பள்ளிவாசல்களை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு பள்ளிவாசல் நிர்வாகங்கள் பாதுகாப்பு பிரிவினருடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும், பார்சல்கள் பள்ளிவாசலுக்குள் கொண்டு வரப்படுவது தடை செய்யப்பட வேண்டுமெனவும் கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வேண்டுகோளை கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் விடுத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட பள்ளிவாசல்கள் தீவிரவாதிகளால் தாக்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அரச உளவு பிரிவினர் எச்சரிக்கை விடுத்ததையடுத்து பள்ளிவாசலுக்கு ஜும்ஆ தொழுவதற்கு வருகை தந்தவர்கள் ஒவ்வொருவராக பரிசோதிக்கப்பட்டே பள்ளிவாசல்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களில் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிங்க பாராட்டுத் தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமை சீராகாதுவிடின் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் இவ்வாறான நடவடிக்கைகளைத் தொடரவுள்ளோம். வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களில் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தொண்டர்கள் ஜும்ஆ தொழுகையை தொழாது ஜும்ஆ தொழுகை நடந்து முடிந்தவுடன் ளுஹர் தொழுகையையே தொழுதனர்.
பள்ளிவாசல்களுக்கு வருபவர்கள் குழுக்களாக கூடி நின்று பள்ளிவாசல் வளாகத்தில் கதைத்துக் கொண்டிருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஒவ்வோர் தொழுகையின் பின்பும் பள்ளிவாசல்கள் பூட்டப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளோம். இந்த ஏற்பாடு பல பள்ளிவாசல்களில் நடைமுறைப்படுத் தப்பட்டு வருகிறது. பாதுகாப்புக்கு இது நல்லவோர் திட்டமாகும் என்றார்.
vidivelli