அஷ்ஷெய்க் பஸ்லுர் ரஹ்மான் (நளீமி)
ஆசிரியர்: கள்எளிய அலிகார் ம.வி.
அவர்கள் படித்தவர்கள்.. செல்வந்தர்கள்.. நல்ல குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள்… தேசிய பங்களிப்புக்களிலும் ஈடுபட்டவர்கள். இவர்கள் எப்படித் தமது உயிரையும் அப்பாவி மனிதர்களது உயிர்களையும் பலியாக்கிய தற்கொலைக் குண்டுதாரிகளானார்கள்? துரோகிகளானார்கள்? பயங்கரவாதிகளானார்கள்? மிலேச்சர்களானார்கள்? இஸ்லாத்தில் மார்க்க விரோதிகளானார்கள்?
முஸ்லிம், முஸ்லிம் அல்லாதார் என்ற வேறுபாடின்றி எல்லாத்தரப்பினரிடமும் எழுந்துள்ள வினாக்களே இவை. இதற்கான விடையை எங்கிருந்து கண்டுபிடிக்கலாம்? அல்குர்ஆனிலிருந்தா..? அல்ஹதீஸிலிருந்தா..? அல்லது வேறு சமய நூல்களிலிருந்தா..? அவற்றில் விடை இல்லாமல் இருக்காது. ஆனால் அவை விஞ்ஞான பூர்வமானவைகள் அல்ல என்பது அறிவியல் உலகின் கருத்து.
எனவே அறிவியல் மேதைகளான இயற்பியலின் தந்தை அல்பர்ட் ஐன்ஸ்டீன், உளவியலின் தந்தை சிக்மண்ட் பிராய்ட் ஆகியோரின் கோட்பாடுகளிலிருந்து விடைகாண முடிகிறதா என நோக்குவோம்.
“சற்றுத் தூண்டிவிட்டால் மனிதன் வெறுப்பைக் காட்டி, அழிப்பு வேலையில் ஈடுபடுவான் என்கிற அளவுக்கு இயற்கையாக மனிதனிடம் ஒரு தீவிர இயல்பு இருக்கலாம்” இது பிராய்டுக்கு எழுதிய கடிதமொன்றில் ஐன்ஸ்டீன் கூறியது. இதை பிராய்டும் ஏற்றுக் கொள்கிறார்.
“மனித இயல்புகள் இருவகையானவை: ஒன்று காத்துக் கொள்கிற வகை, மற்றையது ஆக்கிரமிப்பு அல்லது அழிப்பு வகை சார்ந்தது. இந்த இயல்புகளை, இவை நல்லவை, இவை தீயவை என்று வகைப்படுத்துவது சரியாகாது. ஏனெனில், இந்த இயல்புகள் அனைத்தும் முழுக்க முழுக்க இன்றியமையாதவை. மனித வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளும், இந்த இயல்புகளின் இணைந்த அல்லது எதிரெதிரான செயற்பாடுகளால் விளைபவையே.” இது புரைடின் கோட்பாடு.
இவ்விரு கோட்பாடுகளிலிருந்து பெறப்படும் “அழிப்பு வகை சார்ந்த இயல்புகள் தூண்டப்படுவதன் மூலம் அழித்தற் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றான்” என்ற எடுகோளினூடாக எமது பிரதான பிரச்சினைக்கான தீர்வை எட்டலாமென நினைக்கிறேன்.
தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளது நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவர்களது அழிப்பு வகை இயல்புகள் தீமைக்காகத் தூண்டப்பட்டதன் விளைவே மேற்படி நாசகாரச் செயல்களாகும் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
கல்வியறிவு, செல்வம், நல்ல குடும்பப் பின்னணி இத்தகைய பண்புடையவர்களது அழித்தல் வகை இயல்பு எவ்வாறு நன்மைக்குப் பதிலாக தீமைக்காகப் பயன்படுத்தப்பட்டன? என்பது ஆச்சரியம்தான். என்றாலும் மூளைச் சலவை மூலம் அதைச் சாத்தியப்படுத்தலாம் என்பது இறைய அறிவியல் உலகில் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.
