ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸிம்
தெற்காசியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலாகவே இதனை நாம் காண்கின்றோம். ஜனாதிபதியும் பிரதமரும் பிரிந்து செயற்படுவதாலே இவ்வாறான நிலைமைகளின்போது முன்கூட்டி தீர்மானங்கள் எடுக்க முடியாமல் போயிருக்கின்றது. அதனால் அரசாங்கமே இதற்கு பொறுப்பு கூறவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று விசேட அமர்வாக பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், முப்பது வருடங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் இவ்வாறான சம்பவங்களை இனிஒருபோதும் கணக்கிடைக்காது என்றே அனைவரும் எண்ணிக்கொண்டிருந்தனர். யுத்தம் முடிந்த 10ஆவது வருட விழாவை எதிர்வரும் மாதம் கொண்டாட இருந்தோம். என்றாலும் 30 வருட யுத்தத்திலும் பொது மக்களை இலக்குவைத்து பயங்கரவாதிகள் மேற்கொண்ட எந்தவொரு திட்டமிட்ட தாக்குதலிலும் இந்தளவு பாரிய பாதிப்பு ஏற்படவில்லை. புலிகள் அமைப்பும் ஒரே நேரத்தில் பல இடங்களில் குண்டுகளை வெடிக்க வைத்திருக்கின்றது. என்றாலும் இந்தளவு பாரிய அழிவொன்றை ஏற்படுத்த அவர்களால் முடியவில்லை. தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிப்பவர்களின் கருத்தின் பிரகாரம், இதுதான் மக்களை இலக்குவைத்து தெற்காசியாவில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான பயங்கரவாத தாக்குதலாகும். 2008 இல் மும்பாயில் இடம்பெற்ற தாக்குதலிலும் இந்தளவு மரணங்கள் ஏற்படவில்லை.
மேலும் இந்தளவு மோசமான முறையில் பயங்கரவாதம் மீண்டும் எவ்வாறு தலைதூக்கியது என்பதை இந்த சபை ஆராய்ந்து பார்க்கவேண்டும். 2005 நவம்பர் மாதம் முதல் தடவையாக நான் நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்படும்போது நாட்டில் பெயரளவிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று இருந்தது.
என்றாலும் புலிகள் அமைப்பு பாதுகாப்பு பிரிவை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்தி நாளாந்தம் படையினர் இரண்டு மூன்றுபேரை கொலை செய்து வந்தது. அந்த காலத்தில் கெப்பத்திகொல்லாவையில் பஸ் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு ஒன்றின் காரணமாக பாரியளவில் பொது மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு சென்றபோது எனக்கு நினைவுக்கு வந்தது, கெப்பத்திகொல்லாவையில் இடம்பெற்ற சம்பவமாகும். கெப்பத்திகொல்லாவ சம்பவத்தினால் அந்த பிரதேசவாசிகளால் எமது அரசாங்கத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மக்களின் உயிருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத அரசாங்கத்தினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. 2006 ஜூலை மாதம் நாங்கள் ஏன் யுத்தத்தை ஆரம்பித்தோம்? அது புலிகள் அமைப்பு மாவிலாறு அணைக்கட்டை அடைத்து அந்த பிரதேசத்தில் இருக்கும் அதிகமான கிராமங்களுக்கு கிடைக்கும் தண்ணீரை நிறுத்தியதாலாகும். மனிதர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தி சாதாரண வாழ்க்கையை கொண்டுசெல்ல தேவையான சூழலை ஏற்படுத்துவது அரசாங்கம் ஒன்றின் கடமையாகும். அதனால்தான் மாவிலாறு சம்பவத்தில் ஆரம்பித்து இந்த நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமலாக்கும்வரை மீளத்திரும்பாமல் செயற்பட்டோம்.
மேலும் 2015 ஜனவரியில் பூரணமாக பாதுகாப்பான நாட்டையே நான் புதிய ஜனாதிபதிக்கு ஒப்படைத்தேன். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவகையிலும் அச்சுறுத்தல்கள் ஏற்படாதவகையில் நாங்கள் புலனாய்வுத்துறையை உறுத்திப்படுத்தி இருந்தோம். எமது அண்மை நாடுகள்போல் வேறு சர்வதேச புலனாய்வு பிரிவுகளுடன் இணைந்து அவர்களின் ஒத்துழைப்புடன் செயற்பட்டோம். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதுடன் அதுதொடர்பாக நாங்கள் செயற்பட்டோம். எமது அரசாங்கத்தின் கீழ் இவ்வாறானதொன்று இடம்பெற எந்தவகையிலும் இடமிருக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற பேரழிவுக்கு பூரணமாக அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும்.
