பொறுப்புக் கூறுவதிலிருந்து அரசாங்கம் விலகிவிடாது

முன்னெச்சக்காரிகை இன்மைக்கு மன்னிப்பு கோருகிறது

0 540

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று தேவா­ல­யங்­க­ளையும், நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளையும் இலக்­கு­வைத்து இடம்­பெற்ற பாரிய குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் குறித்து அர­சாங்கம் கவ­லை­ய­டை­கின்­றது. அதே­வேளை இவ்­வி­டயம் தொடர்­பான பொறுப்­புக்­கூ­றலில் இருந்து அர­சாங்கம் ஒரு­போதும் விலகப் போவ­தில்லை. இந்தத் தொடர் குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் மற்றும் அதனால் ஏற்­பட்ட அழி­வுகள் குறித்து அர­சாங்கம் முழு­மை­யாகப் பொறுப்­பேற்றுக் கொள்­கின்­றது. அதே­வேளை இத்­த­கைய தாக்­குதல் சம்­பவம் இடம்­பெ­றப்­போ­வ­தாக முன்­னரே எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்தும் கூட, அதனைத் தடுப்­ப­தற்­கான முன்­னெச்­ச­ரிக்கை பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் எவையும் மேற்­கொள்­ளப்­ப­டாமை குறித்து மிகுந்த கவ­லை­ய­டை­வ­துடன், நாட்டு மக்­க­ளிடம் மன்­னிப்புக் கோரு­கின்றோம். பாரிய சேதம் நிகழ்ந்து முடி­வ­டைந்­துள்ள நிலையில், இது தொடர்பில் விரை­வான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்போம் என்­ப­துடன், அர­சாங்­கத்தின் சார்பில் இதற்­கான முழுப்­பொ­றுப்­பையும் ஏற்­றுக்­கொள்­கின்றோம் என்று சுகா­தாரம், போச­ணைகள் மற்றும் சுதேச மருத்­துவ அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

தலை­நகர் கொழும்பு உட்­பட நாட்டில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற தொடர் குண்­டு­வெ­டிப்­புக்­களைத் தொடர்ந்து நேற்­றைய தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அமைச்­ச­ர­வைக்­கூட்டம் நடை­பெற்­றது. அதனைத் தொடர்ந்து அலரி மாளி­கையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் அர­சாங்­கத்தின் முக்­கிய பிர­மு­கர்கள், அமைச்­சர்கள், பிரதி அமைச்­சர்கள் எனப் பலரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

அதன்­போது கருத்து வெளி­யிட்ட சுகா­தாரம், போச­ணைகள் மற்றும் சுதேச மருத்­துவ அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தேவா­ல­யங்கள் மற்றும் நட்­சத்­திர ஹோட்­டல்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளுக்கு அர­சாங்கம் முழுப்­பொ­றுப்­பேற்றுக் கொள்­வ­துடன், அந்தப் பொறுப்­புக்­கூறல் கட­மை­யி­லி­ருந்து ஒரு­போதும் விலக மாட்டோம் என்று அறி­வித்தார். அத்­தோடு இந்தத் தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்­பான எச்­ச­ரிக்கை முன்­ன­ரேயே கிடைக்­கப்­பெற்­றி­ருந்தும் கூட, உரிய முன்­னெச்­ச­ரிக்கை பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டா­மை­யா­லேயே இத்­த­கைய பாரிய அழிவு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்­ப­த­னையும் ஏற்­றுக்­கொண்டார்.

நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன வெளி­யிட்ட கருத்­துக்கள் வரு­மாறு,

