குற்றவாளிகள் அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டனரா?
உண்மையை ஆராய்ந்து வருகிறேன் என்கிறார் கபீர் ஹாசீ ம்
அண்மையில் வனாத்தவில்லு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவரோ அல்லது இருவரோ பின்னர் அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவரில்
ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் இதன் உண்மைத்தன்மை குறித்து இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்பதுடன், தொடர்ச்சியாக இதுபற்றி ஆராய்ந்து வருகின்றேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மாவனெல்லை பகுதியில் அண்மையில் வன்முறை சம்பவமொன்று பதிவாகியிருந்தது. அதன் பாரதூரத்தன்மையை அறிந்துகொண்டு, அந்த விடயம் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தேன். அத்தோடு அந்த விசாரணைகளுக்கு எம்முடைய முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தோம்.
இந்த நாட்டில் நாமனைவரும் ஒருமித்து வாழ்வதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடியவாறு ஒருசில அடிப்படைவாதிகள் செயற்படுகின்றார்கள் என்பதையும், அதன் பாரதூரத்தன்மையையும் தெளிவாகப் புரிந்துகொண்டோம். இவ்விடயம் தொடர்பில் அப்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரிடமும் கலந்துரையாடி இருந்தேன். அத்தோடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்திய போது, உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவரும் கூறியிருந்தார். அதேபோன்று வனாத்தவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திலும் அது குறித்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தோம். இந்நிலையில் வனாத்தவில்லு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவரோ அல்லது இருவரோ பின்னர் அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவரில் ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் இதன் உண்மைத்தன்மை குறித்து இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்பதுடன், தொடர்ச்சியாக இதுபற்றி ஆராய்ந்து வருகின்றேன் என்று குறிப்பிட்டார்.
vidivelli