நஜீப் பின் கபூர்
இன்று உலகில் வாழ்கின்ற பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுகின்ற சமயங்கள் கிறிஸ்தவமும் இஸ்லாமும். இவை இரண்டிற்குமிடையில் மிகவும் நெருக்கமான அண்ணன் தம்பி உறவுகள் போல் வணக்க வழிபாடுகள் காணப்படுகின்றன.
வரலாற்றுக் கதைகளிலுள்ள நிகழ்வுகளை நாம் பார்க்கின்ற போது மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களுக்கும் அரேபியருக்குமிடையே கலாச்சார ரீதியிலான வேறுபாடுகள் தெரிவதில்லை. மேலும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒரு பிரதேசத்தில் அல்லது மண்ணிலே பிறப்பெடுத்தவை.
கிறிஸ்தவர்கள் யேசு நாதர் என்று சொல்கின்ற அதே மனிதனை முஸ்லிம்கள் ஈசா நபி என்று அழைக்கின்றார்கள். அவரது தாயை கிறிஸ்தவர்கள் மரியா என்றும் இஸ்லாமியர்கள் மர்யம் என்றும் அழைகின்றார்கள். இந்த விவகாரங்கள் அனைவரும் தெரிந்து வைத்திருப்பவையே.
உறவுகள் நகமும் சதையும்போல் இருந்தாலும் அவ்வுறவுகளுக்கிடையே கருத்து மோதல்கள் முரண்பாடுகள் என்று வருகின்ற போது மோதல்கள் வருவது இயல்பானதே. என்றாலும் கடந்த ஞாயிறு யேசு உயிர்த்த நாள் என்ற கிறிஸ்தவர்களின் சமய போதனையில் நமது நாட்டில் நடந்த தாக்குதலுக்கு எந்த காரணங்கள் நியாயங்கள் இருக்கின்றது என்று பார்த்தால் அணுவளவேனும் அதற்கு எந்த ஒரு நியாயத்தையும் சுட்டிக் காட்ட முடியாது.
இலங்கை வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் அப்பாவி மக்கள் மீது ஒரு சமய நிகழ்வில் இப்படிப்பட்ட தாக்குதல் ஒரே நேரத்தில் நடந்திருப்பதும் அதில் இந்த அளவு அதிகமான உயிர்கள் பலியானதும் இது முதல் தடவையாக இருக்கக் கூடும் என்று எண்ணத்தோன்றுகின்றது.
நாம் அறிந்தவரையில் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தினருக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையே எந்த ஒரு சிறிய முரண்பாடுகளும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த நாட்டில் வாழ்கின்ற கிறிஸ்தவ சமயத்தினர் பொதுவாக ஏனைய சமூகத்தினருடன் மிகவும் நேசமான உறவுகளையே பேணி வருவதுடன் அவர்களுடன் அன்னியோனியமாகவே நடந்து வந்திருக்கின்றார்கள்.
எமது அறிவுக்கும் ஆய்வுகளுக்கும் எட்டிய வகையில் இது சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நடந்த ஒரு தாக்குதல் என்று புரிந்துகொள்ள முடிகின்றது.
நட்சத்திர ஹோட்டல்களையும் இணைத்து இத்தாக்குதலை நடாத்தி இருப்பதால் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கின்ற நோக்கமும் இதில் அடங்கி இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் இந்தத் தாக்குதலை நடாத்தி இருந்தாலும் இதன் பின்னணயில் மிகவும் பயங்காரமான ஒரு நிகழ்ச்சி நிரல் செயல்பாடு இருக்கின்றது என்பதனை நாடும் பாதுகாப்புத் தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
போர் காலத்தில் கூட புலிகள் உல்லாசப் பிரயாணிகளை இலக்கு வைத்து எந்தத் தாக்குதல்களையும் நடத்தியதில்லை. அவர்கள் சர்வதேச ஆதரவை எதிர்பார்த்ததால் அப்படியான தாக்குதல்களை தவிர்த்து வந்தார்கள்.