பொறுப்­பேற்­றலும், மன்­னிப்­புக்­கோ­ரலும்

இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பிற்கு சற்று நேரத்­திற்கு முன்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நடை­பெற்­றது. அக்­கூட்­டத்தில் நாங்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து இவ்­வி­டயம் தொடர்பில் மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அந்­த­வ­கையில் நாட்டில் இடம்­பெற்ற பாரிய தாக்­குதல் சம்­பவம் குறித்து அர­சாங்கம் கவ­லை­ய­டை­கின்­றது. அதே­வேளை இவ்­வி­டயம் தொடர்­பான பொறுப்­புக்­கூ­றலில் இருந்து அர­சாங்கம் ஒரு­போதும் விலகப் போவ­தில்லை. இந்தத் தொடர் குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் மற்றும் அதனால் ஏற்­பட்ட அழி­வுகள் குறித்து அர­சாங்கம் முழு­மை­யாகப் பொறுப்­பேற்றுக் கொள்­கின்­றது. அதே­வேளை இத்­த­கைய தாக்­குதல் சம்­பவம் இடம்­பெ­றப்­போ­வ­தாக முன்­னரே எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்தும் கூட, அதனைத் தடுப்­ப­தற்­கான முன்­னெச்­ச­ரிக்கை பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் எவையும் மேற்­கொள்­ளப்­ப­டாமை குறித்து மிகுந்த கவ­லை­ய­டை­வ­துடன், நாட்டு மக்­க­ளிடம் மன்­னிப்புக் கோரு­கின்றோம். பாரிய சேதம் நிகழ்ந்து முடி­வ­டைந்­துள்ள நிலையில், இது தொடர்பில் விரை­வான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்போம் என்­ப­துடன், அர­சாங்­கத்தின் சார்பில் இதற்­கான முழுப்­பொ­றுப்­பையும் ஏற்­றுக்­கொள்­கின்றோம்.

அர­சியல் ஆதாயம் தேடும் முயற்சி

தேவா­லயங்கள் மற்றும் நட்­சத்­திர ஹோட்­டல்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்­டுள்ள இந்த மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை சிலர் அர­சியல் ஆதாயம் பெறும் நோக்கில் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முயற்­சிக்­கின்­றார்கள். ‘நாங்கள் இருந்­தி­ருந்தால் இத்­த­கைய சம்­பவம் நடந்­தி­ருக்­காது” என்று கூறு­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு நான் ஒன்றை நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன். இவ்­வாறு கூறு­கின்­ற­வர்கள் ஆளுந்­த­ரப்பில் இருந்­த­போது நானும் அதில் அங்கம் வகித்­தி­ருக்­கின்றேன். அவர்­களின் ஆட்­சியில் பல்­வே­று­மட்ட பாது­காப்பு ஏற்­பா­டுகள் இருந்­த­போ­திலும் கூட இது­போன்ற மோச­மான தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. எனவே இச்­சம்­ப­வத்தை அர­சியல் சுய­ இ­லா­பங்­க­ளுக்­காகப் பயன்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

தாக்­குதல் குறித்து முன்­னரே எச்­ச­ரிக்கை அனுப்­பப்­பட்­டது
நாட்டில் பாரிய தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் இது தொடர்பில் முன்­ன­ரேயே எச்­ச­ரிக்கை அனுப்­பட்­டுள்­ள­தாக தற்­போது நாங்கள் அறிந்­தி­ருக்­கின்றோம். அத்­த­க­வல்கள் எவற்­றையும் மறைக்­காமல் பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தற்கும் எதிர்­பார்த்­துள்ளோம். அந்­த­வ­கையில் நாட்டில் இத்­த­கைய பாரிய தாக்­குதல் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கடந்த 4 ஆம் திகதி சர்­வ­தேச புல­னாய்­வுப்­பி­ரிவு அறி­வு­றுத்­தி­யி­ருக்­கின்­றது.
அத­னைத்­தொ­ட­ர்ந்து கடந்த 9 ஆம் திகதி நாட்டில் பாரிய குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடை­பெறும் என்ற சந்­தேகம் எழுந்­துள்­ள­தாகக் குறிப்­பிட்டு, ‘தேசிய தௌஹீத் ஜமாத்” என்ற அமைப்பைச் சேர்ந்த சந்­தே­க­ந­பர்­களின் பெயர்­க­ளையும் உள்­ள­டக்கி பாது­காப்புச் செய­லா­ள­ருக்குப் பதி­லாக தேசிய புல­னாய்­வுப்­பி­ரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பொலி­ஸ்மா­ அ­தி­ப­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்­பி­யுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி பிரதிப் பொலிஸ்­மா­அ­திபர் இவ்­வி­டயம் குறித்து அமைச்சர்கள் பாது­காப்புப் பிரிவின் பணிப்­பாளர், நீதி­ய­ர­சர்கள் பாது­காப்புப் பிரிவின் பணிப்­பாளர், ஓய்­வு­பெற்ற ஜனா­தி­ப­தி­க­ளுக்­கான பாது­காப்புப் பிரிவின் பணிப்­பாளர், ஓய்­வு­பெற்ற ஜனா­தி­ப­தி­க­ளுக்­கான பாது­காப்புப் பிரிவில் மேல­திக பணிப்­பாளர், இரா­ஜ­தந்­தி­ரிகள் பாது­காப்புப் பிரிவின் மேல­திக பணிப்­பாளர் ஆகி­யோ­ருக்கு அறி­வு­றுத்தி கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­துள்ளார்.

