இந்நாட்டில் முஸ்லிம்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எல்லா சமூகங்களுடனும் இணைந்து வாழ்கிறார்கள். எப்போதும் அமைதியை விரும்புகின்ற ஒரு சமூகமாகவே முஸ்லிம்கள் அடையாளம் காணப்பட்டு வந்திருக்கிறார்கள்.
அன்று காத்தான்குடிப் பள்ளிவாசல், சதாம் ஹுசைன் கிராமம், அழிஞ்சிப்பொத்தானை, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, அக்கரைப்பற்று, மூதூர், வடபுல வெளியேற்றம் என்று முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு பூராகவும் துவம்சம் செய்யப்பட்டபோது அவர்கள் ஆயுதம் தூக்கவில்லை.
வட, கிழக்கிற்கு வெளியே மாவனெல்லையில், அளுத்கமையில், கிந்தோட்டையில், திகனயில் என்றெல்லாம் இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும் ஆயுதம் தூக்கவில்லை. இவ்வாறு அமைதியான சமூகம் என்று ஆயிரம் வருடங்களுக்குமேலாக பெயரெடுத்த ஒரு சமூகம் ஒரே நாளில் ஒரு பயங்கரவாத சமூகமாக பார்க்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
இந்த தீவிரவாத குழு தொடர்பாக இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் பிரமுகர்கள் ஏற்கனவே அரசுக்கு தகவல் வழங்கியும், தாக்குதலுக்கு முன்பதாக இந்தியா இது தொடர்பாக எச்சரித்திருந்தும் அதிகாரிகள் அசமந்தமாக இருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. சிலவேளை முஸ்லிம்கள் மீது வைத்த அபரிமித நம்பிக்கை அந்த அசமந்தத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.
இந்தப் பயங்கரவாதம் துடைத்தெறிப்பட வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். முஸ்லிம்களைப் பொறுத்தவரை தாக்குதல் நடந்த கணத்திலிருந்து இப்பயங்கரவாதிகளுக்கெதிராக குமுறிக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது ஒருமைப்பாட்டை முழுமையாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கிருந்து வந்தது தீவிரவாதம்?
இவ்வாறு அமைதியை விரும்புகின்ற ஒரு சமூகத்திற்குள் எங்கிருந்து இத்தீவிரவாதம் வந்திருக்கலாம்? ஒரு சிறு எண்ணிக்கையானவர்களாக அவர்கள் இருந்தபோதும் அதைத் துடைத்தெறிவது எப்படி என்பதை ஒரு சமூகம் என்ற ரீதியில் சிந்திக்க வேண்டியது நமது கடமையாகும். தவறின், இதனால் பாதிக்கப்படப்போவது நாம்தான்.
இந்தத் தாக்குதலின் பின்னணி தொடர்பாக பல ஊகங்கள் வெளியிடப்படுகின்றன. அரசியலுக்காக உள்நாட்டு சக்திகள் என்றும், தமது பிராந்திய கேந்திர நலனுக்காக இலங்கையில் காலூன்றுவதற்காக வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டன என்றும் ISIS என்றும் பல அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இங்கு நாம் சிந்திக்க வேண்டியது பின்னாலிருந்து இயக்கிய சக்திகள் எதுவாக இருந்தபோதும் செயற்பட்டவர்கள் நமது சமூகத்தைச் சேர்ந்தவர்களே என்பதாகும். அதனால்தான் இது குறித்து நாம் ஆவேசப்படுகின்றோம், வேதனை அடைகின்றோம்.
நோக்கமென்ன?
இயக்கியவர்களின் நோக்கம் எதுவாக இருந்தபோதும் இயங்கியவர்களின் நோக்கமென்ன? இது ஒரு சாதாரண தாக்குதல் அல்ல. இது ஒரு தற்கொலைத் தாக்குதல். இதில் ஈடுபட்டவர்கள் பணத்தாசையில் செய்திருக்க முடியாது. ஏனெனில் அவ்வாறாயின் அந்தப் பணத்தை அவர்கள் அனுபவிக்க உயிர்வாழ வேண்டுமென்றே விரும்புவார்கள். மட்டுமல்ல, இதில் ஈடுபட்டவர்கள் நன்கு படித்தவர்களும் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் என்று கூறப்படுகின்றது.
பணம் காரணமில்லையெனில் ஏதாவது ஒரு பாரிய இலட்சியம் இருந்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் தற்கொலைதாரியாகி உயிர்நீத்ததற்குப் பின்னால் தமது சந்ததியினருக்கென்று ஒரு நாடு என்கின்ற இலட்சியம் அவர்களுக்கிருந்தது. அந்த இலட்சியத்திற்கு முன்னால் அந்த உயிர் அவர்களுக்கு ஒரு தூசாகப்பட்டது.
