சுமார் 300 பேரைப் பலி கொண்டு 450 பேருக்கும் மேற்பட்டோரை காயத்திற்குள்ளாக்கிய கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தொடர் குண்டுத் தாக்குதல்கள் காரணமாக தசாப்தத்தின் மிக மோசமான மனிதப் படுகொலைகளில் இலங்கை சிக்கிக் கொண்டுள்ளது. இந் நிலையில் பல தசாப்தங்களாக இரத்தம் தோய்ந்த முரண்பாடுகளிலிருந்து மீண்டுகொண்டிருக்கும் தென்னாசியாவின் முக்கியத்துவமிக்க இடத்தில் அமைந்திருக்கும் தீவு புதியதொரு பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
பிரிவினைவாத தமிழ் புலிகள் மற்றும் இரு மாக்ஸிச எழுச்சிகளோடு தொடர்புபட்ட சுமார் 30 வருட தாக்குதல்களிலிருந்து குருத்தோலை ஞாயிறு தினத்தன்று மூன்று முன்னணி தேவாலயங்கள் மற்றும் மூன்று உயர்மட்ட ஹோட்டல்களையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் அளவிலும் அமைப்பிலும் வேறுபட்டவையாகக் காணப்படுவதாக நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பினுள் உள்ளோர் தெரிவிக்கின்றனர்.
திட்டமிடல், இலக்குத் தேர்வு, கூட்டிணைப்பு மற்றும் நாட்டில் ஆழமான ஊடுருவல் என்பன ‘முன்னொருபோதுமில்லாத புதிய அச்சுறுத்தலை உணர்த்துவதாக’ நிக்கி ஏசியன் றிவியூ இணைத்தளத்திற்கு பாதுகாப்பு வட்டாரமொன்று தெரிவித்தது.
இது சாதாரண குழுவொன்றின் செயற்பாடோ குற்றக் கும்பலொன்றின் செயற்பாடோ அல்ல என சிவில் யுத்த காலத்தின்போது கொழும்பின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார். குண்டு தயாரிப்பு, இலக்குகளுக்கு அவற்றைக் கொண்டு சேர்த்தல் மற்றும் தாக்குதல் நடத்தும் நேரத் தெரிவு என்பனவற்றில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் தொடர்பு இருக்கின்றது.
ஆசியாவில் மென்மையான இலக்குகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் பரிச்சயமிக்க சர்வதேச பயங்கரவாத நிபுணர்கள் இதனை ஏற்றுக்கொள்கின்றனர்.
அதிகூடிய சேதத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்ட பயங்கரவாதத் தாக்குதல்களே இவையாகும் என ஹொங் கொங்கைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆலோசனை மையமான ‘ஐ.எஸ். ஆபத்து பயங்கரவாத நிபுணத்துவ’ அமைப்பின் தலைவரான பில் ஹைன்ஸ் தெரிவித்தார்.
இந்த அளவிற்கு தாக்குதலொன்றை நடத்துவதற்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளூர் ஆதரவு இருந்திருக்க வேண்டும். சுமார் 80 தொடக்கம் 100 பேர் இதில் பங்கேற்றிருப்பர்.
ஆனால் இதன் நோக்கம் என்ன? எனத் தெரிவித்த ஹைன்ஸ் ‘இதற்கு குறைந்தது மூன்று மாத திட்டமிடலும் நிதி வழங்கலும் தேவைப்பட்டிருக்கும்.
இது அண்மையில் நடைபெற்ற ஏதேனும் சிறிய செயற்பாடொன்றிற்கான பதில் நடவடிக்கையல்ல’ எனவும் தெரிவித்தார்.
விடைகளைக் கண்டறிவதற்கான தேடலில், தற்கொலைக் குண்டுதாரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல்களில் தொடர்புபட்டவர்கள் என உள்ளூர் முஸ்லிம் தீவிரவாதக் குழுவினைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரும் புலனாய்வு வட்டாரங்களும் சந்தேகித்து வரும் நிலையில் விசாரணையாளர்களும் அதே திசையில் தமது கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
தற்கொலைத் தாக்குதல்தாரிகளுள் ஒருவர் கொழும்பிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விசாரணையாளர்கள் குழுவொன்று வருகை தந்ததையடுத்து கொழும்பிலுள்ள குடிமனைக் கட்டடத் தொகுதியொன்றில் குண்டொன்று வெடித்ததைத் தொடர்ந்து இவ் விபரங்கள் தெரியவந்துள்ளன. இந்தத் தேடுதலின்போது மூன்று பொலிஸார் உயிரிழந்தனர்.
