மியன்மாரில் ரொய்ட்டர் ஊடகவியலாளர்கள் பொது மன்னிப்பில் உள்வாங்கப்படவில்லை
சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு
மியன்மாரில் மேற்கு ராக்கைன் மாநிலத்தில் மனித உரிமை மீறல் தொடர்பில் தகவல் வெளியிட்டமையினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரொய்ட்டர் செய்தித் தாபனத்தின் இரு ஊடகவியலாளர்களும் விரைவில் வழங்கப்படவுள்ள பொதுமன்னிப்பில் உள்வாங்கப்படவில்லை என அவர்களது சட்டத்தரணிகள் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ஏப்ரல் மாத நடுப்பகுதி புது வருடத்தினையொட்டி இரு சுற்று ஜனாதிபதி பொது மன்னிப்பில் 16,000 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக மியன்மார் அண்மையில் அறிவித்தது.
மேலும் விடுதலைகள் இடம்பெறவுள்ளதாக அறிவித்த ஜனாதிபதி செயலகம் மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
மியன்மார் இராணுவத்தினரால் 10 ரோஹிங்ய முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை அறிக்கையிட்டதைத் தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடக்கம் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரொய்ட்டர் ஊடகவியலாளர்களான 31 வயதான வா லோன் மற்றும் 27 வயதான கியவ் ஓஒ ஆகியோர் மீது நாட்டின் உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தினை மீறியதாக மியன்மாரினால் குற்றம் சாட்டப்பட்டடிருந்தது.
ஊடகவியலாளர்கள் இருவரும் யங்கூனிலுள்ள பிரசித்தமில்லாத இன்சியின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ஹின் மஉங் ஸவ் தெரிவித்தார்.
மியன்மாரில் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் மற்றும் கிரிமினல் செயற்பாடுகளுக்கான குற்றவியல் சட்டக்கோவை ஆகிவற்றின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டவர்களே இருப்பதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள உள்துறை விவகார அமைச்சு கடந்த திங்கட்கிழமையன்று அறிவித்தது.
எவ்வாறெனினும் 2016 இல் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததில் இருந்து கடந்த மார்ச் மாதம் வரை குறைந்தது 45 அரசியல் கைதிகள் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர் என தாய்லாந்தின் மேற்கு மாயே சொட் நகரைத் தளமாகக் கொண்ட (பர்மா) அரசியல் கைதிகளுக்கு உதவும் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் 94 பேர் விசாரணைக்காகக் காத்திருக்கும் அதேவேளை 225 பேர் விசாணையினை நடத்தவுள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அரச சார்பற்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
இராணுவத்தையும் அரசாங்கத்தையும் அமைதியாக விமர்சிப்பவர்கள் தொடராக அண்மையில் கைது செய்யப்பட்டமையினை அடுத்து அமைதியான கருத்து வெளியீட்டை குற்றச் செயலாக்கும் சட்டத்தை அகற்ற வேண்டும் என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் அந்த நாட்டுப் பாராளுமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இராணுவ ஆட்சி இருந்த போது ஆங் சாங் சுகியும் தற்போதைய பல சட்டமன்ற உறுப்பினர்களும் கருத்துச் சுதந்திரத்திற்காக உரத்துக் குரல் கொடுத்தனர் எனினும் ஜனநாயத்திற்கான தேசிய லீக் அரசியல் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்த போதிலும், நடைமுறையிலுள்ள விமர்சகர்களை சிறையில் அடைக்கும் துஷ்பிரயோகச் சட்டங்களை நீக்குவதற்கோ அல்லது திருத்துவதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்தார்.
-Vidivelli