முஸ்லிம்களுக்கு அவ்வாறு ஓர் இலக்கு, இலட்சியம் இருக்கின்றதா? நிச்சயமாக இல்லை. இருப்பது சாத்தியமுமில்லை. அவ்வாறாயின் அவர்களை இந்த நிலைமைக்கு கொண்டுசென்றது எது?
யுத்தம் நிறைவுபெற்றதும் பேரினவாதம் துரதிஷ்டவசமாக முஸ்லிம்களை நோக்கித் திரும்பியது உண்மை. அது சில வாலிபர்களை விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளியிருக்கலாம். அப்பொழுது அமைதியாக இருந்துவிட்டு இப்பொழுது இத்தற்கொலைத் தாக்குதலை நடாத்தி அடைய முற்பட்டதென்ன? குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என்றுமே இலங்கையில் இனமுரண்பாடு இருந்ததில்லை அந்நிலையில் இத்தாக்குதல் ஏன்? இதைப் பற்றி சிந்திப்பது நமது கடமையில்லையா?
இங்கு ஒன்று புரிகிறது. அவர்கள் உள்ளத்தில் விரக்தி இருந்திருக்கலாம். அது முஸ்லிம்களுக்கெதிரான இலங்கை நிகழ்வுகள் மாத்திரமல்ல; சர்வதேச நிகழ்வுகளாகவும் இருக்கலாம். ஆனாலும் அவர்களின் உயிர்களை இழந்து அடையமுற்பட்டது பணமுமல்ல; தனி நாடுமல்ல; என்றால் அவர்களது இலக்கு மறுமை விமோசனமாகத்தான் இருக்கமுடியும். எனவே, அவர்கள் மறுமையின் ஆசையினை ஊட்டி “மூளைச் சலவை” செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. இதற்காக மார்க்கம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சாய்ந்தமருதில் உயிரிழந்த தற்கொலைதாரிகளும் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் மறுமையைப் பற்றியும் சுவர்க்கத்தைப்பற்றியுமே பேசுகிறார்கள். தனது மனைவி, பிள்ளைகளையும் கூடவே அழைத்துவந்து உயிர்ப்பலி கொடுத்தால் அவர்களுக்கும் சுவர்க்கம் கிடைக்கும் என்று நம்புகின்ற அளவு மூளைச்சலவை நடைபெற்றிருக்கிறது.
வெறுமனே ஒருவனைக் கூட்டிவந்து, முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கிறது நீ தற்கொலைதாரியாக மாறி இவர்களைக் கொல்லு, உனக்கு சுவர்க்கம் இலகுவாக கிடைக்கும் என்றால் அவ்வளவு இலகுவாக அவன் தன் உயிரைத் தியாகம் செய்ய முன்வந்துவிடுவானா? நிச்சயமாக இல்லை.
முதலாவது, அவனிடத்திலும் ஏதோ ஒருவகை தீவிர சிந்தனை இருக்கவேண்டும். அந்த சிந்தனை வெறும் உலகத்தோடு தொடர்புடையதாக இருந்தால் அவன் உலக இலட்சியத்தின் மூலம்தான் மூளைச் சலவை செய்யப்பட்டு தற்கொலைதாரியாக மாற்றப்படலாம். இங்கு அடைவதற்கு விடுதலைப் புலிகளைப் போல் உலக இலட்சியம் இல்லாதபோது அது மறுமை இலட்சியமாகத்தான் இருக்கவேண்டும்; அதற்கு மார்க்கம் அடிப்படையாக இருக்க வேண்டும் என்றால் அவனிடம் மார்க்க விடயத்தில் தீவிர சிந்தனை இருக்கவேண்டும்.
மார்க்க விடயத்தில் தீவிர சிந்தனை உள்ளவனை மறுமையின் ஆசையைக்காட்டி மூளைச்சலவை செய்வது இலகுவாக இருக்கும். ஏனெனில் ஏற்கனவே அவனது மார்க்கரீதியான தீவிர சிந்தனை என்பது பாதி மூளைச் சலவையாகும். அந்தப் பாதி மூளைச்சலவையில் இருப்பவனை தீயசக்திகள் சில சுயநல முஸ்லிம்கள் மூலமாக ஆயுத கலாசாரத்தை நோக்கித் திருப்புவதற்கு மிகுதிப் பாதி மூளைச் சலவையை செய்வதற்கு மறுமையின் ஆசையை ஊட்டலாம்.
