இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே தாக்குதல்தாரிகளின் நோக்கம்
தேசிய ஷூறா சபை
நாட்டில் மிலேச்சத்தனமாக குண்டுத்தாக்குதலை முன்னெடுத்தவர்கள் எமது நாட்டின் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தல், பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தல் போன்ற நோக்கங்களைக் கொண்டவர்கள் நாட்டின் விரோதிகளாகவே இருக்க முடியும். இவ்வேளையில் நாட்டில் வாழும் மக்களனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டியது அவசியம் என்பதுடன், நாட்டுக்கு எதிரான எந்தவொரு செயற்பாட்டையும் எதிர்த்துப் போராட வேண்டிய பொறுப்பு இந்நாட்டு மக்களுக்கு உள்ளது என்று தேசிய ஷூறா சபை தெரிவித்துள்ளது.
தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தேசிய ஷூறா சபை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இனங்களுக்கு இடையில் வன்முறையைத் தூண்டுதல் மற்றும் தேசிய பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்தல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்களில் தமது உறவுகளைப் பலி கொடுத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் விரைவாக அதிலிருந்து மீள்வதற்குப் பிரார்த்திக்கின்றோம்.
இந்நிலையில் தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உரிய அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கின்றோம். அத்தோடு இந்தச் சவாலை சீராகக் கையாள்வதற்கும், நாட்டில் மீண்டும் சமாதானம் மற்றும் ஸ்திரநிலையை நிலைநாட்டுவதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம். மேலும் இவ்வேளையில் நாட்டில் வாழும் மக்களனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டியது அவசியம் என்பதுடன், நாட்டுக்கு எதிரான எந்தவொரு செயற்பாட்டையும் எதிர்த்துப் போராட வேண்டிய பொறுப்பு இந்நாட்டு மக்களுக்கு உள்ளது என்று அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
vidivelli