புர்காவுக்கு பின்னாலிருக்கும் ‘அரசியல்’

0 1,308

எனது பக்­கத்து வீட்­டி­லி­ருக்கும் மாயா­வி­னது ஒரு தமிழ் கிறிஸ்­தவக் குடும்பம். மாயா அநே­க­மாக ஒவ்­வொரு ஞாயிறும் புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்­துக்கு செல்லும் பழக்­க­மி­ருப்­பவர். (உயிர்த்த ஞாயி­றன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்­டுக்கு வந்­த­ப­டியால் செல்­ல­வில்லை) மாயா­வுக்கு ஒரே­யொரு மகன். மாயாவின் மகனை தினமும் பாட­சா­லைக்குக் கூட்டிச் செல்ல தனது ஸ்கூட்­டரில் மாயாவின் தோழி வரு­வ­துண்டு. விடு­முறை நாட்­க­ளிலும் ஒரு கொஞ்ச நேரத்­துக்­கேனும் அந்தத் தோழிகள் சந்­தித்துக் கொள்­வார்கள். அந்தத் தோழி சில­போது கறுப்­பிலும், பல­போது நிறங்­க­ளி­லு­மான ‘அபாயா’ என்னும் நீண்ட ஆடை­யினை அணிந்து வருவார். முஸ்லிம் பெண்­ணான அவளைக் கடந்த உயிர்த்த ஞாயி­றி­லி­ருந்து வீட்­டுப்­பக்கம் காண­வில்லை. என்­ன­வென்று விசா­ரிக்க மாயா சொன்ன பதில் “ அய்யோ! சரி­யான பாவம். போன ஞாயிற்றுக் கிழ­மை­யில இருந்து அவ வீட்ட விட்டு வெளி­யி­லயே வரல்ல. நான்தான் போய் பார்த்­துட்டு வந்தன். நல்லா பயந்து போய் இருக்­கிறா. அவ­வுக்கு அபாயா இல்­லாம வெளிய வர பழக்­க­மில்­ல­தானே. உடுத்­தாத மாதிரி இருக்கும் என்டு வராம இருக்கா. உடுத்­துட்டு வந்தா இப்ப பிரச்­சி­னையா இருக்­குமோ என்டு பயந்து போய் வீட்டு உள்­ளுக்­கேயே இருக்கா. சரி­யான கவ­லையா இருந்­திச்சு…’ நானும் சல்வார், கமீஸ் உடுத்து தலையை மூடும் ஒரு முஸ்லிம் பெண் என்ற அடிப்­ப­டையில், அந்த அச்ச உணர்வை என்னால் புரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தது.

உயிர்த்த ஞாயிறுக் கொண்­டாட்­டத்தில் உயிர்ப் பலி­யெ­டுத்த பயங்­க­ர­வா­தத்தின் அதிர்­வி­லி­ருந்து நான் இன்னும் மீள­வில்லை. ‘அர்­ரஹீம்’- ‘நிக­ரற்ற அன்­பு­டை­யோனின்’ பெயரில் என்று எந்­த­வொரு காரி­யத்­தையும் ஆரம்­பிக்கும் முஸ்­லி­மாக இருப்­ப­தற்கும், அன்­பே­யற்று கொடூரக் கொலை­களை இஸ்­லாத்தின் பெயரில் புரி­வ­தற்கும் எப்­படிப் பார்த்­தாலும் தொடர்பே இல்­லையே என்ற குழப்பம் எனக்குள்.