சொல்லப்படுவது போல் இந்த நாட்டு முஸ்லிம்கள்தான் இதனை நடாத்தி இருக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு இப்படி ஒரு தாக்குதலை நடாத்துவதற்குத் தேவையான தொழிநுட்ப அறிவு நிச்சயம் வெளியிலிருந்து கிடைத்திருக்க வேண்டும். அல்லது அதற்கான பயிற்சிகளை அவர்கள் வெளியிலிருந்தே பெற்றிருக்க வேண்டும்.
உள்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இப்படி ஒரு தாக்குதலை நடத்த என்ன தேவை ஏற்பட்டது? அதன் பின்னணி என்ன என்று கேள்வி எழுப்பினால் அதற்குத் தெளிவான எந்த ஒரு பதிலையும் கண்டுகொள்ள முடியாது! எனவே இது முற்றிலும் சர்வதேச நிழ்ச்சி நிரலுக்கு அமைவாக நன்கு திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒரு கொடூரத் தாக்குதல் என்பது எமது பார்வை.
இதனை இன்னும் தெளிவான வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் உலகில் பல இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான இப்படியான தாக்குதல்கள் பல நாடுகளில் இதற்கு முன்னர் இஸ்லாத்தின் பெயரால் நடந்திருப்பதைப் பார்க்க முடிகின்றது. இவ்வாறான தாக்குதல்களின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு அல்லது பிராந்திய ரீதியில் அந்தக் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற அமைப்புக்கள் தமக்கென வைத்துக் கொண்டிருக்கின்ற பெயர்களில் நடாத்தி வந்திருக்கின்றன.
இப்படிச் சொல்வதற்காக அதிலிருந்து இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் இந்த படுகொலைத் தாக்குதலுக்குப் பொறுப்புக் கூறுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள அதனை ஒரு நியாயமாக எடுத்துக் கொள்ளவும் முடியாது என்பதும் எமது கருத்து.
மத சித்தாந்த ரீதியில் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு கூட்டத்தினரே இப்படியான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றார்கள். அவர்களுக்கு நாம் ஏன் இப்படி ஒரு தாக்குதல் நடாத்துக்கின்றேம் என்பதே தெரியாது. எங்கோ ஓரிடத்திலிருந்து எவரோ இவர்களை இயக்குகின்றார்கள். தாம் ஒரு புனிதப் பணி புரிவதாக எண்ணிக் கொண்டே இப்படிப்பட்ட படுகொலைகளை இவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். எனவேதான் இவர்களை நாம் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்துகின் றோம்.
சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் சில காலத்துக்கு முன்னர் இந்த இயக்கம் செல்வாக்குடன் இருந்த நேரத்தில் அங்கு அந்த அரசு உருவாக்கி இருக்கின்ற மண்ணில் வாழ்வது பெரும் பாக்கியம் என்று நமது நாட்டில் ஒரு சட்டத்தரணியின் மகன் பச்சைக் குழந்தைகள் தாய் தந்தையுடன் தங்கள் குடும்பங்களையும் அங்கு அழைத்துச் சென்றதும், அவர் அங்கு நடந்த போரில் குண்டடிபட்டதால் அவர்பற்றிய கதை முதன் முதலாக ஊடகங்களில் சொல்லப்பட்டது. அதற்குப் பின்னர்தான் இலங்கையிலும் ஒரு சிலர் இந்த ஐஎஸ் அமைப்பில் இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
பிராந்திய அரசியல் காரணங்களுக்காக அமெரிக்கா இந்த இயக்கங்களுக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அவ்வப்போது வழங்கி தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி வந்திருந்தது. இவர்களின் பிரதான இலக்காக ஈரானும் ஷியாக்களும் என்றிருந்தது. உலக ரீதியில் முஸ்லிம் (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா மத்திய கிழக்கு ஆபிரிக்க) நாடுகளில் பள்ளிவாயில்களில் வெடிக்கின்ற குண்டுத் தாக்குதல்களில் பலநூறு பேர் தினந்தோறும் கொல்லப்படுவதற்கு பின்னணியில் இவர்களுடைய செயல்பாடுகளே காணப்படுக்கின்றன.
