கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பூஜித் பதில் பொலிஸ்மா அதிபரானார் விக்ரமரத்ன
பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் பொலிஸ்மா அதிபர் இலங்ககோன் நியமனம்
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து,பொலிஸ் உயர் பதவிகள் தொடர்பிலான விவாதங்கள் அதிகரித்த நிலையில், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவர் நேற்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். நேற்றுவரை பொலிஸ் நிர்வாக நடவடிக்கைகளைக் கையாண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இவ்வாறு நேற்று பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
இதுவரை பொலிஸ்மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர, பதவி விலகாதபோதும் தொடர் குண்டுத்தககுதல்கள் குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரை அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். அதன் பிரகாரமே சந்தன விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர் குண்டுத்தாக்குதல்கள் குறித்த உளவுத்தகவல்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யாமை தொடர்பில் பொலிஸ்மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பில் அவரை இராஜினாமா செய்யவும் ஜனாதிபதியினால் ஏற்கனவே கோரப்பட்ட போதும், அதனை அவர் நிராகரித்துள்ளார்.
இந்நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சு, பூஜித் ஜயசுந்தரவை கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதுடன், ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் பதில் பொலிஸ்மா அதிபராக சந்தன விக்ரமரத்னவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்தார்.
இதேவேளை, பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனை ஜனாதிபதி நேற்று நியமித்துள்ளார். தொடர் குண்டுத்தாக்குதல்கள் குறித்த உளவுத் தகவல்களை கணக்கில் கொள்ளாமல் விட்டமை தொடர்பில் ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதியர்சர் விஜித் மலல்கொடவின் கீழ் அமைத்த குழுவிலும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் முக்கிய உறுப்பினராவார். இந் நிலையிலேயே அவர் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்ப்ட்டுள்ளார். இதனைவிட நேற்று பதில் சட்டமா அதிபராக சொலிசிட்டர் ஜெனரால் தப்புல டி லிவேரா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். பிரதம நீதியரசராக சட்டமா அதிபராக கடமையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய நியமனம் பெற்றதையடுத்தே இவ்வாறு பதில் சட்ட மா அதிபராக தப்புல டி லிவேரா நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli