வைத்தியசாலைக்கு ஹிஜாப் அணிந்து வருவோரை அசௌகரியப்படுத்தாதீர்கள்
சுகாதார அமைச்சு அறிக்கை மூலம் பணிப்பு
வைத்திய நிலையங்களுக்குள் பிரவேசிப்போரை அடையாளம் காண்பதற்காக முகம் திறந்த நிலையில் தலைப்பகுதி மறைத்திருந்தால் அதனை அகற்றும்படி அவர்களை அசௌகரியத்திற்குள்ளாக்க வேண்டாம் என்று சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
சகல மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், சகல மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், அரசாங்க வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள், விசேட சுகாதாரப் பிரிவு உயர் அதிகாரிகள், அமைச்சின் கீழுள்ள சுகாதார நிறுவனங்களின் தலைவர்கள், வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து வைத்திய, சுகாதார நிலையங்களின் பொறுப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
தற்போது உருவாகியுள்ள பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலையில் வைத்திய நிலையங்களுக்குள் பிரவேசிப்பவர்களை அடையாளம் காண்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். அதன்படி அரசினால் அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாகவும் எம்மால் அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகளைப் பேணும்படியும் சந்தேகத்திற்கிடமான ஒருவர் காணப்பட்டு பரிசோதனைக்குட்படும் பட்சத்தில் ஆண், பெண் வெவ்வேறாகப் பரிசோதிப்பதற்காக ஆண்/ பெண் பாதுகாப்பு பரிசோதகர்களை அமர்த்தும்படியும் அறியத் தருகிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில் முகத்தை மறைக்காது தலையை மாத்திரம் மறைத்து ஆடை அணிந்திருந்தால் அத்தகையோரை அசெகளரியத்திற் குள்ளாக்காது நடந்துகொள்ள வேண்டுமென கருணையுடன் அறியத் தருகிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-Vidivelli