Q: தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் அனர்த்தங்களையடுத்து முஸ்லிம்கள் அச்சத்தில் வாழவேண்டியேற்பட்டுள்ளதல்லவா!
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் முஸ்லிம்களைத் தலைகுனிய வைத்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலளிப்பது என சிந்திக்க வேண்டியுள்ளது. முஸ்லிம்கள் இந்நாட்டில் 1200 வருடகால வரலாற்றைக் கொண்டவர்கள். இந்த வரலாற்றுக் காலத்தில் முஸ்லிம்கள் தொடர்புபட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.
ஐ.எஸ். அமைப்பு இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவோர் அமைப்பல்ல. அந்த அமைப்பின் செயல்கள் இஸ்லாத்துக்கு விரோதமானதென பலவருடங்களுக்கு முன்பே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் பிரகடனம் வெளியிட்டுள்ளன.
இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்களின் சமய வழிபாடுகள் சவால் நிறைந்ததாக அமையலாம். எமது முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா தடைசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலும்பெற்று வருகிறது. எனவே முஸ்லிம் சமூகம் அச்சத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் தீவிரவாதிகளாலே மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்த தீவிரவாத செயல்கள் மத ரீதியாக நோக்கப்படலாம். பழி தீர்க்கப்படலாம் என முஸ்லிம் சமூகம் கருதுவதால் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சர்வமத உயர்மட்டக்குழு என்பன ஒன்றுகூடி நல்லுறவினைப் பலப்படுத்தி சமாதானத்தை நிலை நிறுத்துவதற்கான திட்டங்களை வகுக்கவேண்டும்.
இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் பொறுமையாக இருக்கவேண்டும். 350 இற்கும் மேற்பட்டோர் பலியெடுக்கப்பட்டுள்ளார்கள். சுமார் 500 பேர் காயங்களுக்குட்பட்டுள்ளனர். இந்தவடுக்கள் ஆறுவதற்கு நீண்டகாலம் செல்லலாம். அதனால் முஸ்லிம் சமூகம் தாம் பொறுமையாக இருந்து தீவிரவாதத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை அவர்களுக்கு நிரூபிக்கவேண்டும். நம்பிக்கையூட்ட வேண்டும்.
Q: பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா?
பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றாலும் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு பெற்றுக்கொள்வதென்பது நடைமுறைச் சாத்தியமுள்ளதாகத் தெரியவில்லை. அரசாங்கம் வெள்ளிக்கிழமைகளிலே பாதுகாப்பு வழங்கக்கூடும். வெள்ளிக்கிழமைகளில் பாதுகாப்பு வழங்குமாறே பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்து கலந்துரையாடியபோதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நாம் எமது ஜும் ஆ பிரசங்கத்தை சுருக்கிக்கொள்ள வேண்டும். பள்ளிவாசல்களுக்குள் பார்சல்கள் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கவேண்டும். பள்ளிவாசலுக்கு புதியவர்கள் வருகை தந்தால் அது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும். பெண்கள் வீடுகளிலே தொழுகைகளை மேற்கொள்ளவேண்டும்.
நோன்பு காலத்தில் இரவு நேர தொழுகைகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் பள்ளிவாசல்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அவசியமாகும்.
Q:கொள்கை ரீதியில் முரண்பட்டுள்ள தஃவா அமைப்புகளை எவ்வாறு ஒன்றிணைக்கலாம்!
நாட்டில் பல்வேறு தஃவா அமைப்புகள் இயங்கிவருகின்றன. தஃவா அமைப்புகள் சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் பிரிந்து சென்று புதிதாக அமைப்புகளை நிறுவிக்கொள்கின்றன. இவ்வாறு பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட அமைப்பே தேசிய தெளஹீத் ஜமா அத் ஆகும்.
கொள்கை மற்றும் கருத்து முரண்பாடுகளைக் கொண்டுள்ள தஃவா அமைப்புகளை ஒன்றிணைப்பதற்கு தொடர்ந்தும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் சில அமைப்புகள் தங்கள் கொள்கைகளில் விடாப்பிடியாக இருப்பதாக அறிய முடிகிறது. என்றாலும் தஃவா அமைப்புகளை ஒன்றிணைக்கும் காலம் வந்துள்ளது. இல்லையேல் தஃவா அமைப்புகள் சட்டரீதியாக தடைசெய்யப்படும் நிலை உருவாகலாம். தீவிரவாத கொள்கை கொண்டுள்ள அமைப்புகளைத் தடைசெய்ய வேண்டும் என தற்போது உயர்மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
Q: மத்ரஸாக்கள் மீதான சந்தேகங்களை எவ்வாறு தவிர்க்க முடியும்?
தற்கொலைக் குண்டு தாக்குதல்களையடுத்து மத்ரஸாக்களிலே தீவிரவாதிகள் உருவாக்கப்படுவதாக பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் சிலரால் விவாதிக்கப்படுகிறது.
மத்ரஸாக்கள் தொடர்பான சந்தேகங்களைத் தவிர்ப்பதற்கு மத்ரஸாக்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து காட்டப்படவேண்டும். அங்கு என்ன போதிக்கப்படுகிறது என்பதை நேரில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். அத்தோடு மத்ரஸாக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றன. மத்ரஸாக்கள் ஒருகட்டுக் கோப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
ஏ.ஆர்.ஏ. பரீல்