நாட்டில் தொடராக இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய ஒரு தொகை ஆயுதங்கள், வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் நேரடியாகவே இந்த பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்கள் அடங்குவதுடன் எதுவித சம்பந்தமுமின்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோரும் உள்ளடங்குகின்றனர்.
ஆரம்பக் கட்ட விசாரணைகளில் பயங்கரவாத தரப்புகளுடன் தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர். அதேநேரம் சந்தேகத்துக்கிடமில்லாத பலரும் விடுதலை செய்யப்படுகின்றனர். எனினும் நாட்டின் பல பகுதிகளிலும் பெருந் தொகையானோர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் இவர்கள் தொடர்பான சரியான விபரங்களை அறிந்து கொள்ள முடியாதுள்ளது. இதன் காரணமாக கைதாகியுள்ளவர்களுள் அடங்கியுள்ள நிரபராதிகளைக் கண்டறிய முடியாதுள்ளது.
இதற்கிடையில் நாட்டில் பரவலாக முன்னெடுக்கப்படும் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும் முறையிடப்பட்டுள்ளது. இவை தொடர்பில் பிரதமரினதும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினதும் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எவ்வாறிருந்த போதிலும் பல இடங்களில் படையினர் நாகரிகமாக நடந்து கொள்வதாகவும் இந்த சோதனை நடவடிக்கைகள் மூலம் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டிருப்பின் மன்னித்துக் கொள்ளுமாறு முஸ்லிம்களிடம் கோருவதாகவும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதேபோன்று முஸ்லிம் மக்கள் இந்த சோதனைகளுக்கு பூரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்கி வருகின்றனர். படையினருக்கு உணவு, நீர், குளிர்பானங்களை வழங்கி அவர்களது கடமையை ஊக்குவிப்பதையும் அவதானிக்க முடிகிறது.
முஸ்லிம்கள் படையினரின் கடமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முப்படை உயரதிகாரிகளும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் முஸ்லிம் சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கும் பாதுகாப்புத் தரப்பிற்கும் வழங்கும் ஆதரவு தொடர வேண்டும்.
இதற்கிடையில் முகத்தை மறைக்கும் விதமாக ஆடை அணிவதற்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் குழப்ப நிலையை தோற்றுவித்துள்ளது. காதுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஹிஜாப் அணிய முடியாதா எனும் கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இவ் வர்த்தமானியில் திருத்தத்தை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமரும் இதற்கு உறுதிமொழியளித்துள்ளார். முஸ்லிம்கள் தாராளமாக ஹிஜாப் அணியலாம் என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
எது எப்படியிருப்பினும் புர்கா மற்றும் நிகாப் தடை காரணமாக காலா காலமாக முகத்தை மறைத்து வெளியில் நடமாடிய பல பெண்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போது அவர்கள் பலவந்தமாக வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். இது அவர்களது அன்றாட கல்வி,தொழில் நடவடிக்கைகளைப் பாதித்துள்ளது. எனினும் நாட்டின் தேசிய பாதுகாப்பையும் இனங்களுக்கிடையிலான நல்லுறவையும் கருத்திற் கொண்டு இந்த தடையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகம் உள்ளதை மறுப்பதற்கில்லை. இருந்த போதிலும் பல மனித உரிமை அமைப்புகள் இந்தத் தடையை கண்டித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
ஆக இலங்கை முஸ்லிம்கள் இதுவரை முகங்கொடுக்காதளவு பாரிய சவால்களை இன்றைய நாட்களில் சந்தித்துள்ளனர். இவ்வாறாதொரு நிலைமை இதன் பின்னர் வரும் சந்ததிகளுக்கு ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாதெனில் நாம் இதனைக் கடந்து சென்றுதான் ஆக வேண்டும்.
vidivelli