இத்தாக்குதல் எதற்காக, ஏன் இந்த நேரத்தில், ஏன் இந்த மக்கள் மீது எனப் பல கேள்விகள் எழுகின்றன. இன்னும் கேள்விகள் உள்ளன. இவை விடை காணப்பட வேண்டிய கேள்விகள்.
அது கிறிஸ்தவ மக்களின் புனித நாள். இயேசு உயிர்த்தெழுந்த நாள். எதிர்பார்ப்புகளும், மகிழ்ச்சியும் ஆன்மிக உணர்வுகளும் கிறிஸ்தவ மக்களை ஆட்கொண்டிருந்த நாள். இவ்வளவு பெரிய அவலமும் துயரமும் அந்த மக்களைச் சூழும் ஒரு காலை நேரமாக அன்றைய பொழுது ஏன் விடிய வேண்டும்?
46 குழந்தைகள் கொல்லப்பட்டதை சரியென எந்த நீதிமன்றத்தில் வழக்காடுவது 300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு 500 பேருக்கும் அதிகமானோர் காயமடையக் காரணமாயிருந்த அந்தத் தூண்டுதல் என்ன?
நியூஸிலாந்து கிறிஸ்ட் சேர்ச், பள்ளிவாசலில் ஒரு நபர் பைத்தியக்காரத்தனமாக டசன் கணக்கில் தொழுகையில் இருந்த முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றபோது அந்தப் பாதகச் செயலை அந்த நாடும் ஏற்றுக் கொள்ளவில்லை. உலகமும் ஏற்றுக் கொள்ளவில்லை. பொதுவாகக் கொலைகளை அதுவும் அமைதிக்கும் ஆன்மிகத்துமான கடவுளின் கோயில்களில் கொத்துக் கொத்தாக மக்கள் கொலை செய்யப்படுவதை மானுட நேசமுள்ள எந்த மக்கள் கூட்டமும் ஏற்கப் போவதில்லை.
பத்து வருட அமைதி இடைவெளிக்கு வைக்கப்பட்ட வேட்டுப் போல் இலங்கை மக்கள் அனைவரினதும் உள்ளங்களையும் இச்சம்பவம் இடிபோல் தாக்கி உள்ளது. முஸ்லிம் சமூகம் முற்றாக மனம் உடைந்து போயுள்ளது. எதிர்பாராத பேரதிர்ச்சியில் அவர்கள் உறைந்து போயுள்ளனர். இது எதற்காக? காரணங்கள் கருத்துகள் எதையும் உடனடியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் பள்ளிகளுக்குள்ளேயோ பள்ளிகளுக்கு வெளியிலேயோ அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்படும் கொலைத் தாக்குதல்களுக்குப் பயங்கரவாதம் என்று தான் பெயர். எப்படி அதை மன்னிப்பது?
இன மோதலும் இரத்தக்களரியும் நாட்டை நாசமாக்கப் போகிறது என்ற கரு மேகங்கள் சூழ்ந்த அந்தக் கணங்களையோ தினங்களையோ எப்படி மறப்பது? பாரிய குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட நீர்கொழும்பு, கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்புத் தேவாலயங்களின் சுற்றாடல்களும் அண்மித்த பஸார்களும் பிரதேசங்களும் முஸ்லிம்கள் வாழும் அல்லது நடமாடும் இடங்கள்.
தாக்குதல் கொடூரமானது, பெரியது. 11/9 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் நடந்த 5 பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று உலகச்செய்தி நிறுவனங்கள் வர்ணித்தன. உலகத்தை உலுக்கிய சம்பவம் இது. இதற்கான மீளத்தாக்குதல் எந்த இடத்திலும் எந்த நிமிடத்திலும் நடந்திருக்கலாம். ஆனால் அது அவ்வாறு நடக்கவில்லை.
இத்தாக்குதல்களின் பின்னணிகள், உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் தொடர்புகள், இன – சமய மோதல்கள், அவற்றின் தாக்கங்கள் பற்றி பெரிய விவாதமொன்றினை நாம் செய்யமுடியும். உடனடித் தேவை நாடு இரத்த ஆறாக மாறுவதைத் தடுப்பதுதான். மீண்டும் அப்பாவி மக்கள் மீது கொலைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதுதான்.
ஆரோக்கியமான அமைதியான உணர்வுகளை மக்களிடம் எப்படிக் கொண்டு செல்வது என்பது மனிதாபிமானமுள்ள மக்கள் மீது சுமத்தப்பட்ட கடமையாகியது. இரத்தத்தை இரத்தத்தினால் அல்ல இரத்தத்தை அன்பினால் வெல்வோம் என்ற பாதை தெரிந்தெடுக்கப்பட்டது. மனச்சாட்சி உள்ளவர்களும் இறைவன் மீது அன்பு கொண்டவர்களும் இப்படித்தான் சிந்தித்தார்கள்.
