இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானிய அரசாங்கம் ஆதரவளிக்குமென பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.
நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு உரையாடியபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
கடந்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலினை வன்மையாகக் கண்டித்த பாகிஸ்தானிய பிரதமர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இதயபூர்வமான இரங்கலை இதன்பொழுது தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவதற்காகத் தான் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் பாகிஸ்தானிய மக்கள் தாக்குதலிலே உயிரிழந்த அப்பாவி மக்கள் குறித்து கடுமையாக வேதனையடைந்துள்ளதாகவும் இத் துன்பமான தருணத்திலே இலங்கை சகோதரர்களுக்கு தங்களது ஆதரவினை அவர்கள் வழங்குவதாகவும் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் பாகிஸ்தானியர்களால் இலங்கை சகோதரர்களின் வேதனையினை புரிந்துகொள்ள முடியும் எனக் குறிப்பிட்ட பிரதமர் இம்ரான் கான், தீவிரவாதத்திற்கு எல்லையோ, மதமோ கிடையாது என்பதுடன் பிராந்தியத்தினதும், உலகத்தினதும் சமாதானத்திற்கு தீவரவாதம் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் தீவிரவாதத்தின் அனைத்துவிதமான வடிவம் மற்றும் வெளிப்பாடுகளை கண்டிப்பதுடன் அதனை அழிப்பதற்கு இயன்றளவிலான ஆதரவினை வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
vidivelli