தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புள்ள இயக்கத்தை தடைசெய்க
பொலிஸ்மா அதிபரிடம் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு கோரிக்கை
(ஏ.ஆர்.ஏ. பரீல்)
கடந்த ஞாயிற்றுக்கிழமை 300 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலியெடுத்து 500 க்கும் மேற்பட்டவர்களை காயங்களுக்குள்ளாக்கிய குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் தொடர்புபட்ட இயக்கத்தைத் தடைசெய்யும்படி முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு பாதுகாப்பு செயலாளரையும், பொலிஸ்மா அதிபரையும் கோரியுள்ளது.
முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு நேற்று பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கையளித்துள்ள மகஜரிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் எதிர்காலத்தில் மேலும் தொடராமல் இருக்க இலங்கையில் வெளிநாட்டு உதவிகளுடன் இயங்கிவரும் இயக்கங்களைக் கண்காணிப்பதுடன் அவ்வியக்கங்களின் செயற்பாடுகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்தால் அவற்றையும் தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ஐ.என்.எம். மிப்லாலின் கையொப்பத்துடன் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு மிலேச்சத்தனமான இத்தாக்குதல்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் தொடர்பான தகவல்களை ஏற்கனவே அறிந்திருந்தும் தடுக்கப்படாமைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அப்பாவி மக்களின் உயிர்களைப் பலியெடுப்பது இஸ்லாத்துக்கு விரோதமான செயலாகும். இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் அரசாங்கத்துக்கு எதிராகவோ ஒரு சமூகத்துக்கு எதிராகவோ ஆயுதம் ஏந்தவில்லை.
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.
இவ்வாறான தீவிரவாத செயல்கள் உருவாகுவதற்கு பள்ளிவாசல் மிம்பர்களில் உலமாக்கள் தங்களது இயக்க ரீதியான கருத்துகளை முன்வைப்பதும் காரணமாக அமைந்துள்ளது.
அத்தோடு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் நிலவும் முறுகல் நிலையும் சாதகமாக அமைந்துள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
vidivelli