இக் கொலைகளைத் தடுப்பதில் இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்பு பாரிய தவறினை இழைத்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
முன்னணி தேவாலயங்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்ள தற்கொலைக் குண்டுதாரிகள் திட்டமிடுவதாக ஏப்ரல் 11 ஆந் திகதி நாட்டின் பொலிஸ் தலைமையதிகாரியினால் புலனாய்வு சமூகத்திற்கு எச்சரித்திருந்த தகவல் தெரியவந்ததையடுத்து இது தொடர்பான கருத்துக்கள் கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகத்தின் மத்தியிலிருந்தும் அரசியல் அவதானிகள் மத்தியிலிருந்தும் வெளியாகின.
முன்னதாகவே தாக்குதல் தொடர்பான தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தும் பாதுகாப்பில் தவறு நேர்ந்துள்ளது என்பதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த திங்கட்கிழமை உறுதிப்படுத்தினார்.
ஏன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது தொடர்பில் நாம் கட்டாயம் ஆராய வேண்டும். எனக்கோ அமைச்சர்களுக்கோ இது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தாக்குதலொன்று நடைபெறவுள்ளதாக ஏப்ரல் மாத முற்பகுதியிலிருந்து வதந்திகள் காணப்பட்டதாக கொழும்பில் வசிக்கும் சிலர் தெரிவித்தனர். இம் மாதம் முழுவதும் ஏதோவொன்று நடைபெறப் போகிறது என்ற வதந்தி காணப்பட்டது, மக்கள் அதனைப் பற்றி பேசினார்கள். அது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கான செயற்பாடாக இருக்கும் என்ற வகையிலும் பல கதைகள் உலாவின என சுதந்திர மனித உரிமைகள் கண்காணிப்பகமான சோசியல் ஆக்கிடெக்ட்டின் பணிப்பாளரான சிரீன் சேவியர் தெரிவித்தார்.
நாட்டின் புலனாய்வுத்துறையில் தவறு நேர்ந்தமைக்கு எச்சரிக்கை வெளியிடப்பட்ட காலமும் ஒரு காரணமாகும். அறுவடை காலத்தின் முடிவினைக் குறிக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டினையொட்டிய இலங்கையின் நீண்ட விடுமுறைக்கான ஆரம்பத்தின்போது இந்த எச்சரிக்கை வெளியாகியிருந்தது.
ஏப்ரல் 12 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையான விடுமுறைக்கான ஆயத்தத்தில் அனைவரும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டது, அப்போது ஓய்வு மனோநிலையே காணப்பட்டது என அரசியலினுள் உள்ள ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் இந்த பாதுகாப்புத் தவறின் வேர்கள் மேலும் ஆழமானவையாகவும் இருக்க முடியும். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த ஆளும் கூட்டணி அரசாங்கம் ஸ்திரத்தன்மையற்றதாகக் காணப்படும் அதேவேளை அதன் இரு பிரிவுகளும் அரசாங்கத்தை கொண்டு நடத்துவதில் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டு வருகின்றன.
நாட்டின் நிருவாகத்திற்கு தலைமைதாங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடத்தின் பிற்பகுதியில் இடம்பெற்ற தோல்வியில் முடிவடைந்த அரசியலமைப்பு சதிப்புரட்சி உள்ளடங்கலாக தொடர்ச்சியாக விக்கிரமசிங்கவை வெளியேற்றுவதற்கே முயற்சிக்கின்றார். இது இருகட்சி அரசாங்கம்.
இரு தலைவர்களும் வெவ்வேறு திசைகளுக்கு இழுக்கின்றனர் என இராஜதந்திர வட்டாரம் தெரிவித்தது.
