பெண்கள் முகத்தை முற்றாக மூடி வெளியில் செல்வதை தவிர்க்கவும்
மாவனெல்லை பள்ளிவாசல்கள் சம்மேளனம் வலியுறுத்து
அமீர் ஹுஸைன்,
எம்.எல்.எஸ்.முஹம்மத்
மாவனெல்லை பிரதேச பள்ளிவாசல்களின் சம்மேளனம் முஸ்லிம்களுக்கு விடுத்துள்ள ஒரு அறிவித்தலில் பெண்கள் வெளியில் செல்லும் போது முற்றாக முகத்தை மறைப்பதை (புர்கா) தவிர்த்துக் கொள்ளுமாறு துண்டுப் பிரசும் மூலம் கேட்டுக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் நடமாடும் போது கறுப்பு நிற ஆடையுடன் முற்றாக முகத்தை மறைத்தவர்களாக அடையாளம் தெரியாத நிலையில் நடமாடுவதால் இப்பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்கள் அச்சத்துடனும் வீணான சந்தேகத்துடனும் பார்க்கும் நிலைமைகள் உருவாகி வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட் டிருக்கின்றது.
அதே நேரம் நாட்டின் பல இடங்களில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் ஒருவிதமான அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு வருவதை உணர முடிவதால் அத்தகைய நிலைமைகளுக்கு பிரதான காரணம் முஸ்லிம் சமூகத்தை ஏனைய சமூகத்தவர்கள் சந்தேகக் கண்கொண்டு அச்சத்துடன் நோக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகும் என்று நேற்று முன்தினம் காலையில் மாவனல்லை பிரதேச செயலாளர் பிரியங்கனீ பெதங்கொடவின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்கள் மற்றும் கேகாலை மாவட்ட அரசாங்க அதிபர் சந்திரசிரி பண்டார ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல் என்பவற்றில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த சந்திப்புக்களின்போது மாவனல்லை முஸ்லிம் சமூகத்தின் முக்கியமான தலைவர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாக சபை பிரதிநிதிகள் வர்த்தக சமூகத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதனால் தற்போதைய நிலையில் மாறி வருகின்ற சூழலில் ஏனைய சமூகத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டு வருகின்ற முஸ்லிம்கள் தொடர்பான வன்முறை உணர்வை கட்டுப்படுத்து வதற்காகவும் பெண்களின் பாதுகாப்பு கருதியும் முகம் மூடுவதை தவிர்க்குமாறு கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் நகரத்திலும் எல்லா ஊர்களிலும் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் ஏனைய சமூகத்தவர்களோடு செயலாற்றுகின்றபோது சகிப்புத்தன்மை, சகவாழ்வை வெளிப்படுத்தும் வகையில் உயரிய பண்புகளை வெளிப்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்ற விடயமும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
மாவனல்லை மஸ்ஜித் சம்மேளனம் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1. தனிநபர்கள் இருவருக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளை சமூகப் பிரச்சினையாக மாற்றாது உடனடியாக அதுபற்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தி குறித்த பிரச்சினைக்கு சட்ட ரீதியாகத் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்.
2. ஊரிற்கு புதிதாக வருபவர்கள் தொடர்பாக மஸ்ஜித் நிர்வாகம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மேலதிக தேவைகள் ஏற்படின் அவர்கள் பற்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும்.
3. ஊரில் வாடகைக்கு வீடுகளை வழங்குபவர்கள் அது தொடர்பாக மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் கிராம அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிப்பதுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உரிய பதிவுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
4 .பெண்கள் உரிய பாதுகாவலர்கள் இன்றி வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்வதுடன் முகமூடி பர்தா அணியும் பெண்கள் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு தேவையான போது தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும்.
5. வெளியே செல்லும்போது அனைவரும் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
6. நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளதால் இரவு நேரங்களில் வீணாக வெளியே சுற்றித் திரிவதையும் மற்றும் குழுவாகக் கூடிநின்று கதைப்பதையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
7. அறிமுகமற்ற நபர்கள் மற்றும் வாகனங்கள் ஊரினுள் வருகின்றபோது அது தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
vidivelli