ஒருவரை பிரத்தியேக சூழலிற்குக் கொண்டுவந்து ஒருவிடயத்தை திரும்பத்திரும்பக் கூறி, அதை நியாயப்படுத்தும் புலக்காட்சியையும் காண்பிக்கின்ற போது கூறப்பட்ட விடயத்தை நம்பிக்கையாக மாற்றிவிடலாம். இந்த உளவியல் பொறிமுறை மூலமே குறிப்பிட்ட நபர்கள் குண்டுதாரிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள்.
ISIS இஸ்லாத்தின் பெயரால் இயங்கிவரும் மர்மமான ஒரு சர்வதேசப் பயங்கரவாத அமைப்பாகும். இது இஸ்லாத்திற்கு எதிரான அமைப்பாக இருக்கலாம் என்றே சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் சந்தேகிக்கின்றனர். முஸ்லிம் இளைஞர்களை ஆயுதபாணிகளாகவும் வெடிகுண்டுகளாகவும் மாற்றுவதற்கு அவர்கள் மேற்கூறப்பட்ட உளவியல் பொறிமுறையினையே கவனமாகக் கையாள்கின்றனர்.
தவிர்க்க முடியாத நான்கு தரப்பினர்
ஒரு மதத்தையோ அல்லது ஒரு கொள்கையினையோ பின்பற்றும் மக்களிடையே நான்கு தரப்பினரைக் காணமுடியும். இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
முதல் தரப்பினர் நடுநிலைவாதிகளாகவும், இரண்டாம் தரப்பினர் மிகை ஆர்வம் உடையவர்களாகவும் மூன்றாம் தரப்பினர் தீவிரவாதிகளாகவும் நான்காம் தரப்பினர் பயங்கரவாதிகளாகவும் இருப்பர்.
இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் மத்தியில் இந்நான்கு தரப்பினரையும் எவ்வாறு இனங்காண முடியும் என்பதை பார்ப்போம்.
முதல் தரப்பினர் (நடுநிலைவாதிகள்):
இஸ்லாத்தின் அடிப்படையான விடயங்களையும் அடிப்படையல்லாத உபரியான விடயங்களையும் வேறுவேறாக விளங்கி அதற்கேற்ற வகையில் மார்க்கத்தை பின்பற்றுவோர். (உம்: பெண்கள் அந்நிய ஆண்கள் முன் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதுவோர்)
இரண்டாம் தரப்பினர் (மிகையார்வமுடையோர்):
அடிப்படையான விடயங்களை அடிப்படையல்லாத விடயங்களோடு பின்னிப் பிணைத்து இரண்டையும் ஒன்றாக நோக்கும் நிலையில் மார்க்கத்தைப் பின்பற்றுவோர்; (பெண்கள் அந்நிய ஆண்கள் முன் முகத்தை மறைப்பதே சிறந்தது எனக் கருதுவோர்)
மூன்றாம் தரப்பினர் (தீவிரவாதிகள்):
தனது கருத்துக்கு முரணானவர்களை பிழையானவர்களாகப் பார்க்கும் மனநிலையுடன் மார்க்கத்தைப் பின்பற்றுவோர். (உதாரணம்: முகத்தை மறைக்காதிருப்பது தவறாகும் எனக் கூறுவோர்)
இந்த மூன்றாம் தரப்பினர்களது நிலைதான் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான வாயில். சமூகத்தைப் பிளவுபடுத்தும் முதல் வாக்கியம். இஸ்லாமியப் பரிபாசையில் இது ‘அல்உலுவ்வு பித் தீன்’ (மார்க்கத் தீவிரவாதம்) என அழைக்கப்படுகிறது.
முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்நிலையை நினைத்துப் பயந்தார்கள். முஸ்லிம் சமூகத்தை எச்சரிக்கை செய்தார்கள். முன்னைய சமுதாயங்களுக்கும் அழிவின் வாயிலாக இருந்தது இதுதான் என்று விளக்கினார்கள்.
நான்காம் தரப்பினர் (பயங்கரவாதிகள்):
மாற்றுக் கருத்துடையோரை எதிரிகளாகவும் அழிக்கப்பட வேண்டியவர்களாகவும் பார்க்கும் மனநிலையுடன் மார்க்கத்தைப் பின்பற்றுவோர் ( உதாரணம்: முகத்தை மறைக்காத பெண்கள் பாவிகள் எனக் கருதுவோர்)
இஸ்லாமியப் பரிபாசையில நான்காம் தரப்பினரின் நிலை குப்ருடைய நிலை என அழைக்கப்படுகிறது. மாற்றுக் கருத்துடையோரை எதிரிகளாகப் பார்ப்பவன் காபிரென அழைக்கப்படுகின்றான். அவன் முஸ்லிமாக இருந்தாலும் சரி முஸ்லிமாக இல்லாவிட்டாலும் சரி. “நீங்கள் எனக்குப் பின் காபிர்களாக மாற வேண்டாம்” என்று நபியவர்கள் இதனையே சுட்டிக்காட்டினார்கள். அவ்வாறானவர்கள் “வில்லில் இருந்து அம்பு வெளியேறுவது போன்று இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுகிறார்கள்” என்று எச்சரித்தார்கள்.
இனம், மதம், அரசியல், அறிவியல் என எல்லாத் துறைகளிலும் இந்நான்கு தரப்பினரும் உருவாவதற்கு இடம்பாடுண்டு. அறிவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டோரிடையே மத நம்பிக்கைகளுக்கு எதிரான பயங்கரவாத இயல்புடையவர்கள் தோன்றியமை இதற்கு உதாரணமாகும். சடவாத கம்யூனிஸ சித்தாந்தங்களுள் ஒருசாரார் காட்டுமிராண்டித்தனமாக வணக்கஸ்தலங்களையும் மத நம்பிக்கையாளர்களையும் அழித்தமை ஐரோப்பாவின் கறைபடிந்த வரலாறாகும். இனக்கலவரங்களும் மதக்கலவரங்களும் அரசியல் போராட்டங்களும் தோன்றுவதற்கு நான்காம் தரப்பினரது மனநிலையே காரணமாகும்.
தீவிரவாத மற்றும் பயங்கரவாத நிலைக்கு வருகின்ற அனைத்துத் தரப்பினரும் பாரபட்சமின்றித் தடுக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்.
புரொய்டின் கோட்பாட்டினை நடைமுறை வடிவில் காண்போமாயின் நான்காம் தரப்பினரிடையே இருக்கும் காத்துக் கொள்ளும் இயல்பும், அழிக்கும் இயல்பும் எப்போதும் மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்துபவைகளாகும். இவர்கள் கட்டாயம் அடக்கப்பட வேண்டும். அதற்கு மிகவும் தகுதியானவர்கள் முதல் தரப்பினர்களேயாவர்.
ஏனெனில், இவர்களிடம் காணப்படும் இயல்பான அவ்விரு பண்புகளும் மனித குலத்தை வாழ வைப்பவைகளாகும். ஆகவே அது பாராட்டப்பட வேண்டும். ஊக்கப்படுத்தப்படல் வேண்டும்.