இங்கு இருக்கின்ற அடிப்படை விடயம் என்னவென்றால் அவன் தெளிவாக சிந்திக்க முடியாதவன் என்ற அவனது பலவீனம்தான் அவனை ஏற்கனவே மார்க்கரீதியான தீவிர சிந்தனையை நோக்கி பாதி மூளைச்சலவைக்குட்பட உதவியது.
அவ்வாறு ஏற்கனவே பாதி மூளைச்சலவையில் இருப்பவர்களுள் சிந்தனைப் பலவீனத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் சிலரை அதே மார்க்கத்தையும் மறுமையையும் சொல்லி பயங்கரவாதியாக மாற்றப்படுகிறது. அடுத்தவர்களைக் கொலைசெய்து தானும் தற்கொலை செய்தால் தனக்கு எவ்வாறு சுவர்க்கம் கிடைக்கும் என்றெல்லாம் அவன் அமைதியாக உட்கார்ந்து சிந்திக்குமளவுக்கோ அல்லது மார்க்க அறிஞர்களிடம் வினவுவதற்கோ முடியாத அளவு ஒரு வகைச் சிந்தனை போதை அவனுக்கு ஏற்றப்படுகின்றது.
எனவே, சுருக்கம் என்னவென்றால் பயங்கரவாத நோக்கமோ, ஆயுதம் தூக்கும் நோக்கமோ இல்லாமல் வேறு வேறு காரணங்களுக்காக மார்க்கத்தில் கடும்போக்குவாத சிந்தனையை நோக்கி பாதி மூளைச்சலவை செய்யப்பட்ட சிந்தனைப் பலம் குறைந்தவர்களுக்குள்ளிருந்துதான் இவ்வாறான பயங்கரவாதிகள் உருவாக்கப்பட முடியும். அதன் விளைவை மொத்த சமூகமும் அனுபவிக்க வேண்டி வருகின்றது.
இந்தப் பின்னணியில்தான் ஆயுத நோக்கமற்ற முன்பாதி மூளைச்சலவை எவ்வாறு நம் சமூகத்தில் இடம்பெறுகிறது என்பதை மிகவும் நுணுக்கமாக நாம் ஆராயவேண்டும். இந்த முன்பாதி மூளைச்சலவை தடுக்கப்படமுடியுமானால் பின்பாதிக்கான மூளைச் சலவைக்கான சாத்தியம் மிகவும் அபூர்வமாகிவிடும்.
இந்த விடயத்தில் நாம் உணர்ச்சிகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, இயக்கக் கண்ணாடிபோடா மல் நடுநிலையாக சமூக கோணத் தில் இருந்து பார்த்தால் மட்டும் தான் உண்மை புரியும். இந்த முதல் பாதி மூளைச் சலவைதான் இயக்க வாதத்துடன் தொடர்புபட்டது. எனவே, இயக்கவாதம் தொடர்பாக சற்று ஆழமாக ஆராயவேண்டும்.
இயக்கவாதம்
இஸ்லாம் 1400 வருடங்களுக்குமுன் தோன்றி இந்த உலகமெலாம் வியாபித்திருக்கின்றது. இஸ்லாம் இவ்வாறு வளர்ந்தது இயக்கங்கள் மூலமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இயக்கங்கள் தோன்றியது பிந்திய காலத்திலாகும். இயக்கங்கள் என்று தோன்ற ஆரம்பித்ததோ அன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவுகளும் ஆரம்பித்தன என்பது வரலாற்று உண்மையா? இஸ்லாம் வளர்ந்ததென்பது வரலாற்று உண்மையா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
காலம் செல்லச்செல்ல இயக்கங்கள் அதிகரித்து இன்று எத்தனை இயக்கங்கள் நமது இந்த சிறிய நாட்டிலேயே இருக்கின்றன; என்று நமக்கே தெரியாத அளவு அதிகரித்திருக்கிறது.
சிந்தனைக்கு வேலை
இஸ்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்ற ஒருவர் ஊடாக வந்து உலகெலாம் வியாபிக்க ஆரம்பித்தது. ஆனாலும் ஒரே இஸ்லாமாகத்தான் இருந்தது. காலங்களில் சிறந்த காலமாக மூன்று காலங்களைப் குறிப்பிட்டார்கள் (ஸல் ) அவர்கள். அந்தக்காலத்தில்தான் மத்ஹபுடைய இமாம்கள் தோன்றினார்கள்.
ஹதீஸ்களின்படி காலஞ்செல்லச் செல்ல இஸ்லாத்தில் குழப்பங்கள் கூடவே வாய்ப்பிருக்கின்றன. சுருங்கக்கூறின் இன்றையைவிட நேற்று சிறந்ததாகும். நாளையைவிட இன்று சிறந்ததாகும். இதுதான் யதார்த்தம்.
தொடரும்…
-Vidivelli