இலங்கை முஸ்லிம்கள் எந்த வடிவத்திலான பயங்கரவாதத்தினையும் ஆதரிக்க மாட்டார்கள்
காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனம்
இலங்கை முஸ்லிம்கள் எந்த வடிவத்திலான பயங்கரவாதத்தினையும் ஆதரிக்கமாட்டார்கள். அத்தோடு ஓர் அமைதியான இலங்கையை உருவாக்க என்றும் பாடுபட ஆயத்தமாக உள்ளார்கள். சமாதானத்தையும் சக வாழ்வையும் உறுதிப்படுத்துவதற்காக தோளோடு தோள் நின்று உழைக்க நாம் ஆயத்தமாக உள்ளோம் என காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் தலைவர் எம்.பி.எம். பிர்தெளஸ் (நளீமி), செயலாளர் எம்.ஏ.சி.எம். ஜவாஹிர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எம் தாய் நாடான இலங்கை தாங்கொண்ணாத பெரும் துயரை எதிர்கொண்டுள்ள ஒரு தருணம் இது. நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களுக்கு எமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும், இன்னும் சில வெளிநாட்டு அப்பாவி மக்களும் உயிரிழந்த பெரும்சோகத்தை எம் நாடு எதிர்கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்தின் கோரப்பசிக்கு ஆளாகிய அத்தனை உயிர்களையும், இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டு துன்பங்கொண்டிருக்கும் உயிர்களையும் நினைத்து, எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம். அவ்வுயிர்களுக்காகவும் அவர்களை இழந்த குடும்பத்தாருக்காகவும், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதற்காக இவ்வறிக்கையினை வெளியிடுகிறோம். சிகிச்சை பெறும் அனைவரும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறோம்.
இலங்கை முஸ்லிம்கள் எப்போதும், சமாதானத்தை விரும்புபவர்களாகவும் நாட்டிற்கு விசுவாசமானவர்களாகவும் இருந்துள்ளனர். எமது மக்கள் பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருக்கும்போது படுகொலை செய்யப்பட்டபோதும், எங்கள் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டபோதும், சொந்த நிலத்தில் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டபோதும் அவர்கள் அமைதியாகவும் சமாதானமாகவுமே எதிர்வினையாற்றியுள்ளனர். அப்போது நாங்கள் எமது நாட்டிற்கெதிராகவோ, நாட்டு மக்களுக்கெதிராகவோ செயற்படவில்லை. வன்முறையை கையிலெடுத்துச் செயற்படவில்லை.
கிழக்கில் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம்கள் கடந்த யுத்த காலங்களில் மிக இக்கட்டான, துன்பகரமான நிலைகளின் போது கூட இந்த நாட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். மட்டுமல்லாது, சகோதர பௌத்த, இந்து, கிறிஸ்தவ சமூகங்களுடன் நல்லுறவை மீள ஏற்படுத்துவதில் தாமதமின்றி செயற்பட்டார்கள் என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம்.
ஆனால், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, மட்டக்களப்பு பிரதேச கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பிரசித்த ஹோட்டல்களிலும் இடம்பெற்ற அண்மைய குண்டுத்தாக்குதல்கள் எம்மீது அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளன. நாங்கள் மிகவும் வெட்கப்படுகிறோம். ஒருபடி மேலாக, மிகச் சொற்ப எண்ணிக்கையான ஒரு சில தீவிரவாத சக்திகள் காத்தான்குடியிலிருந்தும் இப்பயங்கரவாத செயற்பாட்டில் தொடர்புற்றிருப்பதாக கேள்விப்படுகையில் ஒருவித மன உளைச்சலையும் நாம் உணர்கிறோம்.
காத்தான்குடி அதன் வரலாற்றின் எந்தக் கட்டத்திலும், இவ்வகையான தீயசக்திகளை ஏற்றுக்கொள்ளவோ, அனுமதிக்கவோ இல்லை. இத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் ஸஹ்ரான் ஹாஸிம் என்பவர் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் கல்லூரியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஒரு மாணவன். அவரது பிழையான நடவடிக்கைகள் காரணமாக அவர் கல்லூரி நிர்வாகத்தால் 2005 இல் விலக்கி அனுப்பப்பட்டார்.
அதன் பின்னர் அவர் சுயமாக தனது தீவிரவாத தூண்டல் பேச்சுக்களை நடாத்தி வந்தார். காத்தான்குடியின் மிக முக்கிய அமைப்புக்கள் அவரைக் கண்டித்து, தீவிரவாத வெறுப்புப் பேச்சை நிறுத்துமாறு வலியுறுத்தினர். இச்செயற்பாட்டைத் தொடரவேண்டாமென காத்தான்குடி மக்கள் சார்பில் அவர் மீது அழுத்தமாக வேண்டுகோள் விடுத்தனர். மேலும் அவரது பிரசார நிலையத்தில் ஒலிபெருக்கி பாவனைக்கான அனுமதி கொடுக்கவெண்டாமென்றுகூட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டன.
