மாவனெல்லை சிலை தகர்ப்பு விவகாரத்தில் தலைமறைவாகியிருந்த சாதிக் , ஷாஹித் கைது
தற்கொலை குண்டுத் தாக்குதலுடனும் தொடர்பு என சந்தேகம்
மாவனல்லை, குருணாகல் பொதுஹர சிலை உடைப்பு விவகாரங்கள் மற்றும் கடந்த வாரம் நாட்டை உலுக்கிய தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களை கம்பளை பொலிஸார் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்துவந்த மாவனெல்லை தெல்கஹகொடை பகுதியைச் சேர்ந்த முஹம்மத் இப்றாஹிம் சாதிக் அப்துல்லாஹ் மற்றும் முஹம்மத் இப்றாஹிம் சாஹித் அப்துல்லாஹ் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஏலவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மௌலவி இப்ராஹீமின் புதல்வர்களாவர்.
சந்தேகத்திற்கிடமான வேனொன்று பயணிப்பதாக அநுராதபுரம் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி சூலானி வீரரட்னவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கமைய தொலைபேசியை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த வேன் நாவலப்பிட்டி கொரக்கோயா பொல்வதுரையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாகனத்தில் சாரதியாக செயற்பட்டவரென சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 23 வயதுடைய இளைஞர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளையடுத்து, தனது வேனில் பயணம் செய்த இருவரையும் கம்பளை நகரில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இறக்கிவிட்டதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் கம்பளை சாலியவல விகாரைக்கு அருகில் பூட்டப்பட்ட வர்த்தக நிலையமொன்றினுள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனையடுத்து வர்த்தக நிலையத்தை சுற்றி வளைத்த பொலிஸார் மூன்றாம் மாடியில் மறைந்திருந்த நிலையில் இரு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்கமைய சந்தேக நபர்கள் மாவனல்லை குருணாகல் பொதுஹர சிலை உடைப்பு விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் ஒருவர் சிரியாவுக்கு சென்று வந்தவர் என்றும் இச்சந்தேக நபர்களில் ஒருவர் கம்பளையில் பிரபல பாடசாலையில் சில மாதங்கள் தொண்டர் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
இவர்கள் கம்பளையில் உள்ள வீடொன்றின் மூன்றாம் மாடியில் இரகசிய வகுப்புக்களை நடாத்தி வந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இச்சந்தேக நபர்களிடமிருந்து வேன் ஒன்றும் இராணுவ சீருடைகளுக்கு ஒப்பான உடைகளும் சமயப் புத்தகங்கள், சாவிப் பை என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இச்சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி புரிந்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சுற்றிவளைப்பை கம்பளை பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
vidivelli