பெரும் அனர்த்­தத்தின் பின்­ன­ரான மூன்­றா­வது நாளில் நான் மருத்­து­வ­மனை செல்ல வேண்­டி­யி­ருந்­தது. நான் அறிய என்னைத் தவிர முஸ்லிம் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படக் கூடி­ய­தாக யாரும் அங்­கி­ருக்­க­வில்லை. வந்­தி­ருந்த அனை­வ­ரது பார்­வையும் என்னை துளைத்­தெ­டுத்­த­தனை அவ­தா­னித்தேன். எனது தலையில் இருக்கும் முக்­காடு அவர்­க­ளுக்கு எத்­தனை தூரம் பயத்தைத் தோற்­று­விக்­கி­றது என்­ப­தனை ஒரு­புறம் உணர்ந்­தாலும், மறு­புறம் எதிர்­வி­னை­யாக எனக்­கேதும் ஆகி­வி­டுமோ என்ற அச்­சமும் என்னுள் எழாமல் இருக்­க­வில்லை. மருத்­து­வ­ம­னையின் கழிப்­ப­றைக்குள் சென்று சிறிது நேரம் அமர்ந்­தி­ருந்தேன். எனக்குள் எழுந்த பதற்­றத்­தினை தணித்து நான் நிதா­னிக்க வேண்­டி­யி­ருந்­தது. அன்று வீடு­வந்து சேரும் வரையும் பயந்­த­ப­டியே வந்தேன். சக­வாழ்வின் மீது நம்­பிக்கை கொண்டு பன்­மைத்­து­வத்தை கொண்­டாடி வாழும் எங்­க­ளுக்கு, முஸ்லிம் பெண்­க­ளுக்­கான அடை­யா­ளப்­ப­டுத்­தல்­க­ளுடன் வாழ்தல் பெரும் பயங்­க­ரத்­தையும், அச்­சத்­தையும் விதைத்­தி­ருக்­கி­றது.
பெண்­க­ளது உடலும், ஆடையும் எப்­போதும் பெரும் அர­சியல் சார்ந்­த­தா­கவே இருக்­கின்­றன. அரசும், சமு­தா­யமும், சமய ஸ்தாப­னங்­களும், குடும்­பமும் எப்­போதும் பெண்­களின் ஆடைகள் குறித்த தீர்­மா­னங்­களை எடுப்­ப­வர்­க­ளா­கவும், கட்­டுப்­ப­டுத்­து­ப­வர்­க­ளா­கவும் இருக்­கின்­றனர். இதில் முஸ்லிம் பெண்கள், முஸ்­லி­மல்­லாத பெண்கள் என்ற வேறு­பாடு கிடை­யாது. பாட­சா­லைக்குள், வணக்­கஸ்­த­லங்­க­ளுக்குள் செல்­வது முதல் அரச நிறு­வ­னங்­க­ளுக்குச் செல்­வது வரை பெண்­க­ளது ஆடை பெரும் அர­சி­ய­லா­கவே இருந்து வந்­தி­ருக்­கின்­றது.

புர்­கா­விற்கும் பயங்­க­ர­வா­தத்­திற்கும் என்ன தொடர்பு? புர்கா என்­பது உச்சி முதல் உள்­ளங்கால் வரை மறைக்கும் ஒரு­வித ஆடையைக் குறிப்­பி­டு­கின்­றது. முகத்தை மறைப்­பது நிகாப் எனப்­படும் முகத்­தி­ரை­யாகும். (இலங்­கையின் பிரச்­சினை நிகாப் என்னும் முகம் மறைத்தல் பற்­றி­யது. எனினும் இந்த சந்­தர்ப்­பத்தில் இலங்­கையில் புர்கா என்ற பெய­ரி­லேயே பிரச்­சி­னைக்­குள்­ளாக்­கப்­பட்டு வரு­வ­தனால் நான் அந்த பதத்­தி­னையே முகத்தை மறைத்தல் என்­ப­தாக இந்தக் கட்­டு­ரையில் பாவிக்­கிறேன்.) முகத்தை மறைத்தல் என்­கையில் முற்­றாக முகத்தை மறைப்­ப­தா­கவோ அல்­லது கண்கள் மட்டும் தெரியும் வகை­யிலோ சில முஸ்லிம் பெண்­களால் அணி­யப்­ப­டு­வ­தாக இருக்­கி­றது. குறிப்­பாக முஸ்­லிம்கள் உள்­ள­டங்­க­லாக, பல இலங்­கை­ய­ருக்கு இது இலங்­கையில் ஏன் அணி­யப்­பட வேண்டும் என்ற கேள்­வியும், எரிச்­சலும், எழு­வ­துண்டு. இதற்கு சில முஸ்­லிம்­களும் இது எமது கலா­சா­ர­மல்ல, இது அரா­பிய கலா­சாரம் என்று கடுப்­புடன் பதி­ல­ளிப்­ப­தையும் கேட்­டி­ருக்­கிறேன். எது எமது கலா­சாரம்?

புழுங்கித் தள்ளும் வேளை­யிலும் எமது கால­நி­லைக்கு ஒவ்­வாத மேற்­கத்­தேய கலா­சார ஆடை­யி­னையோ, வட இந்­திய, தென் இந்­திய கலா­சா­ரத்­தி­னையோ சுடச் சுட நாக­ரிகம் மாறு­வ­தற்­கேற்ப கேள்­விகள் இன்றி பின்­பற்றும் நாம் மத்­திய கிழக்கு கலா­சா­ரத்­தினை பின்­பற்றும் போது மட்டும் கொதிப்­பது ஏன்? பிறி­தொ­ரு­வ­ருக்கு தீங்­கி­ழையா வண்ணம் ஒரு தனி­நபர் எந்தக் கலா­சா­ரத்தைப் பின்­பற்ற வேண்டும் அல்­லது பின்­பற்றக் கூடாது என்­பது அவ­ரவர் தெரிவு இல்­லையா?