இவ்வாறான சம்பவமொன்று இடம்பெறலாம் என பொலிஸாரினால் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு அறிவிக்கப்பட்டும் அரசாங்கம் என்ன செய்தது? குறைந்தபட்சம் அந்த மதஸ்தலங்களின் பிரதானிகளுக்காவது அறிவித்ததா? கத்தோலிக்க தேவாலயம் மற்றும் வேறு கிறிஸ்தவ ஆலயங்களின் பிரதானிகளுக்காவது அறிவுறுத்தினார்களா? அந்த இடங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதா? பார்க்கும்போது இவை எதனையும் மேற்கொள்ளவில்லை. என்றாலும் அரசாங்கத்தினர் இவ்வாறு அச்சுறுத்தல் இருக்கும் இடங்களுக்குச் செல்லாமல் அவர்களை பாதுகாத்துக்கொண்டுள்ளனர். உதிர்த்த ஞாயிறு போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது வழிபாடுகளுக்காக பொதுவாக அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இம்முறை மாத்திரம் எந்த பிரதிநிதியும் ஆலயங்களில் இருந்ததாக தெரியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடித்த பின்னர் நான் அந்த இடங்களுக்கு சென்றபோது, எதிர்க்கட்சி இந்த சம்பவத்தின் மூலம் அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். நான் புனித அந்தோனியார் ஆலயத்துக்கு மாத்திரமல்ல, அன்று கெப்பத்திகொல்லாவைக்கும் அவ்வாறு சென்றேன். நான் இவ்வாறு கதைப்பது நாவால் வற்றாலை கிழங்கு நாட்டியவர்போல் அல்ல. மாறாக முடிவுக்கு கொண்டுவர முடியாது என தெரிவித்த பயங்கரவாத்தை முடிவுக்கு கொண்டுவந்த அரசாங்கத்துக்கு தலைமைத்துவம் வழங்கிய நபராகவே கதைக்கின்றேன்.
இந்த அரசாங்கம் 2015 அதிகாரத்துக்கு வந்தது முதல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகளை வேட்டையாடுவதையே மேற்கொண்டு வந்தது. கடந்த 4 வருடங்களில் இவர்கள் எமது எத்தனை இராணுவ வீரர்களை சிறையிலடைத்தனர்? முன்னாள் இராணுவ தளபதிகள், கடற்படை தளபதிகள், விமானப்படை தளபதிகளை எத்தனை தடவை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்துவந்து விசாரணை செய்திருக்கின்றனர்?
யுத்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எனது சகோதரர் என்ற காரணத்தினால், அவருக்கு வழங்கவேண்டிய அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் வழங்கினார்கள். நீதிமன்றத்தின் தலையீடு காரணமாகவே அவருக்கு கைவிலங்கு மாட்ட முடியாமல்போனது. நாட்டில் இருப்பது ராஜபக் ஷ வினரின் முப்படைகள் அல்ல, இருப்பது இலங்கையின் முப்படைகளாகும். இலங்கை ஜனநாயகத்தின் புலனாய்வுப் பிரிவாகும். எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியிருப்பது இவர்களாகும் என நான் தொடர்ந்து அரசாங்கத்துக்கு தெரிவித்திருக்கின்றேன். இதனை இவர்கள் விளங்கிக் கொள்வதில்லை.
இந்த அரசாங்கம் தற்போது ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். வெளிநாடுகள் கூறுவதை போன்று இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது. எமது நாட்டின் பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் ஆலோசனைகளுக்கமைய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு இந்த அரசாங்கம் தயாராகியது. அந்த சட்டத்தை இல்லாது செய்திருந்தால் இன்று என்னவாகியிருக்கும்.
