ஒரு சிலரின் கொடுமையான , கொடூரமான செயல்களுக்காக அப்பழியை எந்த ஒரு சமூகம் மீதும் சுமத்த மாட்டோம்

யாழ்ப்பாண கிறிஸ்தவ திருச்சபை அறிக்கை

0 864

இயே­சுவின் உயிர்ப்பு பெரு­விழா அன்று நடை­பெற்ற தாக்­கு­தல்கள் தொடர்­பாக யாழ்ப்­பாண கிறிஸ்­தவ திருச்­ச­பை­யினர் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்­ளனர்.

இலங்கை திருச் சபையின் வட குரு முதல்வர் வண­பிதா. சாமுவேல் ஜே. பொன்­னையா, கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் குரு­மு­தல்வர் வண­குரு. பி.ஜெ. ஜெப­ரட்ணம், தேர்தல் ஆணைக்­குழு உறுப்­பி­னரும் அங்­கி­லிக்கன் நிலை­யியற் குழு உறுப்­பி­ன­ரு­மான பேரா­சி­ரியர் எஸ்.ஆர்.எச். ஹூல் , யாழ். பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞான பீடா­தி­பதி பேரா­சி­ரியர் ஜெ.பி. ஜெய­தேவன், யாழ். பல்­க­லைக்­க­ழக  சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி அகிலன் கதிர்­காமர் உட்­பட 38 பேர் ஒப்­ப­மிட்டே இவ்­வ­றிக்­கையை வெளி­யிட்­டுள்­ளனர். அதன் முழு வடிவம் வரு­மாறு:

இயே­சுவின் உயிர்ப்பின் திருநாள் நம்­பிக்கை, வாழ்வு மற்றும் வன்­முறை அற்ற உல­கத்தை கொண்­டாடும் ஒரு திருநாள்.

எனினும் 2019 இல் இவ் உயிர்ப்பு விழா பாரி­ய­ளவில் வன்­முறை மற்றும் படு­கொ­லை­களால் சீர­ழிக்­கப்­பட்­டது. இந்­நாளில் இலங்­கை­யி­லுள்ள ஆல­யங்­க­ளிலும் விருந்­த­கங்­க­ளிலும் நடை­பெற்ற கொடூ­ர­மான தாக்­கு­தல்­களை நாம் கண்­டிக்­கிறோம். உற­வு­களை இழந்த குடும்­பங்கள் மற்றும் உடல் உள காயத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்டோர், கலக்­கத்­துக்­குள்­ளாக்­கப்­பட்டோர் அனை­வ­ருக்கும் எமது ஆழ்ந்த அனு­தா­பங்­க­ளையும், எமது தோழ­மை­யையும் தெரி­விக்­கின்றோம்.

இத்­தி­ரு­நாளில் தாக்­கு­தல்­களால் கொல்­லப்­பட்­டோரை எண்ணி துய­ருறும் நாம், இந்த நாட்டில், பத்­தாண்­டு­க­ளுக்கு முன் நிறை­வுற்ற போரின்­போது இழக்­கப்­பட்ட (மர­ணித்த) அனை­வ­ரையும் நினை­வு­கூ­ரு­கின்றோம்.

எமது துன்­பியல் வர­லாற்றை மீள நோக்­கு­கையில், எதி­ரிகள் என நாம் கரு­தி­ய­வர்கள் தொடர்­பாக வன்­முறை மற்றும் ஆக்­கி­ர­மிப்பு பற்­றிய எமது மனப்­பாங்கில் முரண்­ப­டு­நிலைப் போக்­குகள் இருப்­ப­தையும் எதிர்­கொள்­கிறோம்.

அப்­பா­வி­களின் உயிர்­களை பறிக்கும் எவ­ரு­டைய வன்­மு­றை­யையும் நாம் நிரா­க­ரிக்­கின்றோம், இது மீண்டும் ஒரு­போதும் நடை­பெ­றக்­கூ­டாது.

இந்த திருநாள் தாக்­கு­தல்­களை கண்­டிக்கும் நாம் ‘வாழ்வை’ முன்­னு­ரி­மைப்­ப­டுத்­து­கின்றோம். அச்சம், அடக்­கு­முறை மற்றும் வன்­முறை அற்ற வாழ்­வுக்­காக நிற்க அனைத்துச் சமூ­கங்­க­ளையும் சேர்ந்த எமது சக­கு­டி­மக்கள் எல்­லா­ருக்கும் நாம் அழைப்பு விடுக்­கின்றோம். ஒரு சிலரின் கொடு­மை­யான, கொடூ­ர­மான செயல்­க­ளுக்­காக அப்­ப­ழியை எந்த ஒரு சமூகம் மீதும் சுமத்­த­மாட்டோம்.

இந்த அவ­லத்­தி­லி­ருந்து சமூக, பொரு­ளா­தார, மத மற்றும் அர­சியல் ஆதா­யத்தைத் தேடும் அனை­வ­ரையும் நாம் நிரா­க­ரிக்­கின்றோம்.

இக்­கொ­டிய குற்­றங்­களைப் பற்­றிய உண்மை வெளி­வ­ரப்­படும் போதும் நீதி வழங்­கப்­படும் வரையும் அதற்குப் பின்­னரும் அனை­வ­ரையும் பொறு­மை­யா­கவும் அமை­தி­யா­கவும் இருக்­கும்­படி கேட்டு நிற்­கின்றோம்.

எந்த சமூகத்துக்கும் எதிராக கலவரங்கள் அல்லது வன்முறைச் செயற்பாடுகள் நடைபெறாதிருக்க பாதிக்கப்படக் கூடிய நிலையிலுள்ள சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை கோரி நிற்கின்றோம். எமது துக்கம் பழிவாங்கலுக்கான ஓர் அழைப்பல்ல. மாறாக சகவாழ்வுக்கான ஓர் அழைப்பு.

vidivleli

Leave A Reply

Your email address will not be published.