இஸ்­லா­மிய வெறுப்பு, இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம், முஸ்லிம் பெண்கள் ஒடுக்­கு­மு­றைக்­குள்­ளாக்­கப்­ப­டு­கி­றார்கள் என்ற பரப்­பு­ரை­யினால் பயங்­க­ர­வா­தத்­திற்கும், புர்­கா­விற்கும் எப்­போதோ முடிச்சுப் போட்­டு­விட்­டார்கள். அதன் தொடர்ச்­சிதான் தற்­போது இங்கு ஆரம்­ப­மா­கி­யுள்­ளது எனலாம். இது­வரை வந்த தக­வல்­க­ளின்­படி, இலங்­கையின் இந்த துயர் மிகு நாட்­களின் பயங்­க­ர­வா­தத்­துடன் நேர­டி­யாகத் தொடர்­பு­டை­ய­வர்கள் மிகவும் ‘நவ நாக­ரி­க­மா­கவே’ வந்து இரத்­தப்­பலி எடுக்­கி­றார்கள். பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என அவர்­க­ளது மனை­வி­க­ளா­கவும், குடும்­பத்­தி­ன­ரா­கவும் அடை­யாளங் காணப்­பட்டு வெளி­யி­டப்­பட்ட படங்கள் ஒன்­றிலும் கூட எந்­த­வொரு பெண்ணும் முகத்­தி­ரை­யினை அணிந்து கொண்­டி­ருந்­த­தாகக் காண­வில்லை. இச்­சந்­தர்ப்­பத்தில் ஏன் திடீ­ரென்று புர்­கா­வினை தடை செய்யக் கோரப்­பட்­டது என்­ப­துதான் இங்­குள்ள கேள்வி.

அரசல் புர­ச­லாக இருந்த இந்த புர்­கா­விற்கு அதி­கார, மார்க்க அஸ்­தி­வாரம் கொடுத்து வலுச் சேர்த்த முக்­கிய சூத்­தி­ர­தாரி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா. பெண்­களின் ஆடைகள் பற்றி விதம்­வி­த­மாக வகுப்­பெ­டுத்த இந்த உலமா சபை புர்கா அணி­வது வாஜிப் (கட்­டாய கடமை) என்றும் பத்­வாவும் (மார்க்கத் தீர்ப்பு) கொடுத்­தி­ருந்­தது. 2012, அதற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­களில் முஸ்­லிம்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட இன­வாதம், இஸ்­லா­மிய வெறுப்பு என்­ப­வற்­றிற்கு (ஏனை­ய­வர்­க­ளுக்கு பார்ப்­ப­தற்கு சங்­க­ட­மாக இருப்­ப­தனால்) முஸ்லிம் பெண்­களை கறுப்பு ஆடை அணி­யாமல் நிறங்­க­ளி­லான ஆடை­களை அணி­யும்­படி கேட்டுக் கொண்­டது. இங்கு மிகவும் முக்­கி­ய­மாக கருத்தில் எடுக்­கப்­பட வேண்­டிய விடயம் இந்த முகம் மூடு­த­லுக்கு முஸ்லிம் சமூ­கத்தில் பெரும்­பான்­மைக்கும் அதி­க­மானோர் கடும் எதிர்ப்புத் தெரி­வித்துக் கொண்­டி­ருந்­த­மை­யாகும்.இவை­யெல்லாம் நடந்து கொண்­டி­ருந்த அதே கால­கட்­டத்தில் மார்க்­கத்தில் முகம் மூடுதல் கட்­டா­ய­மில்லை, விரும்­பினால் அணி­யலாம், அதிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன வன்­முறை, எதிர்ப்பு காணப்­ப­டு­கையில் பல்­லின சமூ­கத்தில் சிறு­பான்­மை­க­ளாக முஸ்­லிம்கள் வாழும் நாடு­களில் முகம் மூடு­தலை தவிர்த்தல் நலம் என வாதிட்ட முஸ்லிம் உல­மாக்­களை, குறு­கிய மார்க்கப் பிரி­வி­னை­க­ளுக்குள் தள்ளி, தனது செல்­வாக்­கினைப் பயன்­ப­டுத்தி அந்­நிய சக்­தி­க­ளாகச் சித்­த­ரித்து, பகி­ரங்­க­மாக அவ­மா­னப்­ப­டுத்­தி­யது இந்த ஜம்­இய்­யத்துல் உலமா சபை.

புர்கா இன்றோ, என்றோ, எங்­குமே பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் தரக் கூடிய ஒரு ஆடை­யாக இருக்க முடி­யாது என்று கொள்­ளுப்­பிட்டி பள்­ளி­வா­சலில் வெள்ளிக் கிழமை பிர­சங்­கத்தில் (11.03.2016) வீர வசனம் பேசிய அதே உலமா சபையின் தலைவர் இன்று, புகைந்து கொண்­டி­ருந்த பகை எரி­த­ண­லாக மாற அர­சாங்கம் தடை செய்ய முன்­னரே, புர்­கா­வினை தவிர்ந்து கொள்­ளும்­படி கூறி­ய­துடன், பின்னர் அர­சாங்­கத்­துடன் இணைந்து எது­வித மறுப்பும் இன்றி முற்­றாகத் தடை செய்தும் விட்­டது.

(அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் தற்­கா­லிகத் தடை என்றால் என்ன என்­பது போர்க்­கால வர­லாற்றை அறிந்த மக்­க­ளுக்கு நன்கு தெரியும்) மார்க்க ரீதி­யாக அது கடமை என பெண்­களை நம்ப வைத்து அணிய வைத்­தான பின், எனது மார்க்க உரி­மை­யாக நான் புர்­கா­வினை அணி­வ­தனை ஜம்­இய்­யத்துல் உலமா எப்­படித் தடை செய்ய முடியும்?

இது­வரை துர­திஷ்­ட­வ­ச­மாக உலகில் பல்­வேறு இடங்­க­ளிலும் ஆயி­ர­மா­யிரம் பயங்­க­ர­வாத சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அவற்றில் யெமனில் ஒரு ஆண் புர்கா அணிந்து ஆயு­தங்­களை வைத்­தி­ருந்தான் என்ற ஒரே­யொரு சம்­ப­வத்­தினைத் தவிர ஏனைய அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஆண்கள் வெளிப்­ப­டை­யா­கவே தாக்­குதல் நடத்­தி­யி­ருந்­தனர். கடந்த மூன்று தசாப்­தங்­க­ளாக ‘பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்க’ என்று அர­சாங்கம் கடு­மை­யாக போரா­டிய காலம் அத்­த­னைக்கும் ஒரு நாளி­லேனும் முகத்­தி­ரை­யினை தடை செய்ய அர­சாங்கம் முயற்­சிக்­க­வில்லை.

பொது இடத்தில் முகத்­திரை அணி­வது தடை செய்­யப்­பட்­டுள்ள நாடு­களில் பிரான்சும் ஒன்று. 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் கடற்­க­ரையில் குளிப்­ப­தற்கு முஸ்லிம் பெண்கள் ‘புர்­கினி’ என்ற முகத்தைத் தவிர முழு உடலும் மறைத்த ஆடை­யினை உடுத்­த­போது அதற்­கெ­தி­ராக பிரஞ்சு அர­சாங்கம் புர்­கினி அணிந்து கடலில் குளிக்க முடி­யாது என்று தடை­வி­தித்­தது. இதன் போது பிரான்­சிய பெண்­களும், ஏனைய பெண்­களும் ஆடை பற்­றிய ஒடுக்­கு­மு­றைக்கு எதி­ராக முஸ்லிம் பெண்­க­ளுக்கு ஆத­ர­வாக புர்­கி­னியை உடுத்து ஆர்ப்­பாட்டம் செய்­தனர். பெண் உடல்­களை, பெண் ஆடை­களை அர­சி­ய­லாக்க வேண்டாம் என்­பது இவர்­களின் கோரிக்­கை­யாக இருந்­தது. இங்­குள்ள விடயம் எவ்­வாறு குறித்த இனத்தின் மீதான எதிர்ப்பும், காழ்ப்­பு­ணர்ச்­சியும் படிப்­ப­டி­யாக செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்­ப­தற்­கான உதா­ர­ண­மாகும்.
இந்தத் தடைக்­கான கார­ண­மாக ஒன்­றே­யொன்று மட்­டுமே வலு­வா­ன­தாகத் தோன்­று­கின்­றது. ‘அது என்ன புர்கா? அதனைப் பார்த்­தாலே பற்றிக் கொண்டு வரு­கி­றது. ஏன்தான் இதனைப் போடு­கி­றார்­களோ?’ பல முஸ்­லிம்­க­ளதும், பல முஸ்­லி­மல்­லா­தோ­ரி­னதும் அங்­க­லாய்ப்பு. குறித்த ஆடை தொடர்­பாக எமக்­குள்ள வெறுப்பு. நீண்ட நாட்­க­ளாக கொஞ்சம் கொஞ்­ச­மாக வளர்ந்து வந்த எதிர்ப்பு சந்­தர்ப்பம் பார்த்து வெடித்­தி­ருக்­கி­றது. தற்­போ­தைய நிலை­வ­ரத்­தின்­படி பாது­காப்புக் காரணம் என்­ப­த­னையும் தாண்டி, ‘பயம்’ அல்­லது ‘அசௌ­க­ரியம்’ அல்­லது ‘வெறுப்பு’ என்­ப­தாகக் கொள்­ளலாம்.