நான்காம் தரப்பினருக்கு எதிராக முதற்தரப்பினர் மேற்கொள்ளும் நடவடிக்கையினையே இஸ்லாம் ஜிஹாத் என அழைக்கிறது. பிராய்ட் இதனை “முரட்டுப் பலத்தை நீக்கி வலுவான இலட்சியத்தைக் கொண்டுவரும் முயற்சி” என்கின்றார். (இவ்வாறான ஜிஹாதுக்காக மக்களை அழைக்கும் அதிகாரம் இஸ்லாத்தில் அரசாங்கம் ஒன்றிற்கு மாத்திரமே வழங்கப்பட்டிருக்கிறது)
முக்கியமான ஒரு வினா:
காபிர் என்ற சொல்லுக்கு பயங்கரவாதம் என விளக்கம் கொடுத்தால் ஏன் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களைக் குறிக்க காபிர் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள்?
அல்குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் கோத்திரங்களாக வாழ்ந்த மக்களிடையே பயங்கரவாதத்தன்மை கொண்ட நான்காம் பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருந்தனர். இவர்கள் கண்மூடித்தனமாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்த்ததனால் அவர்களை அல்குர்ஆன் காபிர்கள் எனக் கூறியது. இவர்களே அக்காலத்தில் அதிகமானவர்களாகக் காணப்பட்டனர். எனவே, பொதுமக்கள் மத்தியில் முஸ்லிம் அல்லாதவர்கள் காபிர்கள் என்று அழைக்கப்படும் மரபு இலகுவாகத் தோன்றியது.
ஒரு கலைச்சொல் மரபு ரீதியாக ஓர் அர்த்தத்திலும் வரைவிலக்கணப்படி இன்னோர் அர்த்தத்திலும் பிரயோகிக்கப்படுவது அறிவியல் உலகில் பொதுவானதோர் விடயம். இவ்வகையில் “காபிர்” என்ற சொல் மரபு ரீதியாக “முஸ்லிம் அல்லாதவர்கள்” என்றும்; வரைவிலக்கணப்படி “மாற்றுக் கருத்துடையோரை நியாயமின்றிக் கொல்லும் பயங்கரவாத இயல்பு காரணமாக கொலை செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள்” என்றும் பொருள் தருகின்றது.
துரதிஷ்டவசமாக காபிர் என்ற சொல்லுக்குரிய வரைவிலக்கணம் சார்ந்த கருத்தை சில முஸ்லிம்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் சில வினாக்களுக்கு பதில் கூற முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
அதைப் பரீட்சித்துப் பார்க்கவேண்டுமாயின், ஒரு முஸ்லிமிடம், அல்குர்ஆன் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லுமாறு கூறியிருக்கிறதே. அது ஏன்? என்று கேளுங்கள். அதற்கு அவர், அல்குர்ஆனில் அவ்வாறு கூறப்படவில்லை என்று உறுதியாகக் கூறுவார். காரணம் அது இறைவேதம். அதில் பிழைகளோ தவறுகளோ இருக்க முடியாது என்ற அவரது ஆழமான நம்பிக்கையாகும்.
அப்போது அவரிடம், “காபிர்களை எதிர்த்துப் போரிடுங்கள்” என்ற அல்குர்ஆன் வசனத்தை வாசித்துக் காட்டுங்கள். அவர் அதிர்ந்து தட்டுத்தடுமாறுவார். அதற்கான காரணம் அவர், முஸ்லிம் அல்லாதார் அனைவரையும் காபிர் எனக் கருதுவதுதான்.
இப்போது முஸ்லிம் அல்லாதவர்களை எதிர்த்துப் போரிட அவர் அழைக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் இருப்பதை உணர்வார். ஒன்று தனக்குத் தெரியாவிட்டாலும் அதற்கு வேறு விளக்கம் இருக்கலாம் என நினைத்து அழைப்பை நிராகரித்தல். இரண்டு அந்த அழைப்புக்குப் பதிலளித்தல். முஸ்லிம்களின் இந்த அறியாமையை சர்வதேசப் பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகள் நன்கறிந்து வைத்துள்ளார்கள்.
