் இஸ்மதுல் ரஹ்மான் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் நீர்கொழும்பில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில், வன்முறைச் சம்பவங்கள் இப்பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த இரவு 8.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடையிலேயே இடம்பெற்றுள்ளன. திட்டமிட்டு இவ் வன்முறைகள் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்டுள்ளன. பெரிய முல்லை பள்ளிவாசலில் பாதுகாப்பு கடமையிலிருந்த சிவில் பாதுகாப்பு வீரரும் பயத்தினால் ஓடியுள்ளார். பலகத்துறையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 7 கடைகள் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளன என்றார்.
வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு நேற்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோர் விஜயம் செய்தனர்.
கொழும்பு வடக்கு பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனும் விஜயம் செய்தார். வன்முறை இடம்பெற்ற பகுதிகளுக்கு இராணுவம், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர், விமானப்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த பள்ளிவாசல்களுக்கு விஷேட பாதுகாப்பு வழங்குமாறு பள்ளிவாசல் நிர்வாகங்கள் பொலிஸ் மா அதிபரை கோரியுள்ளன.
பலகத்துறையில் முச்சக்கர வண்டிகள் நிறுத்துமிடம் தொடர்பில் எழுந்த சர்ச்சையே இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட முச்சக்கர வண்டி தரிப்பிடத்தை முஸ்லிம்களே சட்ட ரீதியாக பதிவு செய்து கொண்டுள்ளனர். இது உல்லாச பிரயாணிகள் வருகை தரும் பிரதேசமாகும். இந்நிலையில் மாற்றுத் தரப்பினர் முச்சக்கர வண்டி நிறுத்துமிடத்தைப் பதிவு செய்யச் சென்ற சந்தர்ப்பத்தில் அவ்விடம் ஏற்கனவே முஸ்லிம்களால் பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே இரு தரப்பினருக்கும் முறுகல் நிலை உருவாகி வன்முறைகளாக மாறியுள்ளது. பலகத்துறையில் ஆரம்பித்த வன்முறைகள் பின்பு ஏனைய இடங்களுக்கும் பரவியுள்ளது.
நேற்றுக் காலை அப் பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரங்கு தளர்த்தப்பட்டநிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் அமைதி நிலவுகின்ற போதிலும் மக்கள் அச்சத்துடனேயே உள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
மதுபோதையே காரணம்; இருவர் கைது
இதேவேளை இப் பிரதேசத்தில் மோதல் வெடிப்பதற்கு அதிக மதுபோதையே காரணம் என விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர். மோதலில் ஈடுபட்டவர்களில் இருவரைக் கைது செய்துள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ள பலரைக் கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
இந் நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து நீர்கொழும்பு பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் இராணுவம் இணைந்து சுற்றிவளைப்புக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
-Vidivelli