புர்கா அணிந்த நிலையில் என்­ன­ருகில் ஒரு நப­ரி­ருந்தால் எனக்கு எழக்கூடிய அசௌ­க­ரியம்,. இந்த அசௌ­க­ரியம் எங்­க­ளுக்குள் எப்­பொ­ழுதும் இருந்து வந்­த­துதான் என்­ப­தனை நாங்கள் ஏற்றுக் கொண்­டாக வேண்டும். எனது தனிப்­பட்ட வெறுப்­பினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எப்­போது எனக்கு ஒரு­வரின் ஆடை பிடிக்­க­வில்லை. ஆகவே அந்த நபர் வேறு ஆடை அணிய வேண்டும் எனக் கரு­து­கி­றேனோ மாற வேண்­டி­யது அந்த நபர் அல்ல, நான்தான். (இது புர்­கா­வினை எதிர்க்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் சேர்த்­துத்தான்.) எனது விருப்பு, வெறுப்­பு­களை நான் இன்­னொ­ருவர் மீது திணிக்க ஆரம்­பித்­த­லி­லேயே எனது ஒடுக்­கு­முறை ஆரம்­பிக்­கி­றது.

இந்த ஆடை தொடர்­பான அசௌ­க­ரி­யம்தான் புர்கா தடைக்குக் காரணம் என்­ப­தற்கு மிகச் சிறந்த ஆதா­ர­மாக உலமா சபையின் வேண்­டுகோள் கடி­தத்தைக் (28.04.2019) கூறலாம். இது பெண்கள் கறுப்பு நிறத்­தி­லான ஆடை­களை முற்­றாகத் தவிர்ந்து கொள்ளல், கறுப்பு நிறம் தவிர்ந்த ஏனைய நிறத்­தி­லான ஆடை­களை அணிதல் என்று குறிப்­பி­டு­கி­றது. அபா­யாவைத் தடை செய்­யாமல் கறுப்பை தடை செய்ய என்ன காரணம்? கறுப்பு நிறத்­துக்கும் பயங்­க­ர­வா­தத்­துக்கும் என்ன சம்­பந்தம்? இது பாது­காப்புக் கார­ண­மல்ல, மாறாக குறித்த ஆடை­யி­னதும், அந்த நிறத்­திலும் இருக்கும் வெறுப்பு என்­பது தெட்­டத்­தெ­ளிவு.

காத்­தான்­கு­டியைச் சேர்ந்த சிலர் தற்­கொலைத் தாக்­குதல் நடத்­தி­யி­ருக்­கி­றார்கள். எனக்குத் தெரிந்து அந்த ஊரில் பள்­ளி­வா­சலில் நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்­களை படு­கொலை செய்த சம்­ப­வத்தால் பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் குடும்­பங்­க­ளுக்கும், சில தமிழ் குடும்­பங்­க­ளுக்கும் இடையில் இன நல்­லு­ற­வினைப் பேண கடு­மை­யாக பல வரு­டங்­க­ளாக நம்­பிக்­கை­யோடு சமூகப் பணி­யாற்­று­கின்ற, ஆரை­யம்­ப­திக்கும், காத்­தான்­கு­டிக்கும் காணிப்­பி­ரச்­சினை வரும்­போது இன முறு­க­லின்றி சுமு­க­மாக பிரச்­சி­னையைத் தீர்க்க இரவு பக­லாகத் திரிந்த, கலையின் ஊடா­கவும், இலக்­கி­யத்தின் ஊடா­கவும் இன நல்­லு­ற­வுக்­காக உழைக்­கின்ற, பெண்­க­ளது முன்­னேற்­றத்­துக்­காக அய­ராது பாடு­பட கடும் எதிர்ப்­புக்கு மத்­தி­யிலும் புர்கா, அபாயா அணிந்து வரு­கின்ற, களனிப் பிர­தேசம் வெள்­ளத்தில் அள்­ளுண்­ட­போது ஓடோடி வந்து நாட்­க­ணக்­காக பொருட்கள் சேக­ரித்து சிங்­கள கிறிஸ்­தவ பகு­தி­க­ளிலே நிவா­ரணப் பணிகள் செய்த என் அத்­தனை தோழ­மை­களும் காத்­தான்­கு­டி­யி­லி­ருந்து வந்­த­வைதான்.

சிலர் ஒட்­டு­மொத்­த­மாக காத்­தான்­குடி அப்­ப­டித்தான் என்னும் போது என்னால் உடன்­ப­டவே முடி­ய­வில்லை. எப்­படிச் சொல்ல முடியும் காத்­தான்­கு­டியே அப்­ப­டித்தான் என்று? (குறிப்பு: நான் காத்­தான்­கு­டியைச் சேர்ந்­தவள் அல்ல) அண்­மையில் சம்­மாந்­து­றையில் இடம்­பெற்ற சுற்­றி­வ­ளைப்பும், சாய்ந்­த­ம­ரு­துவில் பயங்­க­ர­வா­தி­களைக் கொன்­றொ­ழித்­த­மையும் ஊர் மக்­களின் ஒத்­து­ழைப்­பினால் செய்­யப்­பட்­ட­வையே என்­ப­தையும் ஞாப­க­மூட்ட விரும்­பு­கிறேன். முஸ்லிம் பொது சனங்கள் தாமும் எவ்­வாறு இலங்கை பிர­ஜை­க­ளாக பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக செயற்­ப­டு­கி­றார்கள் என்­ப­தற்கு இவை சிறு உதா­ர­ணங்கள். (முஸ்­லிம்கள் அனை­வரும் பயங்­க­ர­வா­திகள் அல்ல என்­ப­தனை நாம் மீண்டும் மீண்டும் நினை­வு­ப­டுத்த வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலையில் இருக்­கிறோம்.)