வரட்டு வியாக்கியானங்கள், மனித நேயத்தை மறுக்கும் சமய விளக்கங்கள், குறுகிய அரசியல், இனவாத இலாபங்கள் என்பவற்றைத் தாண்டி அன்பையும் சமாதானத்தையும் மன்னிப்பிற்கான இறைவழிகாட்டலையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய ஒரு தலைமைத்துவத்தை மக்கள் எதிர்பார்த்தனர்.
இது ஒரு குழப்பநிலை தனது மக்களின் அழிவிலிருந்து அன்பைப் பிரகடனம் செய்ய வேண்டும். அது நிகழ்ந்தது. பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பேசினார். தனது மக்களின் அழு குரலுக்கும் ஆவேசத்துக்கும் ஆண்டகை அடிபணிந்திருக்க முடியும். ஆனால் அவர் வேறு விதமாகப் பேசினார். மனிதனாகவும் உண்மையான கிறிஸ்தவனாகவும் அவர் பேசினார்.
மனித நேயத்தையும் கிறிஸ்தவ சமயத்தின் மன்னிக்கும் உணர்வுகளையும் அவர் பேசினார். இரத்தத்திற்கு இரத்தம் என்ற சாமான்ய சிந்தனைகளை அவர் கடந்து சென்றார். ஆத்திரத்தை அன்பாக மாற்றும் செய்திகளை அவர் பேசினார். தேவனின் சட்டங்களில் பரந்துகிடக்கும் மன்னிப்பின் சாரத்தை கிறிஸ்தவ மக்களுக்கு நினைவூட்டினார். ஒரு கிறிஸ்தவனாக உங்களை நிலை நாட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரது கோரிக்கைகள் வீண் போகவில்லை. கடைசி கிறிஸ்தவர்வரை அவர் பேச்சு ஊடுருவியது.
மற்றவர்களை நேசிக்குமாறும் பழிவாங்கும் உணர்வைக் கைவிடுமாறும் பேசினார். மன்னிப்பதுதான் கிறிஸ்துவின் பாதை என்பதைப் பலமுறை வலியுறுத்தினார். இயேசுவுக்கு முற்பட்ட சமயங்களில் பகைவரை வெறுக்க வேண்டும் என்ற கட்டளைகள் வெளிப்படையாகப் பேசப்பட்டிருந்தன. பழைய ஏற்பாட்டிலும் இவ்வகைக் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.
“அயலவர்” (அடுத்திருப்பவர்) என்ற சொல் வேறுபாடுகள் இன்றி எல்லா மனிதரையும் குறிப்பதுதான் என்ற புரிதல் முன்னர் இருக்கவில்லை. குடும்ப கோத்ர உணர்வுகளுக்குள் மக்கள் புதைக்கப்பட்டிருந்தனர். அது ஒரு குழு உணர்வு. சகோதர அன்பு என்ற வட்டத்திற்குள் பகைவனுக்கு இடமில்லை என்று வரையறுக்கப்பட்டிருந்தது.
உனக்கடுத்தவனை (மற்றவர்களை) நேசித்து உன் சத்துருவைப் பகையாளி என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் ( மத்தேயு 5: 43) என்று இயேசு இதைச் சுட்டிக்காட்டுகிறார். பழைய வியாக்கியானங்கள் இன்று பொருத்தமற்றது என்பது தான் அவர் போதனை. தொடர்ந்து அவர் கூறுகிறார்;
உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள், உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள், உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் (லூக்கா 6: 27, 28) என்ற ஒரு மனிதரையும் ஒதுக்கிவிடாமல் அனைவரையும் உள்ளடக்கும் சக்தி மிக்க கருத்து இது. அனைத்து மக்களையும் சகோதரர்களாக, சகோதரிகளாக எடுத்துக் கொள்ளுங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்பது தான் கிறிஸ்துவின் புதிய போதனை அது குழு உணர்வுக்கு அப்பாற்பட்டது.
21 ஆம் திகதி, உயிர்த்தெழுந்த தினத் தாக்குதலின் சூடு தணியுமுன்னர் கிறிஸ்தவ தலைமைத்துவமும் கிறிஸ்தவ மக்களும் இந்த வேத சத்தியங்களுக்கு மதிப்பளித்து சமாதானத்தை நிலை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர். பள்ளிவாசலில் தொழுகைக்காகக்கூடிய மக்கள் மீது வெறியன் ஒருவனால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை நியூஸிலாந்து நாடும் அதன் பிரதமரும் நிராகரித்த வேளையிலும் இதே சிந்தனை உணர்வு தான் மேலோங்கி இருந்ததை உலகம் கண்டது. முஸ்லிம் உலகம் அவர்களுக்கு நன்றி கூறியது. மனிதம் சாகவில்லை என்று கவிஞர்கள் பாட்டிசைத்தனர். அந்தக் கதை முடியும் முன்னர் தான் இந்தத் தாக்குதல் நடந்தது. சமயங்கள் சமாதானத்திற்காகவா? அழிவிற்காகவா? என்ற கேள்விக்குள் மக்கள் மூழ்கி உள்ளனர்.
