நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு குருநாகல் மாநகர சபையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு முஸ்லிம் பெண்கள் புர்கா ஆடை அணிந்து வருவதற்கு தடை விதிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாநகர முதல்வர் துஷார சஞ்ஜீவ விதாரண தலைமையில் மாநகர சபையில் விசேட கூட்டம் இடம்பெற்றது. இதன்போது நகர முதல்வர் துஷார சன்ஜீவ, புர்கா தொடர்பான பிரேரணையை முன்வைத்தார். இதற்கு ஆளும் கட்சி (பொ.ஜ.பெ) எதிர்க்கட்சிகள் அனைவருமாக ஆதரவு தெரிவித்து பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அண்மையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகர சபை உறுப்பினர்கள் கைகளில் கறுப்புப்பட்டி அணிந்து சபைக்கு வந்திருந்தனர்.
இப்பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் மாநகர சபை உறுப்பினர் மொஹம்மத் றிஸ்வி கொண்டு வந்த பிரேரணையை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
குருநாகல் மாநகர சபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநகர சபை எல்லை, குருநாகல் பிரதான பஸ் நிலையம், மாநகர சபையின் கடைத் தொகுதி, மாநகர சபை பொதுச் சந்தை, நகர நூல் நிலையம் உட்பட பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து வருவது தடை செய்யப்படுவதாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சபையில் ஐ.தே. கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர் ஒருவரும், மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
vidivelli