புர்கா அணிந்­த­வர்கள் எல்லாம் பயங்­க­ர­வா­தி­களா? அபாயா அணிந்த பெண்கள் தற்­கொலைக் குண்­டு­தா­ரி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக இருந்­தார்கள். உண்­மைதான். இலங்­கையில் ஒரு மில்­லியன் முஸ்லிம் பெண்­களில் அதி­க­மானோர் அந்த கறுப்பு ஆடை­யைத்தான் அணி­கி­றார்கள் என்றால் அது ஒரு ஆடையே தவிர பயங்­க­ர­வா­தி­களின் சீருடை அல்ல என்­பதை எப்­படி விளங்கிக் கொள்ளப் போகிறோம்? நாட்டின் நிலைமை கருதி எம் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் பொறுப்­புண்டு. நாட்டின் பாது­காப்பு மிக அவ­சியம். இச்­சந்­தர்ப்­பத்தில் பாது­காப்பு நிமித்தம் பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு நாம் பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­குதல் வேண்டும். இய­லு­மான அளவு எமது அடை­யா­ளங்­களை வெளிப்­ப­டுத்தல் எவ்­வாறு அல்­லது பொது வெளியில் இந்த நெருக்­கடி நேரத்தில் எவ்­வாறு நடந்து கொள்ள முடியும் என்­பது தொடர்பில் கரி­சனை எடுத்தல் வேண்டும். இது­வரை காலமும் முஸ்லிம் பெண்கள் அதற்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கியும் இருக்­கி­றார்கள். புர்கா அணிந்­தி­ருந்­தாலும் இலங்­கையில் அடை­யாள அட்டை, கடவுச் சீட்டு, வாகன சாரதி அனு­மதி என்று அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும், ஏனைய சோதனைச் சாவ­டி­க­ளிலும் முஸ்லிம் பெண்கள் தமது அடை­யா­ளத்­தினை உரிய முறையில் வெளிப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கின்­றனர். எந்த ஒரு இடத்­திலும் அடை­யா­ளத்­தினை வெளிப்­ப­டுத்­து­வதில் முஸ்லிம் பெண்கள் முரண்­பட்­டது கிடை­யாது. உலகில் அனைத்து நாடு­க­ளிலும் புர்கா அணியும் பெண்கள் செய்­வதும் இதுவே.

இவ்­வா­றி­ருக்க, நமது நாட்டில், பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக முன்­வைக்­கப்­பட்ட அனைத்து ஆதா­ரங்­க­ளிலும் முகத்தை மறைத்த அல்­லது அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்­தாத எது­வித பயங்­க­ர­வாத செயலும் இடம்­பெ­றாத நிலையில் எதற்­காக இந்தத் தடை? இஸ்­லாத்தின் பெயரில் பயங்­க­ர­வா­திகள் செய்த பயங்­க­ர­வா­தத்தின் கார­ண­மாக ஏன் அமை­தி­யான முறை­யி­லான முஸ்லிம் பெண்கள் பழிக்கும் ஆளாகி, பாவத்­துக்கும் ஆளாக நேரிட வேண்டும்? இன்னும் குறிப்­பாக சொல்­லப்­போனால் புர்­கா­வினைத் தடை செய்த உலக நாடு­களில் பயங்­க­ர­வாதம் ஒன்றும் முடிந்து போய்­வி­ட­வில்லை என்­ப­தனைக் கவ­னத்தில் கொண்டு பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக இறுக்­க­மாக, உறு­தி­யாக என்ன நட­வ­டிக்கை எடுத்தல் வேண்டும் என்­பதில் அர­சாங்கம் அர­சியல் பண்­ணாமல் சிரத்தை காட்ட வேண்டும். உள்­கா­யத்­திற்கு மருந்­தி­டாமல் வெளிப்­புண்­ணிற்கு மருந்­திடும் அரச கோமா­ளித்­தனம் முற்­றுப்­பெற வேண்டும்.