ISIS அமைப்பின் மூலோபாயம்
ISIS அமைப்பு மேலே கூறப்பட்ட நான்கு தரப்பினரிடையிலும் செயற்படுவார்கள். அவர்கள் நடுநிலையில் உள்ளவர்களை ஆர்வ நிலைக்கும் ஆர்வ நிலையில் உள்ளவர்களை தீவிர நிலைக்கும், தீவிர நிலையில் இருப்போரை பயங்கரவாத நிலைக்கும் கொண்டுவர எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறும்போதே முஸ்லிம் வாலிபர்கள் ஆயுதபாணிகளாக மாறுகின்றார்கள். மூன்றாம் நிலையில் இருப்பவர்களே எப்போதும் இதற்கு அவசரமாகப் பலிக்கடாவாகின்றனர். அவர்கள் தனிநபர்களாக இருந்தாலும் சரி அமைப்புக்களாக இருந்தாலும் சரியே. ISIS பயங்கரவாதிகள், தமக்குச் சார்பாக ஆட்சேர்க்கும் பணியில் ஈடுபடும்போது முதலில் குறித்த ஒரு பெயரில் அமைப்பொன்றை உருவாக்குவார்கள். மக்கள் மத்தியில் சேவையாற்றுவார்கள். அரசியல்வாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். அமைப்பைப் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்கள். யாரும் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று நினைக்க மாட்டார்கள்.
இரண்டாவதாக தீவிரமான கருத்துக்களைப் பேசுவார்கள். காபிர்களுக்கு எதிராகப் போராடும்படி தூண்டுகின்ற அல்குர்ஆன் வசனங்களை பாமர மக்கள் மத்தியில் திரும்பத் திரும்ப நினைவு படுத்துவார்கள். இப்பாமர மக்கள் “காபிர் என்பவன் முஸ்லிம் அல்லாதவன்” என்ற கருத்துடையவனாக இருப்பின் அவனில் முஸ்லிம் அல்லாதவர் பற்றிய வெறுப்புணர்வு உண்டாகின்றது.
மூன்றாவது கட்டமாக, முஸ்லிம் நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகள் தமது வியாபார நலனிற்காக மேற்கொண்டு வருகின்ற பேரழிவுகளையும் ஆங்காங்கே இனவெறியர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்த வன்முறைகளையும் மீட்டி மீட்டிக் கூறுவார்கள். அவ்வாறான காட்சிகளையும் காண்பிப்பார்கள். இதன் மூலம் காபிர்களைக் கொல்வதற்கான நியாயத்தை மனதில் தோற்றுவிப்பார்கள்.
நான்காவது கட்டமாக, தமக்கு சார்பாக இருக்கின்றவர்களை தமது அமைப்பில் இணைத்துக் கொள்வார்கள். இப்போது மாற்றுக் கருத்துடையோரை எதிர்க்கின்ற ஓர் இயக்கம் வளர்கிறது. இவர்களுக்கு வரும் சமூக எதிர்ப்பினால் இவர்கள் தனிமைப்படுகிறார்கள். தமக்கு எதிரான அனைவரையும் காபிர்கள் என்று கூறும் நிலைக்கு அவர்களைக் கொண்டுவருவார்கள்.
ஐந்தாம் கட்டமாக, தாக்குதல் நடவடிக்கைகளுக்குத் தயாராகும் நிலைக்கு அவர்களைக் கொண்டு வருவார்கள். போராட்ட காட்சிகளை காண்பிப்பார்கள். கொலை செய்தல், கொலை செய்யப்படுதல் பற்றிய அச்ச உணர்வை இல்லாமல் செய்வார்கள். உயிரைத் தியாகம் செய்வதன் மூலம் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்ற பேராசையை ஏற்படுத்துவார்கள்.
தனது உயிர் உடைமைகள் அனைத்தையும்விட அதுவே மிக்க மேலானது என்று வலிறுத்துவார்கள். இக்கட்டத்தில்தான் ஒருவர் முழுமையாக மூளைச் சலவை செய்யப்படுகிறார். இக்கட்டத்தை அடைந்தவர் ஒரு தீப்பொறி பட்டாலும் பற்றி எரியும் ஆபத்தான நிலைக்கு வந்துவிடுகின்றார். இறுதிக் கட்டளை வரும்வரை ஆவலோடு காத்திருப்பார்.