சில காலத்துக்கு முன்னர் இந்தோனேசியாவில் பாலித் தீவில் இதே போன்ற ஒரு தாக்குதலை அவர்கள் நடாத்தி இருந்தார்கள் அதில் அன்று 200 பேர்வரை கொல்லப்பட்டிருந்தனர்.
இன்று அவர்கள் அமைத்திருந்த அரசு அந்தப் (சிரியா) பிராந்தியத்தில் தோற்கடிக்கப்பட்டதால்-விரட்டப்பட்டதால் இவர்கள் அங்கிருந்து தப்பி உலகம் பூராவிலும் சிதறி தமது செயல்பாடுகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றார்கள். என்பது எமது கருத்து.
நாம் இன்னும் பலமாக இருக்கத்தான் செய்கின்றோம் என்பதனைக் காட்ட உலகில் ஏதோ ஒரு இடத்தில் இப்படித் தாக்குதல்களை நடத்தி அவர்கள் பலத்தையும் இருப்பையும் காட்சிப்படுத்த முனைகின்றார்கள்.
மிக அண்மையில் பௌத்த இந்து சிலைகள் உடைத்தது தொடர்பிலும் பின்னர் புத்தளம் வனாத்தவில்லுவில் பயிற்சி முகாம்களை வைத்திருந்தார்கள் என்றும் சிலர் கைது செய்யப்பட்ட பின்னணியில் முஸ்லிம்களிலும் ஏதோ சிலர் வித்தியாசமாக செயற்படுகின்றார்கள் என்பது அரசுக்கு உறுதியாகத் தெரியவந்தது. என்றாலும் இந்தக் குழு இவ்வளவு தூரம் பயங்கரமானது என்று அரசு ஒருபோதும் கருதவில்லை.
இந்தத் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டி வந்த செய்திகளை அவர்கள் சிறு பிள்ளை செய்கின்ற வேளாண்மை என்ற நிலையில் வேடிக்கை பார்த்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. இப்போது இது பற்றி ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்ற போது பொறுப்பானவர்கள் பதில் கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றார்கள். அரசியல்வாதிகள் ஜனாதிபதியையும் பிரதமரையும் மாறிமாறி விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
சர்வதேச உளவுத்துறையினர் கடந்த 4ஆம் திகதி இது தொடர்பான தகவல்களைக் கொடுத்த போது உரிய இடங்களுக்கு ஏப்ரல் 9ஆம் திகதி இந்த தகவல் எத்திவைக்கப்பட்டிருக்கின்றது என்ற தகவலை ஊடகங்களுக்குச் சொல்லி இருந்தார் அமைச்சர் ராஜித.
நாம் இந்தக் கட்டுரை ஊடாக இந்தத் தாக்குதல் பற்றியோ அதில் நடந்த உயிர் இழப்புகள் பற்றியோ இழப்புகள் பற்றியோ ஆராயப்போவதில்லை. இன்று இதன் பின்னணியில் முஸ்லிம் சமூகம் இருக்கின்றது என்று முழு நாடும் பேசுகின்றது. அதற்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து இதுவரை தெளிவான பதில்கள் கொடுக்கப்பட வில்லை அல்லது கொடுக்கத் தெரியாமல் இருக்கின்றார்கள் என்றுதான் தெரிகின்றது.
