சாய்ந்தமருது வீட்டில் உயிரிழந்தவர்கள் ஸஹ்ரானின் தாய், தந்தை, சகோதரர்கள்

மனைவியும் குழந்தையும் காயங்களுடன் உயிர் தப்பினர்

0 639

சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் வீட்டுத் திட்ட கிரா­மத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டு வெடிப்­பு­களில் சிக்கி உயி­ரி­ழந்­த­வர்கள் அனை­வரும், நாட்டின் பல பகு­தி­க­ளிலும் இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யான காத்­தான்­கு­டியைச் சேர்ந்த ஸஹ்ரான் ஹாஷிமின் குடும்­பத்­தினர் என தெரிய வந்­துள்­ளது.
இதே­வேளை இச் சம்­ப­வத்தில் காய­ம­டைந்த நிலையில் மீட்­கப்­பட்டு அம்­பாறை மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரும் இரு­வரும் ஸஹ்ரான் ஹாஷிமின் மனை­வியும் அவ­ரது குழந்­தை­யுமே என்றும் நேற்று அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர்.

இதன்­போது உயி­ரி­ழந்த 15 பேரில் ஸஹ்ரான் ஹாஷிமின் தந்தை மொஹமட் ஹாஷிம், சகோ­த­ரர்­க­ளான மௌலவி ஸைனி ஹாஷிம் மற்றும் ரிழ்வான் ஹாஷிம் ஆகி­யோரும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

அத்­துடன் ஸஹ்ரான் ஹாஷிமின் தாயார், மௌலவி ஸைனியின் மனைவி மற்றும் இரு குழந்­தைகள், ரிழ்வான் ஹாஷிமின் மனைவி மற்றும் இரு குழந்­தைகள், ஸஹ்ரான் ஹாஷிமின் சகோ­தரி, அவ­ரது கணவர் மற்றும் அவர்­க­ளது ஒரு குழந்தை ஆகி­யோரும் இதில் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இக் குண்டு வெடிப்புச் சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­தற்கு சற்று முன்னர் ஒளிப்­ப­திவு செய்­யப்­பட்ட வீடியோ காட்சி ஒன்று தற்­போது சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இதில் தோன்­றுவோர் ஸஹ்ரான் ஹாஷிமின் தந்தை மொஹமட் ஹாஷிம், சகோ­த­ரர்­க­ளான மௌலவி ஸைனி ஹாஷிம் மற்றும் ரிழ்வான் ஹாஷிம் ஆகியோர் ஆவர். ரிழ்வான் ஹாஷிமின் உடலில் தற்­கொலைக் குண்டு அங்கி பொருத்­தப்­பட்­டுள்­ளது. முன்­ன­ராக நீண்ட தாடியைக் கொண்­டி­ருந்த மௌலவி ஸைனி, இவ் வீடி­யோவில் முழு­மை­யாக முகச் சவரம் செய்த நிலையில் தோன்­று­கிறார். அவர் தனது ஒரு கையில் ஏகே47 துப்­பாக்­கி­யையும் மறு கையில் தனது மக­னையும் வைத்­தி­ருந்­த­வாறு குறித்த வீடி­யோவில் தோன்றி பேசு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

ஏலவே குண்டுப் பரி­சோ­தனை ஒன்றின் போது தற்­செ­ய­லாக குண்டு வெடித்­ததில் ரிழ்வான் ஹாஷிம் படு­கா­ய­மைந்­ததில் அவ­ரது கை விரல்கள் மற்றும் கண், காது ஆகி­யவை பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக பொலிசார் கூறி­யி­ருந்­தனர். இந் நிலையில் அவர் தோன்­றிய வீடி­யோ­விலும் அவ­ரது இரு கைக­ளி­னதும் பல விரல்கள் அகற்­றப்­பட்­டி­ருப்­பதும் கண் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பதும் தெளி­வாகத் தெரி­கி­றது.

இதே­வேளை இவ்­வீட்­டினுள் இடம்­பெற்ற மூன்று குண்டு வெடிப்­பு­களில் சிக்கி உயி­ரி­ழந்­தோரில் பலரின் உடல்கள் முற்­றாகக் கருகி அடை­யாளம் காண முடி­யா­த­வாறு பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந் நிலையில் இவ்­வு­டல்­களை அடை­யாளம் காண்­ப­தற்­கான மருத்­துவ பரி­சோ­த­னைகள் அம்­பாறை மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் இடம்­பெற்­று வருகின்றன.

இதற்­கி­டையில் இச் சம்­ப­வத்­தின்­போது குறித்த வீட்­டி­லி­ருந்து இருவர் காய­ம­டைந்த நிலையில் மீட்­கப்­பட்­டனர். அவர்கள் இரு­வரும் ஸஹ்ரான் ஹாஷிமின் மனை­வி­யான ஹாதியா மற்றும் மக­ளான பாத்­திமா ருஸைனா( வயது 4 ) என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி படு­கா­ய­ம­டைந்த நிலையில் அம்­பாறை மாவட்ட வைத்­தி­ய­சா­லையின் அதி­தீ­விர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கிறார். குழந்தை சிறு காயங்­க­ளுடன் மீட்­கப்­பட்­டுள்ள நிலையில் அதே வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­கி­றது. குண்டு வெடிப்பு இடம்­பெற்ற வீட்­டி­லி­ருந்து இக் குழந்­தையை இரா­ணு­வத்­தினர் மீட்டு வரு­கையில் ”வாப்பா… வாப்பா…” என அழும் காட்சி பல­ரது உள்­ளங்­க­ளையும் உறைய வைத்­துள்­ளது.

காய­ம­டைந்த குறித்த இரு­வரும் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் குழந்­தைதான் என்­பதை அவ­ரது சகோ­த­ரி­யான மத­னியா ஹாஷிம் நேற்று உறு­திப்­ப­டுத்­தினார்.

ஸஹ்ரான் ஹாஷிமின் குடும்­பத்­த­வர்கள் 16 பேர­டங்­கிய குழு­வினர் கடந்த 18 ஆம் திகதி முதல் காத்­தான்­குடி பிர­தே­சத்­தி­லி­ருந்து வெளி­யேறி மறைந்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந் நிலையில் சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் கிரா­மத்­தி­லுள்ள வீடொன்றில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான முறையில் பலர் தங்­கி­யி­ருப்­ப­தாக பொது மக்கள் வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து படை­யினர் அங்கு மேற்­கொண்ட சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்­கை­யின்­போதே இவர்கள் தம்­மி­ட­மி­ருந்த குண்­டு­களை வெடிக்க வைத்து தம்­மைத்­தாமே மாய்த்துக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இச் சம்­ப­வத்தில் ஸஹ்­ரானின் குடும்­பத்தைச் சேர்ந்த நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் ஆறு சிறு­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். இச் சம்பவத்தில் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட சமயம் உயிரிழந்த ஆணின் சடலம் யாருடையது எனும் தகவல் நேற்று மாலை வரை உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையில் குருநாகல் மாவட்டத்தின் கெகுணகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியின் வீட்டில் நேற்றைய தினம் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரது குடும்பத்தினரும் பொலிசாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.