2017 இல் ஸஹ்ரானுடைய தீவிரப் பேச்சுக்கள் காரணமாக வெடித்த வன்முறைகள், குழு மோதல்கள் காரணமாக அவரது தீவிரவாத செயற்பாட்டு சகாக்கள் கைது செய்யப்பட்டு , மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் 6 மாதமளவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்கள். அவ்வேளையில் ஸஹ்ரான் இப் பிரதேசத்தைவிட்டு தப்பியோடி ஒளிந்திருந்தான், ஆனாலும் அண்மைய இந்த துக்ககர நிகழ்வு வரையும் அவன் கைது செய்யப்படாமலிருந்தமை கவலையளிப்பதாயுள்ளது.
மறைவில் ஓர் அடையாளம் காணப்படாத பிரதேசத்தில் இருந்துகொண்டு, தன் விஷமப்பிரசாரத்தை சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தொடர்ந்தான். நாட்டின் சமாதானத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தாக அமைவதாக அத்தகைய தீவிரவாத சிந்தனையுள்ள பேச்சுக்கள் அடையாளம் காணப்பட்டபோது, நாங்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவை குறித்து தெரிவித்திருத்தோம். எத்தனையோ முறைப்பாட்டு மனுக்கள் பல பொறுப்புவாய்ந்த சமூகத்தின் முக்கியஸ்தர்களால் அனுப்பிவைக்கப்பட்டன. ஆனாலும் அவனது செயற்பாடுகளை நிறுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. இப்படியொரு புறக்கணிப்பு நிலை, அவனைக் கைது செய்யாமை என்பவற்றை எம்மால் புரிந்து கொள்ள முடியாமலும் கவலையளிப்பதாகவும் உள்ளது.
இப்பயங்கரவாதத்தின் கடூரம் பற்றி நாங்கள் எவரும் சரியாக கணிப்பிட்டுக்கொள்ள தவறிவிட்டதன் காரணமாகவும், பயங்கரவாதிகளது மிகக் கவனமான திட்டமிடல்களையும், கூட்டுச்சேர்க்கைகளையும் எம்மால் சரியாக விளங்கிக்கொள்ளமுடியாமல் போய்விட்டதன் காரணமாகவுமே இன்றைய நிலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது என்றே நாங்கள் எண்ணுகிறோம்.
இப்போது அவன் நம் எல்லோருக்கும் ஒரு பெரும் அபாயமாய் மாறிவிட்டான். அவன் கொல்லப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது போன்ற மிலேச்சத்தனங்கள், தீவிரவாத நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இன்னும் நடைபெற்றுவிடாமல் தடுக்க நாம் மிகக் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டிய தேவையிருக்கிறது. உலகின் பல பாகங்களில் செயற்பட்டுவரும் ஒரு தீவிரவாத அமைப்பு இத்தாகுதல்களுக்கு உரிமை கோரியுள்ள நிலையில் எமக்கு இன்னும் மேலதிகமான கவனம் தேவை. இவ்வகையான அசாதாரண சூழலினை இன்னும் சில சமூக விரோத சக்திகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சமூகங்களுக்கிடையில், இன மோதல்களைத் தூண்டிவிட்டு நாட்டின் இன ஒற்றுமைக்கும் இன ஐக்கிய சகவாழ்விற்கும் தீங்கு விளைவிக்கலாம்.
பொறுப்புவாய்ந்த சிவில் சமூக நிறுவனம் என்ற அடிப்படையில் இலங்கை சமூகத்திற்கு ஒரு செய்தியைக் கூறிக் கொள்ள நாங்கள் விரும்புகின்றோம். இலங்கை முஸ்லிம்கள் எந்த வடிவத்திலான பயங்கரவாதத்தினையும் ஆதரிக்கமாட்டார்கள். அத்தோடு ஒரு அமைதியான இலங்கையை உருவாக்க என்றும் பாடுபட ஆயத்தமாக உள்ளார்கள். சமாதானத்தையும் சக வாழ்வையும் உறுதிப்படுத்துவதற்காக தோளோடு தோள் நின்று உழைக்க நாம் ஆயத்தமாக உள்ளோம்.
இன்று அவதியுறுகின்ற எமது கிறிஸ்தவ சகோதரர்களின் இன்றைய மனோநிலை அவர்களுடைய வலிகளை நாங்கள் நன்கு உணர்ந்து கொள்கிறோம். மரணித்தவர்களினது குடும்பங்களுக்காகவும் தற்போது வைத்தியசாலைகளில் முடங்கிக் கிடக்கின்ற சகோதரர்களுக்காகவும் இறைவனை வேண்டுகின்ற அதேவேளை, கிறிஸ்தவ சமூகம் இத்தகைய இக்கட்டான நிலையிலும் கூட தனது சமூகக் கட்டுக்கோப்பையும் உயரிய மனிதப் பண்புகளையும் விட்டுக் கொடுக்கவில்லை என்பதை நன்றியுடன் அவதானிக்கின்றோம்.
vidivelli