படுகொலையாளிகள் யார்? அவர்கள் ஏன் இதனைச் செய்கின்றார்கள்.? அவர்களின் பின்னால் இருப்பது யார்? அவர்களது இலக்கு எது என்ற கேள்விகளுக்கு இதன் பின்பாவது முஸ்லிம் சமூகம் பதில் கொடுக்க வேண்டும். அல்லது ஆராய வேண்டி இருக்கின்றது.
நமது நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தினர் கடந்த சில தசாப்தங்களில் இருந்து சமய ரீதியில் குழுக்களாகப் பிரிந்து தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் பள்ளிவாசல்களில் மோதிக் கொள்வதும் அது வைத்தியசாலை, பொலிஸ் என்றும் உயிர்ப் பலி சென்றிருந்ததை நாம் அண்மையிலிருந்து பார்த்து வருகின்றறோம்.
இதனை ஒரு தீவிரவாத குழு அல்லது அடிப்படை வாதக் குழு செய்திருக்கின்றது என்று பிற சமூகத்தினர் சொன்னாலும், முஸ்லிம் சமூகம் அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாது. இலங்கை முஸ்லிம்களில் இருந்து அப்படி ஒரு குழு தோற்றம் பெறுவதற்கான பின்னணி என்ன என்பதனைக் கண்டறிய வேண்டிய தேவை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்றது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அல்லது ஒரு மூட்டைப் பூச்சி கடித்தால் அனைத்து மூட்டைப் பூச்சிகளும் வேட்டையாடப்படுவது போல்தான் ஒரு நிலை இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
இஸ்லாம் ஒரு காட்டுமிராண்டித் தனமான மதம் என்ற பிரச்சாரத்திற்கு இத்தாக்குதல் மேலும் வலு சேர்த்திருக்கின்றது.
உள்நாட்டில் முஸ்லிம் சமூகத்தினர் போகும் வரும் இடங்களில் எல்லாம் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாவார்கள். நாட்டிலுள்ள இஸ்லாமியக் கல்வி நிலையங்கள் மத்ரசாக்கள் எல்லாம் கடுமையான சந்தேகப் பார்வைக்கு ஆளாகும்.
முஸ்லிம்களின் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் கலாச்சார உடைகள் எல்லாம் சந்தேகப் பார்வைக்கும் அச்சத்துக்கும் இலக்காகும். முஸ்லிம் சமூகத்தினர் தொழில் செய்யுமிடங்களில் எல்லாம் சந்தேகப் பார்வைக்கு ஆளாவர்கள்.
சந்தேகத்தின் பேரில் பலநூறு பேர்கள் கைது செய்யப்பட இடமிருக்கின்றது. இவர்கள் நடத்திய தாக்குதலில் பல முஸ்லிம்களும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஒட்டு மொத்தத்தில் முஸ்லிம்களுக்கு அருகில் வருவதற்குக் கூட அந்நிய சமூகத்தினருக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்படும்.
எனவே இத்தாக்குதல்தாரிகள் இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும் முடமாக்கிப் போட்டிருக்கின்றார்கள் என்பதனை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இது இஸ்லாத்தின் பேரால் நடத்தப்படுக்கின்ற தாக்குதலா இஸ்லாமிய விரோதிகளின் தேவைகளை நிறைவு செய்கின்ற நோக்கில் நடாத்தப்படுக்கின்ற தாக்குதலா என்று நமது சமூகம் சிந்திக்க வேண்டும்.
இது தொடர்பாக இன்னும் விசாரணைகள் உறுதியான முடிவுகளைச் சொல்லாவிட்டாலும் இன்று முஸ்லிம் சமூகம் கடும் விமர்சனத்திற்கும் அவமானத்திற்கும் ஆளாகி இருக்கின்றது.
இந்தப் படுகொலைகளுக்குப் பின்னரும் கிறிஸ்தவ மதப்போதகர்கள் கடைப்பித்த அணுகுமுறை மிகவும் பாராட்டத்தக்கதாகவும் அகிம்சைத் தன்மை கொண்டதாகவும் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
vidivelli