கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த வர்த்தகரான ரிஷாட் ஹமீதின் ஜனாஸா நல்லடக்கம் நேற்றுக் காலை ஜாவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெற்றது. உடத்தலவின்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பிரபல வர்த்தகராவார். இவரது மனைவியான ஜெஹான் ஹமீட், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளராவார்.
ஜனாஸா நல்லடக்கத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச ஜனாஸாவை நேரில் சென்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த வவுனியா, பட்டானிச்சூர் பிரதேசத்தைச் சேர்ந்த நிசாட் முகமட் நளீர் எனும் இளைஞரின் ஜனாஸா நேற்று வவுனியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கொழும்பில் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறியை தொடர்ந்து வரும் இவர், சினமன் கிரான்ட் ஹோட்டலில் தொழிற்பயிற்சியைப் பெற்று வந்த நிலையிலேயே இத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்றுக் காலை பட்டானிச்சூரில் இடம்பெற்ற ஜனாஸா நல்லடக்கத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா, பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
vidivelli