நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு பொலிஸாரும் படையினரும் முன்னெடுத்து வருகின்ற தேடுதல் மற்றும் ஏனைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். அதுபோலவே ஏனைய இன மக்களும் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றனர். இதன் காரணமாக ரமழான் மாத ஆரம்பத்திலேயே நாட்டில் அமைதியையும் இயல்பு வாழ்க்கையையும் உறுதிப்படுத்த முடியுமென அம்பாறை பிராந்திய 24ஆவது பிரிவின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே தெரிவித்தார்.
அக்கரைப்பற்றிலுள்ள இராணுவத்தின் 241 ஆவது படைப் பிரிவு அலுவலகத்தில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஊடகவியலாளர்களை சந்தித்து தற்போதைய நிலைவரம் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
241ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியான கேர்ணல் விபுல சந்திரசிறியும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
பிராந்திய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே இங்கு மேலும் கூறுகையில், நமது நாட்டில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அப்பாவி மக்கள் உயிரிழந்தும் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்த பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்களாக அதாவது, கடந்த 20ஆம் திகதி வரைக்கும் மூவின மக்களிடையேயும் இருந்த இன சௌஜன்யமும் அமைதியும் சீர்குலைந்து போயுள்ளன. முஸ்லிம்கள், சிங்களவர்கள், கிறிஸ்தவர், தமிழர் என எல்லா மதங்களைப் பின்பற்றுகின்ற மக்களும் மன அமைதியை இதனால் இழந்திருக்கின்றனர். எனவே பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டிய கடப்பாடு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் உள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் கிழக்கில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து படையினர் சோதனைகளையும் தேடுதல்களையும் பரவலாக மேற்கொண்டு வருகின்றனர்.
தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆயுதங்கள், வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவோம். சாய்ந்தமருதில் இங்கு இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தத்தை முறியடிக்க அப்பிரதேச மக்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
அதேபோன்று நிந்தவூர், சம்மாந்துறையில் சந்தேகத்திற்கிடமான வீடுகள் பற்றி அப்பிரதேசவாசிகளே பாதுகாப்புத் தரப்பிற்கு அறியத் தந்திருந்தனர். அந்த வகையில், தேடுதல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எமது முயற்சிகளுக்கும் முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பை படைத்தரப்பிற்கு வழங்கி வருகின்றனர்.
இதேவேளை, இந்த தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கும் சந்தேகநபர்கள் தொடர்பில் அறிவிப்பதிலும் இப்பகுதியில் வாழும் முஸ்லிம் மக்கள் முப்படையினருக்கும் மிகவும் உதவி புரிகின்றனர். ஏனைய தமிழ், சிங்கள மக்களும் தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்குகின்றனர் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.
தற்போது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டுள்ளவர்களை கைது செய்வதற்கும் பொலிஸாரும் இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் தீவிர சோதனைகள், சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற நிலையில், நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டினதும் இப்பிராந்தியத்தினதும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதும் நிரந்தர அமைதியை நிலைநிறுத்துவதும் எமது கடமையாகும். முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பை ஆரம்பிக்கத் தயாராகி வருகின்றனர்.
கூடுமானவரை நோன்பு ஆரம்பிப்பதுடன் இப்பிராந்தியத்தில் அமைதியையும் இயல்பு வாழ்க்கையும் உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகவுள்ளது. மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாமல் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இலங்கையர் என்ற வகையில் இதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்கள், நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினருக்கு மக்கள் அறியத்தர வேண்டும். அதேபோல் சர்வ மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
இச்சந்திப்பில் 241ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேர்ணல் விபுல சந்திரசிறியும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.
vidivelli