கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், வெல்லம்பிட்டியிலுள்ள செப்புத் தொழிற்சாலையொன்றில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த செப்பு தொழிற்சாலை, அண்மையில் தற்கொலைத் தாக்குதலொன்றை மேற்கொண்ட இன்ஸாப் அஹமட் என்பவருக்கு சொந்தமானது என வெல்லம்பிட்டி பொலிஸார் விசாரணைகளில் உறுதிப்படுத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளுள் ஒருவரான இன்ஸாப் அஹமட் கண்டியைச் சேர்ந்தவர் என்றும், அவர் கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்றவர் என்றும் இன்ஸாபின் (மனைவியின் சகோதரன்) மைத்துனரான அஷ்கான் அலாம்தீன் பிரித்தானியாவின் ‘டெய்லி மெயில்’ இணையத்தளத்துக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அஷ்கான் அலாம்தீன் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”அவர் எமது குடும்பத்தை நாசம் செய்தது மாத்திரமல்லாது பல மக்களின் வாழ்க்கையையும் வீணடித்துள்ளார். அவரது திட்டம் தொடர்பில் நாம் அறிந்திருக்கவில்லை. அது தெரிந்திருந்தால் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருப்போம். இந்தத் தாக்குதலை இன்ஸாப் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. அவரது சகோதரனான இல்ஹாமும் இதில் தொடர்புபட்டுள்ளார். அவர்கள் குறித்து நாம் வருத்தப்படவில்லை. கோபம் மாத்திரமே உள்ளது. அவர்கள் எல்லா வசதிகளுடனும் வாழ்ந்தவர்கள்” என்றார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”இந்த சம்பவத்துக்கு முன்னரான நாட்களில் எனது மைத்துனரான இன்ஸாப், சாம்பியா நாட்டுக்கு தொழில் நிமித்தமாக செல்வதாக தனது மனைவியிடமும் கூறியுள்ளார். அதற்கமைய, அவரது மனைவி, இன்ஸாபை கடந்த வெள்ளிக்கிழமை (19) விமான நிலையத்துக்கு சென்று வழியனுப்பி வைத்துள்ளார். அன்றைய தினம் மாலை 6.50 மணிக்கு புறப்படவுள்ளதாக கூறப்படும் விமானத்தில் பயணமாவதற்கே அவர் சென்றதாக தெரிவித்தார்.
அதன்போது, வழமைக்கு மாறாக அவர் தனது மனைவியை ஆரத்தழுவி, நீ தைரியமாக இருக்க வேண்டும் எனக்கூறி விடைபெற்றுள்ளார். பின்னர் தற்கொலை குண்டுதாரியான இன்ஸாப் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு அதாவது குண்டுவெடிப்புக்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன், தொலைபேசியில் தனது மனைவியை தொடர்புகொண்டு, பேசியுள்ளார்” என அலாம்தீன் தொடர்ந்தும் தெரிவித்தார்.
இதன்போது, அவர்மேலும் தெரிவிக்கையில், ”இந்த தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட இனஸாப் அஹமட், 9 சகோதர, சகோதரிகளை கொண்டுள்ள அதேவேளை, அவரது தந்தை இலங்கைக்கு பலசரக்கு பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் வர்த்தகரொருவராவார்.
இந்தத் தாக்குதலின் பின்னர், இன்ஸாபுக்கு சொந்தமான கொழும்பு, வெல்லம்பிட்டியிலுள்ள செப்பு தொழிற்சாலை சோதனையிடப்பட்டதுடன் அங்கிருந்த முகாமையாளர், மேற்பார்வையாளர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் என 9 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தத் தொழிற்சாலையை சோதனையிட்ட பொலிஸார், குறித்த தொழிற்சாலையில் இன்ஸாப் உள்ளிட்ட தற்கொலை குண்டுதாரிகளால் வெடிக்க வைக்கப்பட்ட குண்டுகளை இங்கு தயாரித்திருக்கலாம் எனவும் அதற்காக அவர்கள் ட்ரைஅஸிடோன் ட்ரைபெரொக்சைட் அல்லது அல் கொய்தா அமைப்பினரால் ‘சாத்தானின் தாய்’ என அழைக்கப்படும் மூலப்பொருளை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டில் பாரிஸ் மற்றும் 2017 ஆம் ஆண்டு மென்செஸ்டரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளுக்கு இத்தகைய Triacetone Triperoxide என்ற வெடிபொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெடிபொருள் தொடர்பான விசேட நிபுணரொருவர் தெரிவிக்கையில், இவ்வகை வெடிபொருட்களால் பாரிய அழிவுகளை ஏற்படுத்த முடியும் என்றார். இந்த தொழிற்சாலையில் தற்போது மீதமாகவுள்ள இந்திய மற்றும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 12 தொழிலாளிகள் டெய்லி மெயில் இணையத்தளத்துக்கு தெரிவிக்கையில், குண்டுதாரியான இன்ஸாப் அஹமட், ஒவ்வொரு நாளும் தனது வேலைத்தளத்துக்கு வந்து சுமார் 20 நிமிடங்களை மாத்திரமே அங்கு கழிப்பார் என்றனர்.
அவர்களில் பங்களாதேஷைச் சேர்ந்த தொழிலாளியொருவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இன்ஸாப் முஸ்லிம்களின் பாரம்பரிய கலாசார உடைகளை அணிபவரல்ல. தொழிற்சாலைக்கு வந்தாலும் முகாமையாளருடன் மாத்திரமே பேசுவார். அத்துடன் அவருடன் இணைந்து புகைப்படம் எடுப்பதற்கு அவர் ஒருபோதும் இடமளித்ததில்லை. அது தமது மதக் கோட்பாடுகளுக்கு அது விரோதமானது என்பார் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் டெய்லி மெயிலுக்கு தெரிவிக்கையில் ”இன்ஸாபின் வங்கிக் கணக்கில் மதிப்பிட முடியாதளவு பெருந்தொகை பணம் இருக்கிறது. இவருக்கு இவ்வளவு பணம் கிடைத்தது எவ்வாறு? வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து அவருக்கு பணம் கிடைத்திருக்கலாம் என சந்தேகிப்பதோடு அது தொடர்பில் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளோம். இது புற்றுநோய் போன்றது. இதனை வளரவிடாமல் விரைவில் அழிப்போம்” என்றார்.
இன்ஸாப் இந்தத் தாக்குதலை மேற்கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தனது சகோதரரொருவரின் வீட்டுக்குச் சென்று இரவு உணவை உட்கொண்டுள்ளார். அதன்போது, விரைவில் விநோத சுற்றுலா செல்வது தொடர்பிலும் பேசியதாக உறவினரான சகோதரரொருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அவர் எந்த வித்தியாசத்தையும் வெளிக்காட்டவில்லை. புன்னகையுடனேயே காணப்பட்டார். அவர் இவ்வாறானதொரு காரியத்தை செய்தார் என நம்பமுடியாதுள்ளது. அவரது பிள்ளைகள் நால்வரும் 8, 6, 4 மற்றும் 2 வயதுடையவர்கள் என்றார்.
தற்கொலை குண்டுதாரி இன்ஸாப் அஹமட் தனது தந்தையுடன் தெமட்டகொடவிலுள்ள அதிசொகுசு குடியிருப்பொன்றில் வசித்துவந்தார். அந்த வீட்டை கடந்த 21 ஆம் திகதி சோதனையிட சென்றபோது இடம்பெற்ற வெடிப் பிலேயே மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர் தெரிவித்தார்.
vidivelli