கட்டளை இடுபவர் மிகவும் உயர்மட்டத் தொடர்புடையவராக இருப்பார். முஸ்லிம் பெயர்களைக் கொண்ட காபிர்களைக் கொல்லுமாறு கட்டளையிடுவதா அல்லது முஸ்லிம் அல்லாத பெயர்களைக் கொண்ட காபிர்களைக் கொல்லுமாறு கட்டளை இடுவதா என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். எதில் தமக்கு அதிக நன்மை இருக்கிறது என்பதை உறுதி செய்தபின் கட்டளை பிறப்பிப்பார்கள். இக்கட்டளையினை ஏற்பவர்களின் நிலை மிகவும் பரிதாபமானது. இவர்கள் காபிர்கள் என்று நினைத்தவர்களை எதிர்த்துப் போரிடச் சென்றதால் இஸ்லாமியத் தீர்ப்பின்படி இவர்களே காபிர்களாக மாறுகின்றார்கள்.
ISIS அமைப்பின் தாக்குதல்கள் அனைத்துமே முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராகவுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள் பார்வையில் முஸ்லிம்களும் ஒன்றுதான். முஸ்லிமல்லாதவர்களும் ஒன்றுதான். முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களும் ஒன்றுதான். முஸ்லிமல்லாதவர்களின் வணக்கஸ்தலங்களும் ஒன்றுதான்.
இவர்களின் செயற்பாடுகளால், முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களும் அவர்களது வணக்கஸ்தலங்களும் அழிகின்றன. முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியுமான வெறுப்புணர்வு (இஸ்லாமோபோபியா) வளர்கிறது. நிச்சயமாக ISISஎன்பது முஸ்லிம்களைக் கொண்டே முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அழிக்கின்ற சர்வதேசப் பயங்கரவாதிகளின் ஒரு சூழ்ச்சித் திட்டமாகும்.
அப்பாவி மக்களை பயங்கரவாதிகளாக்கும் சர்வதேச சூழ்ச்சிதாரர்களைக் கண்டுபிடிப்பதும் அவர்களின் சூழ்ச்சித் திட்டத்திலிருந்து உலக மக்களைக் காப்பாற்றுவதும் மனித உள்ளத்தில் ஆன்மீகத்தையும் நற்பண்புகளையும் கட்டியெழுப்பும் வணக்கஸ்தலங்களைப் பாதுகாப்பதும் அரசாங்கங்களின் கடமையாகும். வேற்றுமையின்றி அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது மக்களது கடமையாகும்.
“அல்லாஹ், மனிதர்களை சிலரைக் கொண்டு சிலரைத் தடுக்காவிட்டால் (முஸ்லிம் அல்லாதவர்களின் வணக்கஸ்தலங்களாகிய) ஆலயங்களும் மடங்களும் அல்லாஹ் அதிமாக நினைவுபடுத்தப்படுகின்ற முஸ்லிம்களின் பள்ளி வாசல்களும் அழிக்கப்பட்டிருக்கும். (இவற்றைப் பாதுகாக்கும் விடயத்தில்) யார் அல்லாஹ்வுக்கு உதவி செய்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் உதவி செய்கின்றான்.” அல்குர்ஆன் (22:40)
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சரியான பாதையில் மக்களை வழிநடாத்த வேண்டிய அரசாங்கம் ஏமாற்றப்படுமாயின் நாட்டினதும் நாட்டு மக்களினதும் நிலை பரிதாபகரமானதே.
இறைவா! மனித உள்ளங்களில் அன்பையும் அவன் வாழும் உலகில் சமாதானத்தையும் ஏற்படுத்துவாயாக.
–