சூடானின் உள்ளக விவகாரங்களில் எகிப்திய ஜனாதிபதி தலையிடுவதாகக் குற்றம்சாட்டி தலைநகர் ஹார்டௌமில் சிசிக்கு எதிராக நூற்றுக்கணக்கான சூடானியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பத்தாஹ் அல்-சிசி சூடானின் உள்ளக விவகாரங்களில் மூக்கை நுழைப்பதாகக் குற்றம் சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹார்டௌம் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான ஒம்டுர்மன் நகரிலிருந்து ஹார்டௌமில் அமைந்துள்ள கெய்ரோ தூதரகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
சூடானின் உள்ளக பிரச்சினைகளில் எந்த விதமான வெளிநாட்டு ‘தலையீடுகளுக்கும்’ எதிரான ‘இது சூடான், உங்களது எல்லை (மேல்பகுதியில் அமைந்துள்ள எகிப்திய நகரான) அஸ்வானுடன் முடிவடைகின்றது’ போன்ற கோஷங்களை கோஷித்தனர்.
இராணுவத் தலைமையகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது ஊர்வலத்தை முடிவுறுத்தினர்.
சூடானின் உள்ளக விவகாரங்களில் எகிப்திய ஜனாதிபதி சிசி தலையிடுவதற்கெதிரான இதேபோன்றதொரு ஆர்ப்பாட்டம் கடந்த வியாழக்கிழமையும் இடம்பெற்றது.
30 ஆண்டு காலம் ஆட்சி செய்த சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீருக்கு எதிராக பல மாதங்களாக இடம்பெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சூடான் இராணுவம் அறிவித்தது.
இரு வருட கால நிலைமாறுகாலத்தை இராணுவ நிலைமாறுகால சபையொன்று மேற்பார்வை செய்து வருகின்றது இக் காலப் பகுதியினுள் ஜனாதிபதித் தேல்தல் நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இராணுவ நிலைமாறுகால சபை மக்களின் அதிகாரங்களை சிவில் அரசாங்கத்திடம் உடனடியாக கையளிக்க வேண்டுமென சூடானின் எதிர்க்கட்சி தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை கெய்ரோவில் இடம்பெற்ற ஆபிரிக்க யூனியன் உச்சி மாநாட்டில் இராணுவ நிலைமாறுகால சபைக்கு சிவில் நிர்வாகத்திடம் அதிகாரங்களைக் கையளிப்பதற்கு மூன்று மாத காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
சுழற்சிமுறை தலைமைத்துவத்தின் அடிப்படையில் எகிப்து தற்போதைய ஆபிரிக்க யூனியன் தலைமைப் பதவியினை வகிக்கின்றது.
எகிப்தில் முதன் முறையாக ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட மொஹமட் முர்ஸியின் ஆட்சிக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு மேற்கொண்ட சதிப்புரட்சியின் மூலம் சிசி ஆட்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli