நெருக்கடி நிலையில் அச்சமடைய வேண்டாம்
தைரியத்துடன் சவால்களை எதிர்கொள்ளுமாறு முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள்
உருவாகியுள்ள நெருக்கடி நிலையில் முஸ்லிம்கள் அநாவசியமாக அச்சம் கொள்ளாது தைரியமாக சவால்களை எதிர்கொள்ள வேண்டுமென முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
அண்மையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேச செயற்பாடுகள் இடம் பெற்றுள்ளமையும் முஸ்லிம்கள் பலவாறான நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமையும் கண்டிக்கத்தக்கதாகும். பொது இடங்கள், பேருந்துகள், புகையிரதம், தொழில் நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பனவற்றில் முஸ்லிம்கள் இவ்வாறான இன்னல்களையும் இனத்துவேச செயற்பாடுகளையும் சந்தித்து வருகின்றமை குறித்து எமக்குத் தகவல்கள் கிடைத்து வருகின்றன.
இன்றைய நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஒருசில தீயசக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன் தமது காழ்ப்புணர்ச்சிகளை கொட்டித்தீர்த்தும் வருவதை அவதானிக்க முடிகிறது . இதன்மூலம் இனக் குரோதங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றமை கண்டனத்திற்குரியதாகும்.
தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தவும் தீவிரவாதத்தை துடைத்தெறியவும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளுக்கு முஸ்லிம்கள் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர்.
சோதனை நடவடிக்கைகளின்போது பள்ளிவாசல்கள், புனித அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கிரந்தங்கள் எனபனவற்றின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் சில சம்பவங்கள் குறித்தும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் இலக்குவைத்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு இதன்போது இன்னல்களுக்கு உட்படுத்தப்படும் சில சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின்போது முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் இலக்கு வைக்காது ஏனைய தரப்பினர் மத்தியிலுள்ள தீவிரவாத கடும்போக்கு அமைப்புக்களையும் உள்வாங்குவதன் மூலமாகவே தேசிய பாதுகாப்பிற்கு தற்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை முழுமையாக அகற்ற முடியும் .
இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளியாக சித்திரித்து ஏனைய சமூகங்கள் மத்தியில் வீண் சந்தேகங்களை ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிடாமலிருப்பதோடு ஊடக தர்மத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டுமெனவும் வினயமாக கேட்டுக் கொள்கிறோம்.
இத்தகைய பின்னணியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் உடனடி கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு இவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நெருக்கடியான நிலையில் முஸ்லிம்கள் மனமுடைந்து எதிர்காலம் குறித்து நம்பிக்கை இழக்காது நாட்டின் சுபீட்சத்திற்கும் இன ஐக்கியத்திற்கும் தஙகளது உச்சகட்ட பங்களிப்புக்களை வழங்கவேண்டும்.
அதேநேரம், பல சவால்களுக்கும் இனத்துவேச செயற்பாடுகளுக்கும் மத்தியிலும் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம் சமூகம் மேற்கொள்ளும் இதய சுத்தியுடனான செயற்பாடுகளுக்கு ஏனைய சகோதர சமூகங்களில் இருக்கும் நடுநிலையாக சிந்திப்பவர்கள் பகிரங்கமாகத் தங்களது நல்லாதரவினை வெளிப்படுத்த வேண்டும்.
-Vidivelli