வன்முறை சம்பவங்களினாலும் பதற்ற சூழல் காரணமாகவும் ஏற்படக் கூடிய மனித உரிமை மீறல்களைத் தடுப்பது தமது பிரதான கடமையாகும் என்று தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்காக சட்டத்தினால் அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனமாக பொலிஸ் திணைக்களம் திகழ்கின்ற போதும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு , பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதல்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது அதிர்ச்சியடைந்துள்ளது. தமது கடமையை ஆற்றும் அதே வேளையில் உயிர்நீத்த காவல்துறை அதிகாரிகளை கௌரவத்துடன் நினைவு கூருவதுடன் உங்களுக்கும் ஏனைய சக காவல்துறை அதிகாரிகளுக்கும் உயிர்நீத்த அதிகாரிகளின் குடும்பத்தவர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இத்தாக்குதல்களின் விளைவாக ஏற்படக் கூடிய சவால்களை கருத்திற்கொள்ளும் போது ஆணைக்குழுவின் அபிப்பிராயத்தில் மதங்களுக்கிடையேயான பிரிவினை மற்றும் அதன் காரணமாக ஏற்படும் வன்முறைகளைத் தடுத்தல், சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை பேணல் என்பனவே முக்கியமானதாகும். எனவே இந்த வன்முறை சம்பவங்களினாலும் பதற்ற சூழல் காரணமாகவும் ஏற்படக்கூடிய மனித உரிமை மீறல்களைத் தடுப்பதே எமது ஆணைக்குழுவின் பிரதான கடமையாகும்.
மதங்களுக்கிடையேயான பிரிவினை வாதத்தை தடுக்கும் நோக்கில் சமூகங்களுக்கிடையேயான தொடர்பாடல் உறவுப்பாலமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயமும், பிராந்திய அலுவலகங்களும் சிவில் சமூக நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மேம்படுத்துவதற்காக நாம் ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவுள்ளோம்.
இருப்பினும் வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்காக சட்டத்தினால் அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனமாக பொலிஸ் திணைக்களம் திகழ்கின்றது.
உங்கள் கவனமானது மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக செலுத்தப்படும் என்று உறுதியாக நம்புகின்றோம்.
இந்த அசம்பாவிதத்தினை ஏற்படுத்திய குற்றவாளிகளை இனங்காண்பதற்காக விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிஸாரின் முதன்மையான கவனம் செலுத்தப்படும் என்பதனை நாம் அறிவோம். அதேவேளை சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தங்களது தனிப்பட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக நாட்டில் தற்போது உருவாகியுள்ள பதற்றமான சூழலைப் பயன்படுத்திக் கொள்ள முனைவர். அதுபோன்ற சம்பவங்கள் தற்போதுள்ள நிலைமையினை மேலும் மோசமாக்கி தேசிய ரீதியில் பாரிய அனர்த்தத்தினை உருவாக்கவல்லது.
ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு பொலிஸ் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப் பினை வேண்டுவதோடு எந்தவொரு மத ரீதியான வன்முறை சம்பவங்களை தடுப்பதற்கும் தங்கள் திணைக்களம் மிக அர்ப்பணிப் புடன் செயற்படும் என எதிர்பார்க்கின்றோம்.
vidivelli