அரபு மொழி போதிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் குடி வரவு, குடியகல்வு திணைக்களத்திடம் அறிக்கையொன்றினைக் கோரியுள்ளதுடன் இவ்வாறு வருகை தந்துள்ள வெளிநாட்டு ஆசிரியர்களை திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரபு மொழி போதிப்பதற்காக சுமார் 600 ஆசிரியர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் அநேகர் சுற்றுலா விசாவில் வருகைதந்துள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாக்கள் வழங்கப்பட்டுள்ள நடைமுறைகள் தொடர்பில் ஆராயுமாறும் பிரதமர் வேண்டியுள்ளார்.
அரபுக் கல்லூரிகள் மற்றும் அரபு மத்ரஸாக்களில் அரபு மொழி போதிப்பதற்காக அரபு நாடுகளிலிருந்து 38 ஆசிரியர்கள் வருகை தந்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 15 பேர் எகிப்திலிருந்து வருகை தந்தவர்கள். அவர்களது விசா அடுத்த மாதம் காலாவதியாகவுள்ளதாகவும் கூறினார். இவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டின் கீழ் வருகை தந்தவர்களாவர்.
அடுத்த 23 ஆசிரியர்களும் இலங்கையில் இயங்கிவரும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் ஏற்பாடுகளின் கீழேயே வருகை தந்துள்ளனர். ஜோர்தான், யெமன், பாகிஸ்தான், பஹ்ரேன், மலேசியா, லிபியா, தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
vidivelli