நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்ச சூழ்நிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் பல இடங்களில் ஜும்ஆ தொழுகை நடைபெறவில்லை. அத்துடன் ஒருசில பகுதிகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜும்ஆ தொழுகை நடத்தப்பட்டது.
கொழும்பிலும் பல்வேறு நகர் பகுதிகளிலும் ஜும்ஆ தொழுகை மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சில பள்ளிவாசல்களிலேயே நடத்தப்பட்டது. அத்துடன், மாவனெல்லை, புத்தளம், பேருவளை உள்ளிட்ட பல பள்ளிவாசல்களிலும் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாமென அச்சம் வெளியிடப்பட்ட பகுதிகள் பலவற்றிலும் தொழுகை நடத்தப்படவில்லை.
இதற்கிடையில் பல தக்கியாக்களிலும் ஸாவியாக்களிலும் அன்றைய தினம் லுஹர் தொழுகை நடத்தப்பட்டதுடன், ஜும்ஆ பள்ளிவாசல் சிலவற்றில் பயான் மிகவும் சுருக்கமாக்கப்பட்டு ஜும்ஆ தொழுகை நடத்தப்பட்டது.
நகர்ப்புறங்களிலும் தாக்குதல் நடத்தப்படலாமென சந்தேகிக்கப்படும் சில பள்ளிவாசல்களிலும் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே தொழுகை நடத்தப்பட்டது. குறிப்பாக பள்ளிவாசலுக்குள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், முழு அளவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், பள்ளிவாசலுக்குள் எந்தவித பொதிகளும் எடுத்துச்செல்வதற்கான அனுமதியும் வழங்கப்படவில்லை. இதைவிட, பெருமளவானோர் சொந்த வாகனத்தில் பள்ளிவாசலுக்கு செல்வதையும் தவிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
vidivelli