நியூஸிலாந்து நாடு நடந்து கொண்டதும், இலங்கையில் கிறிஸ்தவ தலைமைகள் நடந்து கொண்டதும் மனித நேயத்தின் ஓயாத குரலுக்கு சாட்சியமின்றி வேறென்ன?
கிறிஸ்தவத் தலைமைகளுடன் முஸ்லிம் சமயத் தலைமைகள் ஏற்படுத்திக் கொண்ட உறவு அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது. மனிதநேயம் பகிர்ந்து கொள்ளப்பட்ட சிறந்த சந்தர்ப்பங்கள் அவை. ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முஃப்தியின் கொள்ளுப்பிட்டி வெள்ளிக்கிழமை சமயப் பிரசங்கம் கிறிஸ்தவ மக்களின் பொறுமைக்கும் கிறிஸ்தவத் தலைமைகளின் அர்ப்பணிப்பிற்கும் நன்றி கூறுவதாக அமைந்திருந்ததை நாம் நினைவுபடுத்தாதிருக்க முடியாது.
உடனடித் தேவையாக இருந்தது மனிதநேய உறவுகள்தான். முஸ்லிம்கள் அதை செய்யத் தயாராக இருந்தார்கள். இரத்த தானம் செய்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும் முஸ்லிம்கள் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அறிய முடிந்தது ஆறுதலளிக்கும் செய்தியாகும். இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பது ஊர்ஜிதமாவதற்கு முன்னதாகவே நாங்கள் ஒரு குழுவினர் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களை அவரது கொழும்பு வாசஸ்தலத்தில் சந்திக்கச் சென்றதாக மற்றொரு சமயத் தலைவர் யூசுப் முப்தி “வெளிச்சம்” தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியில் கூறினார். கிறிஸ்தவ தலைமைகளுடனும் மக்களுடனும் முஸ்லிம்கள் தொடர்ந்து நல்லுறவைப் பகிர்ந்து கொண்டனர்.
முஸ்லிம் புத்தி ஜீவிகளும் கல்விமான்களும் தாமதமின்றித் தமது அனுதாபங்களையும் கண்டனங்களையும் வெளியிட்டனர். மனித உணர்வுகளோ இஸ்லாம் சமயமோ இத்தாக்குதலை அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் சக மனிதர்களுக்கும் மனுக்குலத்திற்கும் சமாதானத்தை வழங்குமாறு போதிக்கும் இஸ்லாம் சமயம் இக்கொலைகளுக்கு எதிரான கருத்துக்களையே கொண்டதாக இருப்பதாகவும் தமது அறிக்கைகளில் பதிவு செய்தனர்.
“The Religion of Islam” (1950) என்ற புகழ்பெற்ற நூலில் அதன் ஆசிரியர் முஹம்மது அலி “இஸ்லாம்” என்ற சொல்லிற்குப் பின்வரும் விளக்கத்தை வழங்குகிறார். இஸ்லாம் என்றால் சமாதானத்தில் நுழைவது என்று பொருள். இறைவனுடனும் (சக) மனிதர்களுடனும் சமாதானத்தை உருவாக்கிக் கொள்பவர்தான் உண்மை முஸ்லிம். மனிதருக்கு தீமைகளையும் அநியாயங்களையும் செய்யாதிருப்பது மட்டுமல்ல நன்மைகளையும் நல்லதையும் (மற்ற) மனிதர்களுக்குச் செய்தாக வேண்டும். மனிதனுடன் சமாதானம் என்பதன் பொருள் அதுதான். குர் ஆனின் 1:112 ஆவது வசனத்தையும் அவர் இதற்கு ஆதாரமாகக் கூறுகிறார். “அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிகின்றவர்கள் யார் என்றால் மற்றவர்களுக்கு யார் நன்மை செய்கின்றார்களோ அவர்கள்தான்” அந்த இறைவசனத்திற்கு அவர் தரும் கருத்து இது.
அவர் மட்டுமல்ல இஸ்லாம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தேடும் எந்த அறிஞரும் இஸ்லாம் என்பதன் வேறு சொல் “சமாதானம்” என்பதையே பிரதிபலிப்பதாகக் கூறுகின்றனர். இஸ்லாம் மதத்தின் பெயரிலேயே சமாதானம் என்ற கருத்தும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கட்டளையும் ஒன்றிணைந்திருப்பது இஸ்லாம் மதத்தின் உண்மையான அடிப்படையையும் இலக்கையும் உறுதி செய்கின்றன.
மற்றவர்களுடன் சமாதானத்தைப் பகிர்ந்து கொள்வதும் மற்றவர்களுக்குத் தீங்கு செய்யாதிருப்பதும் என்ற உயர்ந்த மானிட இலட்சியங்களே இங்கு அடித்தளமாக அமைந்துள்ளன. இவை தான் சமயங்களின் உண்மையான அடித்தளங்கள் சமாதானத்துக்கான வழிகாட்டல்கள்.
பேராசிரியர்
எம்.எஸ்.எம்.அனஸ்
vidivelli