மாவனெல்லை புதிய கண்டி வீதியில் நீதிமன்ற வீதி சந்தியில் நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் நான்காம் மாடியில் அமைந்துள்ள சிடி கொலேஜ் என்ற பெயரில் இயங்கி வந்த தனியார் கல்வி நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் திடீரென்று தீ பரவியிருக்கின்றது.
இந்த தீ பரவல் காரணமாக அந்தக் கல்வி நிறுவனத்தின் தளபாடங்கள், கணினிகள் மற்றும் அலுவலக உபகரணங்கள் உட்பட அனைத்தும் முற்றாக தீயில் கருகி நாசமாகியுள்ளன. இதனால் கல்வி நிறுவனத்திற்கு சுமார் 30 இலட்சம் ரூபா அளவில் இழப்பேற்பட்டிருப்பதாக நிறுவனத்தின் உரிமையாளர்களுள் ஒருவரான ஏ.எச்.எம். பர்வீஸ் தெரிவிக்கின்றார்.
இந்த தீ பரவல் சம்பவம் தொடர்பாக மாவனெல்லை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் பல கோணங்களிலிருந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீச்சம்பவம் தொடர்பாக பர்வீஸ் மேலும் தெரிவிக்கையில் கூறயதாவது: – இரவு 10.00 மணியளவில் எமது கல்வி நிறுவனத்தில் தீ பரவியிருப்பதாக தொலைபேசி அழைப்பொன்று வந்தது. உடனடியாக நான் ஸ்தலத்திற்கு வந்தபோது அங்கு தீ பற்றிக் கொண்டிருந்தது. நாம் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றோம். பின்னர் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்டதோடு அங்கு கூடியிருந்த இளைஞர்களின் உதவியுடன் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தோம் என்றார்.
இந்தக் கல்வி நிறுவனம் அமைந்துள்ள 04 ஆம் மாடியின் ஒரு பகுதியில் பரவிய தீ அதன் ஏனைய பகுதிகளுக்கும் பரவியதால் அங்குள்ள பொருட்கள் முற்றாகத் தீயில் கருகி அழிந்துள்ளன. உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த மாவனெல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவும் பிரதேசவாசிகளும் இணைந்து இரவு 11.30 மணியளவில் தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
அதனால் கட்டிடத்தின் கீழ்மாடிகளுக்கும் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டதால் பாரிய சேதம் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. மேற்படி தனியார் வகுப்பு அமைந்துள்ள கட்டிடத்தின் கீழ் மூன்று மாடிகளிலும் வர்த்தக நிலையங்கள் அமைந்திருப்பதால் மேல் மாடியுடன் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் இந்த இழப்பு தவிர்கக்கப்பட்டிருக்கின்றது.
அதே நேரம் இந்த தீ அணைக்கப்பட்ட பின்னர் அங்கு நடத்தப்பட்டுள்ள சோதனைகளின் மூலம் தனியார் வகுப்பு கட்டிடத்தின் முன்னால் நுழைவு மாடிப்படியை கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா, பொருத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து நீக்கப்பட்டு கட்டிடத்தின் அடுத்த மூலையில் சுமார் 80 அடி தூரத்தில் போடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருக்கின்றது.
அத்துடன் கமராவில் பதிவாகின்ற தகவல்களை கண்காணித்து பதிவு செய்கின்ற டீ.வி.ஆர். அகற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. அத்துடன் கட்டிடத்திற்கு மாடிப்படிகளால் ஏறி உள் நுழைகின்ற இடத்திற்கு அருகாமையில் பிரத்தியேகமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சார பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) அந்த இடத்தில் இருந்து கட்டிடத்தின் அடுத்த முனைக்கு 80 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு இடம் மாற்றம் செய்யப் பட்டிருக்கின்றது என்றும் அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
எவ்வாறாயினும் இது கட்டிடத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீயா அல்லது ஒரு நாசகார செயலாக இருக்குமா என்ற சந்தேகங்களும் எழுந்திருக்கின்றன. இந்த தீவைப்பு சம்பவம் சிசிரிவி கமராவில் பதிவாவதை தடுப்பதற்கே அதன் பிரதான பாகமான டி.வீ.ஆர். பொருத்தப்பட்டிருந்த இடத்தில் சுவரில் இருந்து இழுத்து எடுக்கப்பட்டு நீக்கப்பட்டிருக்கின்றது என்றும் உரிமையாளர் மேலும் தெரிவிக் கின்றார்.
தற்போது மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இந்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. அத்துடன் கடந்த இரண்டு தினங்களாக இங்கு வகுப்புக்கள் எதுவும் நடைபெறாததோடு கல்வி நிலையம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli