கட்சி அரசியலிலிருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ பிணத்தின் மீதேறி அரசியல் நடத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடுமையாக சாடினார்.
சிறையிலுள்ள ஞானசார தேரரை சந்தித்துவிட்டு வரும்போது
ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில், 21 ஆம் திகதி தாக்குதல், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டவர்களின் உதவியுடன் இடம்பெற்றதாகவும், பயங்கரவாதத்திற்கும் சில முஸ்லிம் தலைமைகளுக்கும் தொடர்பிருப்பதாகவும் விஜயதாஸ ராஜபக் ஷ எம்.பி. குற்றம் சுமத்தியிருந்தார். நேற்றைய தினம் ஐ.தே.க. தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கையிலேயே முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேற்கண்டவாறு குற்றம் சுமத்தினார்.
இது குறித்து அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி, அவருக்கு சட்டம் தொடர்பிலும் அதன் நுணுக்கங்கள் தொடர்பிலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அண்மைக்காலமாக அவரின் நடவடிக்கைகள் அவரின் சட்டத்துறை சார்ந்த விடயத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் மற்றும் அதிகாரங்கள் குறித்து அவர் வழங்கிய சட்ட ஆலோசனைகளால் நாட்டில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. அத்துடன் அவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். அவருக்கு எந்தக் கட்சியும் அடைக்கலம் கொடுக்க தயாராக இல்லை. இவ்வாறானதொரு நிலையில் இனவாதத்தை வைத்து அரசியல் நடத்த அவர் முயற்சிக்கிறார். இப்போது பிணத்தின் மேல் ஏறி அரசியல் நடத்தும் மோசமான நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கின்றார்.
பயங்கரவாதிகளுடன் எமக்குத் தொடர்பிருப்பின் அவர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ பயங்கரவாத தடுப்புப் பிரிவிலோ முறையிடலாம். அவ்வாறு செய்யாது காட்போட் வீரனைப் போல் ஊடகங்களில் கருத்து தெரிவித்த மக்களை பிழையாக வழிநடத்தி சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்து முயற்சிக்கிறார் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.
vidivelli