நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக கடந்த 22 ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவிருக்கின்ற நிலையில் முஸ்லிம் பாடசாலைகள் மாத்திரம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சின் தகவலொன்று தெரிவிக்கின்றது.
தமிழ், சிங்கள பாடசாலைகள் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதலாம் தவணை விடுமுறைக்காக மூடப்பட்டது. மீண்டும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்தது.
அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏப்ரல் 11 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணைக்காக ஏப்ரல் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து இரண்டு தடவைகள் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சிங்கள,- தமிழ் பாடசாலைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படுகின்றன.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு விடுமுறை 6 ஆம் திகதி முதல் வழங்கப்படுவதனால் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதியன்று மீள ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் இஸட். தாஜுதீன் தெரிவித்தார்.
-Vidivelli