ஹிஜாப் அணிவதற்கும் வர்த்தமானியில் தடையா?
காதுகள் வெளித் தெரிய வேண்டும் எனும் வர்த்தமானியால் குழப்ப நிலை ; திருத்தம் கொண்டு வர ஜனாதிபதியை சந்திக்கிறது உலமா சபை
பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையில் முகத்திரை அணிய தடை விதித்து ஜனாதிபதியினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பகரமான சூழ்நிலையொன்று தோற்றம் பெற்றுள்ளது.
குறித்த சுற்று நிருபமானது ‘முழு முகம்’ என்பதற்கு ஒருவரின் இரு காதுகளையும் மறைக்க கூடாது என வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருப்பதால் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய முடியுமா? முடியாதா எனும் குழப்ப நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் பல பொது இடங்களுக்கு ஹிஜாப் அணிந்து சென்ற பெண்கள், மேற்படி சுற்று நிருபத்தின் அடிப்படையில் அசௌகரியங்களுக்குள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக பலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையைத் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதுடன் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, ஜனாதிபதியைச் சந்தித்து மேற்படி அரசாங்க வர்த்தமானியில் திருத்தங்களைச் செய்யுமாறு கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியூடாக உலமா சபை வேண்டியுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினாலேயே வெளியிடப்பட்டுள்ளதால் ஜனாதிபதியே இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்றும் உலமா சபை தெரிவித்துள்ளது.
vidivelli