பெண்கள் உரி­மை­க­ளுக்­கான ஒரு செயற்­பாட்­டா­ள­ராக நான் அதிகம் முஸ்லிம் பெண்­க­ளுடன் வெவ்­வேறு முஸ்லிம் கிரா­மங்­களில் பெண்­க­ளோடு களத்தில் நேரம் செல­வ­ழிக்­கிறேன். கட்­டுப்­பா­டான முஸ்லிம் ஊர்­க­ளுக்குள் இருந்து கொண்டு சிறு­மி­க­ளுக்கு செய்­யப்­ப­டு­கின்ற திரு­ம­ணங்­களைத் தடை செய்­வ­தற்கும், திரு­ம­ண­மா­னதால் பாட­சா­லைகள் தள்ளி வைத்த விவா­க­ரத்­தான சிறு­மி­க­ளுக்கு கல்­விக்­கான தனிப்­பட்ட வச­தி­களைச் செய்து கொடுக்­கின்ற, கண­வனால் கைவி­டப்­பட்ட பெண்­க­ளுக்கு பிள்­ளை­க­ளுக்­கான தாப­ரிப்பு வழக்கு வைக்­கவும், தனித்து வாழும் பெண்கள் சுய­மாக வாழ்­வா­தாரம் ஈட்­டவும் உதவி செய்­கின்ற, அர­சி­யலில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வ­த்­துக்காய் பங்­கேற்­கின்ற இன்னும் பெண்­க­ளது ஒடுக்­கு­மு­றை­க­ளுக்கு தம்­மா­லா­ன­வற்றை துணிந்து செய்­கின்ற எத்­தனை எத்­த­னையோ பெண்கள் இந்த கறுப்பு அபா­யாக்­க­ளுக்­குள்ளும், முகத்­தி­ரைக்குப் பின்­னாலும் இருந்­துதான் சமூகப் பணி­யாற்­று­கி­றார்கள்.

எத்­த­னையோ பாட­சாலை மாண­வி­க­ளுக்கும், பல்­க­லைக்­க­ழகம் செல்லும் மாண­வி­க­ளுக்கும் உகந்த தெரி­வாக அவர்­களால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­வதும் அபா­யாக்­களும், புர்­காக்­க­ளும்தான். மாறாக சமூ­கத்தின் அனைத்து கட்­ட­மைப்­பு­க­ளிலும் பெண்­க­ளுக்கு எதி­ரான ஒடுக்­கு­முறை சட்டம் சார்ந்தும், நடை­மு­றை­சார்ந்தும் விரவிக் கிடக்கும் போது தமது நிலையை, எதிர்ப்பை, செய­லா­ளு­மையை இந்த ஆடைத் தெரிவின் ஊடாக இப்­பெண்கள் தெரி­விக்­கின்­றனர். புர்­கா­வினை அணி­வதன் ஊடாக கல்வித் தகைமை முதற் கொண்டு, சிறந்த தொழி­லா­ளு­மையைப் பெற்றுக் கொண்­டது வரை இப்­பெண்கள் சாதித்து வரு­கின்­றமை ஏராளம். புர்கா நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டதா அல்­லது அவர்­க­ளது தெரிவா என்ற வாதாட்­டத்­திற்கு நான் வர­வில்லை. மாறாக நீண்­ட­கா­ல­மாக அத­னையே தங்கள் ஆடை­யாக அடை­யா­ளப்­ப­டுத்தி வந்த முஸ்லிம் பெண்­களைப் பொறுத்­த­ளவில் புர்­கா­வினைத் தடை செய்­வது நான­றிந்த வகையில் ஏற்­க­னவே பல­வ­கை­யிலும் தமக்­கான உரி­மை­க­ளுக்­காக தமக்கு இயை­பான வழி­களில் போராடும், செயற்­படும் எத்­த­னையோ முஸ்லிம் பெண்­களை விளிம்பு நிலைக்குள் நிச்­ச­ய­மாகத் தள்­ளி­விடும்.

மார்க்க ரீதி­யாக இத்­தனை காலமும் முகத்தைக் காட்­டு­வது பெரும் பாவம் என்று கூறி பல தசாப்­தங்­க­ளாக முகத்­தி­ரை­யிட்டு வாழ்ந்த பெண்­களை திடீ­ரென்று கழற்றி விட்டு பொது­வெ­ளியில் நட­மாடு என்று கூறு­வது எத்­தனை கொடு­மை­யான விடயம் என்­ப­தனை உணர முடி­கி­றதா? புர்­கா­வினை அணி­வது எண்­ணிக்கை அடிப்­ப­டையில் மிகச் சொற்­ப­மான தொகை­யி­னரே என்று தொகையில் சிறு­பான்மை என்­ப­தனால் நாம் அவர்கள் தெரி­வினை ஒடுக்­கு­மு­றைக்­குள்­ளாக்க முடி­யுமா?

இந்த அத்­தனை பெண்­க­ளி­னதும் நட­மாடும் சுதந்­தி­ரத்­தினைப் பறித்து பல­வந்­த­மாக வீடு­க­ளுக்குள் ஒடுக்கப் போகிறோம் என்­ப­தனை நாம் உணர்ந்­தி­ருக்­கி­றோமா? வசதி படைத்த வர்க்­கத்­தி­ன­ரன்றி பொது­வெ­ளியில், பொதுப் போக்­கு­வ­ரத்தை பாவிக்கும் அடித்­தள மட்ட முஸ்லிம் பெண்­களை இது எவ்­வ­ளவு தூரம் பாதிப்­புக்­குள்­ளாக்கும் என்று யோசித்­தி­ருக்­கி­றோமா?

