நாட்டிலுள்ள 50 பன்சலைகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடாத்துவதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது என சி.ஐ.டியினரை அனுப்பி விசாரணை செய்யுமாறு கோரி மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் வெசாக் மற்றும் பொசன் பண்டிகைகளின் போது மக்களை பன்சலையில் ஒன்று கூட வேண்டாம் எனக் கோரியுள்ளதுடன் 50 பன்சலைகளைத் தாக்குவதற்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் சிறைச்சாலைக்கு வந்து தன்னைச் சந்திக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே இந்தத் தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன? யாரால் எப்போது கிடைத்தன? என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக சி.ஐ.டியினரை சிறைச்சாலைக்கு அனுப்பி அவரை விசாரிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
vidivelli