இந்தியாவில் கோவையில் கைது செய்யப்பட்ட ஆறு பேர் இலங்கையில் தாக்குதல் நடத்தியோருடன் தொடர்பில் இருந்தனர்
இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு இலங்கைக்கு முன்கூட்டியே அறிவித்திருந்தது
இலங்கையில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனும் தகவலை இந்தியாவின் கோவையில் கைது செய்யப்பட்ட ஆறு பேர் மூலம் பெற்றுக் கொண்டதாகவும் அதனை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு இலங்கைக்கு அறிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அமைப்பு விசாரணையை முடித்தபின் தான், இலங்கையில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கடந்த மாதம் இந்திய உளவு அமைப்புகள் சார்பில் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு செயல்பட்டதாக கோவையைச் சேர்ந்த முகமது ஆஷிக்.ஏ, இஸ்மாயில்.எஸ், சம்சுதீன், முகமது சலாலுதீன்.எஸ், ஜாபர் சாதிக் அலி மற்றும் சாஹுல் ஹமீது ஆகியோரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) கைது செய்தது.
இவர்கள் மீது கோவையில் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தியாவில் உள்ள இந்து மதத் தலைவர்களையும், ஆர்வலர்களையும் கொலை செய்ய திட்டமிட்டிருநத்து தெரிய வந்தது.
இவர்கள் 6 பேர் மீதும் என்.ஐ.ஏ அமைப்பினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏராளமான வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.
அதில் இலங்கையில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிம் குறித்த வீடியோக்களில் இருப்பதை தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்டறிந்தனர்.
இலங்கையைச் சேர்ந்த ஸஹ்ரான் ஹாஷிம், இஸ்லாமிய குடியரசை அமைக்க வேண்டி இலங்கை, தமிழகம், கேரளாவில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பிரசாரம் செய்து வந்தார் என்பதை புலனாய்வுப் பிரிவினர் விசாரணையில் கண்டுபிடித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ஐ.எஸ். அமைப்பின் சிந்தனைகள், கொள்கைகள் குறித்த தாக்கம் அதிகமாக இருந்ததையும், அது குறித்த விடயங்களை சமூக ஊடகங்களில் பரப்பி வந்ததையும் புலனாய்வுப் பிரிவினர் தெரிந்து கொண்டனர். இந்த 6 பேரும் அடிக்கடி ஸஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளதையும் புலனாய்வுப் பிரிவினர் உறுதி செய்தனர்.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணை முடிந்த நிலையில், இலங்கையில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த ஸஹ்ரான் ஹாஷிம் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் தங்களுக்கு கிடைத்த தகவல்களை முறைப்படி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினர். அவர்கள் இந்தியத் தூதரகம் மற்றும் உளவுப்பிரிவினர் மூலம் இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பி எச்சரிக்கை செய்துள்ளனர்.ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு பெற்ற அமைப்பினர் அல்லது ஐ.எஸ். அமைப்பினர் இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆதாரங்களையும் இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளனர்.
குறிப்பாக இலங்கையில் உள்ள தேவாலயங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டது.
ஆனால், இந்த எச்சரிக்கைகளை இலங்கை அதிகாரிகள் கவனக்குறைவாக எடுத்துக்கொண்டதால், மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
vidivelli