இந்த அரசாங்கம் தமது இராணு வம், புலானாய்வு பிரிவினரை கைது செய்து வந்தமையினால் பயங்கரவாதிகளுக்கு எமது நாடு இலகுவான இலக்காக மாறியது. உலகில் எந்த நாட்டிலும் தமது இராணுவத்திற்கு எதிராக இவ்வாறான இடையூறுகளை மேற்கொண்டதில்லை. இவ்வாறான விடயங்களை நன்கு கண்காணித்தே பயங்கரவாதிகள் தமது திட்டங்களை வகுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக யாரேனும் அதிகாரியை சிக்கவைத்து அரசாங்கம் தப்பிக்கொள்ள முயற்சிப்பதை போன்றே தெரிகின்றது. இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகள் காரணமாகவே இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த சம்பவம் தொடர்பாக பதவி விலக வேண்டுமென்றால் அரசாங்கமே பதவி விலக வேண்டும். குறித்த சம்பவம் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் முன் கூட்டியே அறிந்து அது தொடர்பாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக அவர்களை பாராட்ட வேண்டும். ஆனால் அதற்கு அப்பால் ஒன்றும் நடந்திருக்கவில்லை. எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அது தொடர்பான எச்சரிக்கை அனுப்பி வைக்கப்பட்டிருந்த போது அவர்கள் எனக்கு தெரிவிக்கவில்லை. அது தொடர்பாக நான் முன்னரே தெரிந்திருந்தால் நிச்சயமாக கர்தினாலுக்கு அது தொடர்பாக அறிவித்திருப்பேன்.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கையெடுக்க வேண்டிய முறை தொடர்பாக அரசாங்கமே அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அதனை சரிவர செய்யவில்லை. இவ்வாறான சம்பவங்கள் ஒரே நேரத்தில் நடப்பதில்லை. மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு சம்பவம், அந்த பிரதேசத்தில் அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, புத்தளத்தில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டமை ஆகியன ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையே. இதன்படி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவமும் எதிர்பாராத வகையில் நடைபெற்றதல்ல. ஆனால் அரசாங்கம் அது தொடர்பாக நடவடிக்கையெடுக்காது தமது பாதுகாப்பையே மேற்கொண்டுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதல் 30 வருட யுத்தத்தின் போது இடம்பெற்ற தாக்குதல்களை விடவும் வித்தியாசமானது. அன்று பயங்கரவாதிகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைக்கவில்லை.
வெளிநாட்டில் இருந்து கொண்டு பணத்தை அதற்காக தேடியதால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் தற்போது இலங்கையில் சிவில் மக்களை மாத்திரமன்றி வெளிநாட்டவர்களையும் இலக்கு வைத்து நடத்துகின்றனர். இது வெளிநாட்டு முதலீடுகளுக்கும் பாரிய பாதிப்பாகும்.
இந்நிலையில் தற்போது இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.
நல்லாட்சி அரசாங்கம் மகிழ்ச்சியடைவதற்காக சீ.ஐ.டி.யினர் ஒவ்வொருவரிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றுக்கொள்கின்றனர். அவ்வாறான வாக்குமூலங்களை பயன்படுத்தியே இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கையெடுக்கின்றனர். இவ்வாறான நிலைக்குள் செல்வதனை இனியாவது நிறுத்துங்கள்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம். இதேவேளை சட்டத்தை கையிலெடுக்காது பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
இதேவேளை அரசாங்கத்திடம் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சபைக்கு இந்த தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே தகவல் கிடைத்ததா? அது எப்போது கிடைத்தது. அது தொடர்பாக எடுத்த நடவடிக்கையென்ன? வணாத்துவில்லுவில் வெடி பொருட்கள் மீட்கப்பட் டமை தொடர்பாக விசாரணை நடத்தியது யார்? இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் யார்? இது தொடர்பாக பாதுகாப்பு சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா? அது தொடர்பாக முன்னெடுத்த நடவடிக்கையென்ன? அது தொடர்பான சந்தேக நபர்களை விடுவிக்க கோரிக்கை விடுத்த நபர் யார்? ஏப்ரல் மாதத்தில் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பாக புலனாய்வு தகவல் உள்ளதா? இந்த சம்பவத்துடன் வெளிநாட்டு சக்தி உள்ளதா? அப்படியென்றால் அது யார்?
எனவே தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 500 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் காயமுற்ற வர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்றார்.
vidivelli