அண்மையில் இடம்பெற்றுள்ள தொடர்குண்டுத் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு உரிமை கோராதிருந்திருந்தால் இன்று நாட்டில் பலர் மீது வீண்பழி சுமத்தப்பட்டிருக்கும் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதத்தை ஆயுதம் மூலமாக மட்டுமே இல்லாதொழிக்க முடியும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து உண்மையான குற்றவாளியை கண்டறியாது அரசியல் ரீதியில் சேறுபூசும் நிலைமையே காணப்பட்டு வருகின்றது. கடந்தகால வரலாறுகளை பேசிக்கொண்டு இப்போது குற்றவாளிகளை காப்பாற்றும் அல்லது தப்பவைக்கும் நடவடிக்கைகளை கையாளக்கூடாது. யார் குற்றவாளி என்பதை போலவே எங்கு இந்த தவறு இடம்பெற்றது என்பதையும் கண்டறிய வேண்டும். அதேபோல் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இப்போது இந்த தாக்குதலுக்குப் பொறுப்புக்கூறியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இதற்கு பொறுப்புக்கூறாது இருந்திருந்தால் இன்று எமது நாட்டுக்குள் வேறு எவரோ பழியை ஏற்றிருக்க நேர்ந்திருக்கும்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு உருவாக்கப்பட்ட போது மத்திய கிழக்கில் இருந்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் இந்த அமைப்பில் இணைந்தனர். இலங்கையில் இருந்தும் பலர் இணைந்துகொண்ட தகவல்கள் இருந்தன. அதேபோல் வெளிநாட்டவருக்கு தாக்குதல் நடத்த எமது சுற்றுலாத்துறையை தடுப்பது நோக்கமல்ல, மாறாக மேற்கு நாடுகளில் அவர்களின் நோக்கத்தை நிறைவற்ற இங்கு இவ்வாறு செய்துள்ளனர். ஐ.எஸ். இன் நோக்கம் உலகம் முழுவதும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. அவர்கள் நோக்கம் உலகத்தை மோசமாக அழிக்கவேண்டும் என்பதாகும். தாம் வழிபடும் மதம் அல்லாது ஏனையே மதத்தவரை கொன்று குவிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியுள்ளனர். இதனை நாம் பேச்சுவார்த்தை மூலமாக தடுக்க முடியாது. ஆயுதம் மூலமாகவே இதனை எம்மால் தடுக்க முடியும். விடுதலைப்புலிகளை அழித்தது போன்ற செயற்பாடு அல்ல இது. பிரபாகரனுடன், ஜே.வி.பியுடன் செய்த யுத்தமாக இதனை கருத கூடாது. ஆகவே இதற்காக எமது பாதுகாப்பு செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். இந்த தாக்குதலை செய்த நபர் மத போதகராக இங்கு வந்து நாட்டினை நாசமாக்கியுள்ளார்.
நபர்கள் வருதல், ஆயுதம் வருதல், பணம் வருதல் என்ற காரணியை கண்டறிய வேண்டும். இன்று கோடீஸ்வர வேஷத்தில் வந்து நாட்டினை நாசமாக்கும் நிலைமை உருவாகியுள்ளது. ஆகவே இவற்றை வெற்றிகொள்ள அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். ஜனநாயகத்தை பலப்படுத்த முன்வரும் அனைவரும் இதில் தலையிட வேண்டும். அதேபோல் எந்த தலையீடுகள் இல்லாத பாதுகாப்பு தரப்பை பலப்படுத்த வேண்டும். நாம் நாட்டுக்காக சிந்திக்க வேண்டும். மாறாக அரசியல் கொள்கை இதில் அவசியம் இல்லை என்றார்.
vidivelli