மத வழிபாடுகளுக்கு வந்த அப்பாவி மக்களையும் ஏனையோரையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாத மனிதாபிமானமற்ற பாரிய குற்றமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரதம இமாம் மெளலவி எம்.எஸ்.எம். தஸ்லீம் விடுத்துள்ள அனுதாபச்செய்தியிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,
நாட்டின் சில பிரதேசங்களிலும் குறிப்பாக கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் மத வழிபாடுகளுக்கு வந்த அப்பாவி மக்களையும் ஏனையோரையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாத மனிதாபிமானமற்ற பாரிய குற்றமாகும். ஒவ்வொரு மதத்தவரும் சுதந்திரமாக அவர்களின் மதங்களை பின்பற்றும் உரிமையைப் பெற்றுள்ளனர். அதைபோன்று மாற்று மதங்களையோ மதங்களை பின்பற்றுபவர்களையோ மதத்தலங்களையோ தாக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. அவ்வாறு நடந்துகொள்வோர் சரியாக இனம் காணப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும்.
அத்துடன் தாக்குதல்களுக்கு உட்பட்டு மரணித்தவர்களின் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம். தாக்குதலில் காயமடைந்த உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதுடன் அவர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எனவே நாட்டில் அமைதிகாத்து சகல இன மக்களோடும் சமாதானமாக வாழ்ந்து நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடக்குமாறு சகல மக்களையும் வேண்டிக்கொள்வதுடன் அநாவசிய வதந்திகளை பரப்புவதிலிருந்து முற்றாக தவிர்ந்து சகல இன மக்களோடும் நல்லிணக்கத்தை பேணுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.
vidivelli