தொடர் குண்டு வெடிப்­பு­களின் பின்னர், தொலைக்­காட்சி நேர்­காணல் ஒன்றில் புர்கா என்­பது அவ­சி­யம்­தானா என்ற கேள்­விக்கு பேர் பெற்­ற­தொரு உலமா வழங்­கிய பதில் ‘பெண்­க­ளது இடம் வீடுதான். அவர்கள் வீட்­டுக்­குள்­ளேயே இருந்து கொண்டால் இந்த புர்கா பிரச்­சி­னையே இல்லை. அவர்கள் வெளியில் வரு­வ­த­னால்தான் இந்த புர்கா பற்­றிய பிரச்­சி­னையே வரு­கி­றது’ என்­ப­தாக அமைந்­தது. முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தி­க­ளாக தம்மைக் காட்டிக் கொள்ளும் பெரும் மார்க்கத் தலை­மை­க­ளி­ட­மி­ருந்து இந்தப் பதில் வரு­கின்­ற­தாயின் புர்­கா­வினை தடை செய்­வதன் ஊடாக ஏற்­க­னவே பல்­வேறு தடை­க­ளுக்குள் சிக்­கி­யுள்ள முஸ்லிம் பெண்­க­ளது நிலைமை நிச்­ச­ய­மாக இன்னும் மோசமாகி விடும் என்பதனை நாம் உணர வேண்டும்.

அடையாளம் தெரியாமல் முகத்தை மறைத்தல் தடை என்பது புர்காவுக்குத் தடை என்பதாக அர்த்தப்படுத்தப்பட்டு அதனை எதிர்த்தவர்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில், நெருக்கடியான இந்த நேரத்தில் போதிய விளக்கம் இன்மையினாலும், இன வெறுப்பினாலும் காதுகள் உட்பட முகத்தை மறைத்தல் தடை என்பதனை சரியாக விளங்கிக் கொள்ளாமல் பொதுவெளிகளில் ஹிஜாபால் (தலையை மட்டும் மறைத்தல்) தலைமூடக் கூடாது, ‘சோளாலும்’ மூடக் கூடாது, மூடினால் உள்ளே வர முடியாது என்று வைத்தியசாலைகள் உட்பட பல்வேறு இடங்களிலும் பல்வேறு கெடுபிடிகளும், அடாவடித்தனங்களும் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக ஏற்கனவே ஆரம்பமாகி விட்டன. (எனக்கும் நடந்தது! ஆனால் என்ன சட்டத்தரணி என்ற ‘மேல் வர்க்க சலுகை’ அரசியல் என்னைக் காப்பாற்றியது. ஏனைய பெண்கள்?) இதனை விடவும் முக்கியமான விடயம் அடையாளத்தை காட்டும்படி கோரும் அதிகாரம் யாரிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது? குழப்பகரமான இந்தத் தருணத்தில் முகம் மறைக்காமல் தலையை மூடுகின்ற பெண்களைக் கூட சூழலில் உள்ள அனைவருமே பொறுப்புதாரிகளாக மாறி முஸ்லிம் பெண்களது சோளைக் கழற்றச் சொல்வதற்கு என்ன எதிர்வினையாற்ற முடியும்? நாட்டு நிலைவரத்தின்படி பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியமான அம்சம். இதற்கு மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஆனால் பாதுகாப்புத் தேவைகளுக்கான ஆதாரங்கள் இன்றிய இந்த புர்கா தடை பெரும் அரசியல் சார்ந்தது என்பதனையும் அதன் பாதிப்பு நமது முஸ்லிம் பெண்களுக்கே என்பதை நாம் உணரவாவது வேண்டாமா?

குறிப்பு: தனிப்பட்ட ரீதியில் எனக்கு புர்காவை ஒரு சொட்டும் பிடிக்காது. ஆனாலும் பாதுகாப்புக் காரணிகளுக்காக அல்லாமல் இஸ்லாமிய வெறுப்பு அரசியலால் இத்தடை ஏற்படுகையில் என்னால் அதனை ஏற்க முடியாது. இழப்புற்றவர்களை ஆறுதல்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை. இன, மத வேறுபாடுகளறியாத அன்பையும், ஆதரவையும் காட்டுவதன் ஊடாக உயிர்ப்போடு நம்மை வைத்திருக்கும் அத்தனை தோழமைகளுக்கும் நன்றி. மனிதம் வாழட்டும். அன்பு ஓங்கட்டும்.

ஹஸனாஹ் சேகு இஸ்­ஸடீன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.