ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்
நியூசிலாந்து கிரைஸ்ட்சேர்ச் நகரில் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கு தேவாலயங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜே.எம்.ஐ எனும் வெளிநாட்டு அடிப்படைவாத அமைப்புகளே உள்ளன எனவும் தெரிவித்தார்.
அத்துடன், இவ்வாறான செயற்பாடு காரணமாக நாட்டில் உள்ள முஸ்லிம்களை சந்தேகக் கண்ணில் பார்க்கும் செயற்பாடுகளை கைவிட வேண்டும். இது குறித்த விசாரணையில் முஸ்லிம்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட அமர்வுகளின் போது உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், மிகவும் அமைதியாக வாழ்ந்துவந்த எமது நாட்டினை ஒரு குறுகிய பயங்கரவாத அமைப்பினால் நாசமாக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இவ்வாறான நாசகார செயற்பாடு இடம்பெற்றுள்ளது. தேவாலயங்கள், ஹோட்டல்கள் இலக்குவைக்கப்பட்டுள்ளன. இதனால் பல பொதுமக்களை நாம் இழந்துள்ளோம். இப்போது வரையில் 320 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமாகியுள்ளனர். வெளிநாட்டு பிரஜைகள் 38 பேர் கொல்லப்பட்டனர்.எமது பாதுகாப்பு படையின் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எமது அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.
தற்கொலை குண்டுத்தாக்குதலில் இந்த செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளது. அதுவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நியூசிலாந்து கிரைஸ்ட்சேர்ச் நகரில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கு தேவாலயங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜே.எம்.ஐ ஆகிய அடிப்படைவாத அமைப்புகளே இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறான அடிப்படைவாத அமைப்புகளை உடனடியாக தடைசெய்ய வேண்டும். இவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இவ்வாறான அமைப்புகளின் உடைமைகளை அரசு பறிமுதல் செய்து அரச உடமையாக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த முடியும்.
அதேபோல் இவ்வாறான செயற்பாடு காரணமாக நாட்டில் உள்ள முஸ்லிம்களை சந்தேகக் கண்ணில் பார்க்கும் செயற்பாடுகளை கைவிட வேண்டும். இது குறித்த விசாரணையில் முஸ்லிம்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர். ஆகவே இனவாதம், மதவாதம் ஆகியவற்றை கைவிட வேண்டும்.
அதேபோல் இந்த தாக்குதல் இடம்பெற பாதுகாப்பு தரப்பின் பலவீனமான செயற்பாடே காரணமாகும். இவ்வாறான தாக்குதல் நடத்தப்படப் போகின்றது என்பது தெரிந்தும் உறுதிப்படுத்தப்பட்டும் இந்த தகவல் பரிமாறப்படவில்லை. குறிப்பாக பிரதமருக்கோ, எனக்கோ இதுகுறித்து எந்தவித தகவலும் வழங்கப்படவில்லை. ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில் உரிய அமைச்சர் என்ற வகையில் எனக்கோ அல்லது பிரதமருக்கோ தகவல் வழங்காதது ஏன்? கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து நேற்று வரையில் பிரதமருக்கோ எனக்கோ பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள இடமளிக்கவில்லை. எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் விசாரணை நடத்த ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சகல குற்றவாளிகளையும் கைதுசெய்யவும் அவர்களுக்கு உயரிய தண்டனை வழங்கவும் சகல நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது வரையில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த விசாரணைகளை விரிவுபடுத்தி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்றார்.
vidivelli