முந்தைய அரசாங்கங்களின் கீழ் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான பொதுவான அமைச்சு ஒன்றே காணப்பட்டது. எனினும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க சமயங்களுக்குப் பொறுப்பான தனித்தனி அமைச்சுக்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பாக பதவியேற்ற அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கடந்த காலங்களில் தனது மாவட்டமான கண்டியில் மாத்திரம் 50 தௌஹீத் ஜமாத் பள்ளிவாசல்களுக்கு அனுமதி வழங்கியிருக்கின்றார்.
எனினும் இவை ஜும்மா தொழுகையை நடத்துவதற்கு அவசியமான அளவு உறுப்பினர் தொகையைக்கூட பூர்த்தி செய்யாத நிலையில், ஒரு மதவழிபாட்டுத் தலமாக அன்றி அலுவலகங்கள் போன்று இயங்கி வருகின்றன. கண்டியில் மாத்திரம் 50 அடிப்படைவாத தொஹீத் ஜமாத் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சினால் நாடளாவிய ரீதியில் 400 இஸ்லாமிய அடிப்படைவாத நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இவற்றுக்கு இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சும் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருக்கின்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து நடத்தப்பட்ட தொடர்குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து இதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்திற்கு வழங்கியதுடன், அவசரகாலச் சட்டத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்தினார். அதேபோன்று பலவருடங்களுக்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பலர் விமர்சனங்களை வெளியிட்ட போதிலும், ஊரடங்கு உத்தரவினால் குற்றவாளிகள் ஒரு பிரதேசத்திலிருந்து வேறொரு பிரதேசத்திற்குத் தப்பிச்செல்வது தடுக்கப்பட்டதனால் அவர்களைக் கைதுசெய்வது இலகுவாக்கப்பட்டது. அத்தோடு தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பைத் தடை செய்வதற்கும், ஒருவரின் அடையாளத்தை வெளிக்காட்டாத வகையிலான முகத்தை மறைக்கும் ஆடைகளைத் தடை செய்வதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்நிலையில் தௌஹீத் ஜமாத் என்ற பெயரில் இயங்கும் அனைத்து அமைப்புக்களையும் தடை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆலோசனையாகும். காரணம் பெரும்பாலும் இவை பாரம்பரிய இஸ்லாமிய கோட்பாடுகளைப் பின்பற்றாமல் அடிப்படைவாதக் கருத்துக்களைப் போதிக்கின்ற அமைப்புக்களாகவே காணப்படுகின்றன. மேலும் இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு விசேட நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டு, அதனூடாக விரைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அதேபோன்று இஸ்லாமிய அறநெறிப் பாடசாலைகளாக இயங்கும் மத்ரஸா எனப்படுகின்ற பாடசாலைகளில் சிங்களமொழி கற்பிக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. இப்பாடசாலைகள் எதன்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன? யாரிடம் அனுமதிபெற்று இயங்குகின்றன? உள்ளிட்ட கேள்விகள் காணப்படுகின்றன. இந்தப் பாடசாலைகள் கல்வியமைச்சின் கீழ், அதன் பாடவிதானங்களுக்கு அமைவாக செயற்படவில்லை. எனவே இவை தொடர்பிலும் அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழான முறையான கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்.
முந்தைய அரசாங்கங்களின் கீழ் சமயவிவகாரங்களுக்குப் பொறுப்பான பொதுவான அமைச்சு ஒன்றே காணப்பட்டது. எனினும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க சமயங்களுக்குப் பொறுப்பான தனித்தனி அமைச்சுக்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பாக பதவியேற்ற அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கடந்த காலங்களில் தனது மாவட்டமான கண்டியில் மாத்திரம் 50 தௌஹீத் ஜமாத் பள்ளிவாசல்களுக்கு அனுமதி வழங்கியிருக்கின்றார். எனினும் இவை ஜும்ஆ தொழுகையை நடத்துவதற்கு அவசியமான இழிவளவு உறுப்பினர் தொகையைக்கூட பூர்த்தி செய்யாத நிலையில், ஒரு மதவழிபாட்டுத் தளமாக அன்றி அலுவலகங்கள் போன்று இயங்கி வருகின்றன. கண்டியில் மாத்திரம் 50 அடிப்படைவாத தொஹீத் ஜமாத் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சினால் நாடளாவிய ரீதியில் 400 இஸ்லாமிய அடிப்படைவாத நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இவற்றுக்கு இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சும் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருக்கின்றது.
இந்நிலையில் இவ்வாறு நாடளாவிய ரீதியில் அனுமதி வழங்கப்பட்ட அனைத்து இஸ்லாமிய அடிப்படைவாத நிறுவனங்களும் உடனடியாகத் தடைசெய்யப்பட வேண்டும் என்பதுடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஆலோசனைகளைப் பெற்று செயற்பட வேண்டும். மேலும் இந்த தௌஹீத் ஜமாத் நிறுவனங்களுக்கு பாரியளவில் நிதியுதவி வழங்குகின்ற அனைத்து அரச சார்பற்ற அமைப்புக்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோன்று தேவாலயங்களைத் தாக்கியதன் பின்னர் சிங்களவர்களும், கத்தோலிக்கர்களும் இணைந்து முஸ்லிம் பள்ளிவாசல்களைத் தாக்குவார்கள் என்றே பயங்கரவாதிகள் எதிர்பார்த்திருந்தனர். எனினும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்பட்ட விதத்தினால் நாட்டில் ஏற்படவிருந்த பாரிய அழிவு தடுக்கப்பட்டது. எனவே இத்தருணத்தில் அவருக்கு எம்முடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் என்று குறிப்பிட்டார்.
-Vidivelli