பாதுகாப்புக் கட்டமைப்பு உள்ளடங்கலாக பணியக அமைப்பினுள் தீர்மானம் எடுத்தல் என்ற விடயம் நாட்டின் தலைமைத்துவத்தின் உச்சத்திலுள்ள அரசியல் ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் புலனாய்வு சமூகமும் 2015 ஆம் ஆண்டு சிரிசேனவினால் அதிர்ச்சித் தோல்விக்குள்ளாக்கப்படும் வரை சுமார் ஒரு தசாப்த காலம் நாட்டை சர்வாதிகாரத் தன்மையோடு ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அதிகளவில் சார்ந்தே செயற்பட்டு வருகின்றது.
சக்திமிக்க நபர் என்ற வகையிலும் உள்நாட்டு யுத்தத்தின்போது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தமிழ் புலிகளைத் தோற்கடித்த அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையிலும் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் மிக ஆழமான பிரபலத்தைக் கொண்டவராக ராஜபக் ஷ காணப்படுகின்றார். இன முரண்பாடு காரணமாக சுமார் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
முதல் தடவையாக 1970 களின் ஆரம்பத்திலும் இரண்டாம் தடவையாக 1980 களின் நடுப் பகுதியிலும் ஏற்பட்ட மாக்ஸிச எழுச்சி மிகக் கொடூரமானவையாகும். ஏமாற்றமடைந்த சிங்கள இளைஞர்கள் அரசாங்கத்தை தூக்கியெறிய முனைந்தார்கள். இரு எழுச்சிகளின்போதும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்த நாட்டின் முஸ்லிம்கள் சுமார் 10 வீத சனத்தொகையினைக் கொண்ட இரண்டாவது பெரும்பான்மை சமயத்தைச் சேர்ந்த சிறுபான்மையினராவர்.
இவர்கள் உள்நாட்டு யுத்தத்தின்போதும் எழுச்சிகளின் போதும் நேரடியாக தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை, எனினும் அண்மைய ஆண்டுகளில் சில கிறிஸ்தவ சமய நிறுவனங்கள் எதிர்கொண்டதைப்போன்று சிங்கள பெரும்பான்மை கும்பல்களால் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டது.
நாட்டின் சுமார் 70 வீதமான மக்கள் பௌத்தர்களாக இருக்கும் அதேவேளை மொத்த சனத்தொகையில் இந்துக்கள் சுமார் 12 வீதமாகக் காணப்படுகின்றனர்.
பதற்றமான சூழலின் பின்னணியில் கொழும்புக்குக் கிழக்கே அமைந்துள்ள கிராமியப் பகுதியான மாவனெல்லை போன்ற இடங்களில் சொற்ப எண்ணிக்கையான இளைஞர்கள் சிலர் அடிப்படைவாதிகளாக மாறிவருவதாக அண்மைக்கால புலனாய்வு அறிக்கைகள் எச்சரிக்கை விடுக்க ஆரம்பித்தன. எனினும் பெரும் எண்ணிக்கையிலான அடிப்படைவாத இளைஞர்கள் சர்வதேச இஸ்லாமியப் பயங்கரவாத வலையமைப்புக்களில் இணைந்துள்ளமையை உறுதிப்படுத்துவதற்கான வெளிப்படையான தொடர்புகள் எவையும் இல்லை.
பயங்கரவாத செயற்பாட்டின் அதிர்ச்சி இன்னும் மாறாதிருக்கும் நிலையில் அதன் வலி மெதுமெதுவாக குறைந்து வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் தளம்பல் நிலையில் இருக்கும் இனங்களுக்கிடையிலான சமாதானம் நின்று நிலைக்குமா என்ற கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. இந்தத் தாக்குதல்கள் மென்மையான இலக்குகளை நோக்கி மேற்கொள்ளப்பட்டவையாகும் என்பதோடு அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டவையல்ல. எனவே பதில் தாக்குதல்கள் இடம்பெறக்கூடும், அதுதான் மிகவும் கவலையளிக்கின்றது என இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.
நிக்கி ஏசியன் ரிவீவ் இணையதளத்தில் மர்வான் மாகான் மாகார் எழுதிய ஆக்கத்தின் தமிழ் வடிவம்
தமிழில் : எம்.ஐ.அப்துல் நஸார்
vidivelli