இதில் ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவும், பிர­தமர் பாது­காப்புப் பிரிவும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. எனினும் பாது­காப்பு அமைச்­சிற்கு ஜனா­தி­ப­தியே பொறுப்­பா­னவர் என்­பதால் அவ­ரது பெயர் குறிப்­பி­டப்­ப­டாமல் இருந்­தி­ருக்­கலாம். ஆனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு இது தொடர்பில் எவ்­வித அறி­வு­றுத்­தல்­களும் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. அத்­தோடு இவ்­வி­டயம் குறித்து எத்­த­கைய பாது­காப்பு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன என்­பது தான் தற்­போ­தைய கேள்­வி­யாக இருக்­கின்­றது.

தேசிய பாது­காப்புச் சபைக் கூட்­டத்­திற்கு பிர­தமர் அழைக்­கப்­ப­டு­வ­தில்லை
நாட்டில் கடந்த அக்­டோபர் மாதம் ஏற்­பட்ட அர­சியல் நெருக்­கடி தீர்க்­கப்­பட்டு, டிசம்பர் மாத­ம­ளவில் நாங்கள் மீண்டும் அர­சாங்­கத்தைப் பொறுப்­பேற்­றுக்­கொண்ட பின்னர் இது­வரை நடை­பெற்ற எந்­த­வொரு தேசிய பாது­காப்­புச்­சபைக் கூட்­டத்­திற்கும் பிர­தமர் அழைக்­கப்­ப­ட­வில்லை. இந்த நாட்டில் ஜனா­தி­பதி முறை கொண்­டு­வ­ரப்­பட்­டதில் இருந்து ஜனா­தி­ப­திக்கு கீழான தேசிய பாது­காப்­புச்­சபைக் கூட்­டத்தில் பிர­தமர் கலந்­து­கொள்­வது தான் வழமை. கடந்த அக்­டோபர் மாதம் 26 ஆம் திக­திக்குப் பின்னர் பொய்­யாகப் பிர­த­ம­ரான மஹிந்த ராஜ­ப­க்ஷவும் தேசிய பாது­காப்புச் சபைக் கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருக்­கின்றார்.

எனினும் டிசம்பர் மாதம் 20 ஆம் திக­தி­யி­லி­ருந்து தான் பிர­தமர் அழைக்­கப்­ப­டாத நிலை­யொன்று ஏற்­பட்­டது. அதனால் தேசிய பாது­காப்­புச்­ச­பையில் என்ன நடை­பெ­று­கின்­றது என்­பது தொடர்பில் பிர­த­ம­ருக்கு எவ்­வித தெளிவும் இல்லை. அதே­போன்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரும் அழைக்­கப்­ப­டு­வ­தில்லை.

தேசிய பாது­காப்­புச்­சபை அதி­கா­ரிகள் வர­வில்லை

இவ்­வா­றி­ருக்க நாட்டில் பாரிய குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் நடை­பெ­று­கையில் ஜனா­தி­பதி வெளி­நாட்டு சுற்­றுப்­ப­ய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார். அவர் தான் பாது­காப்பு அமைச்­ச­ராவார். ஆனால் அவர் நாட்டில் இல்­லா­த­போது பாது­காப்பு விட­யங்­களைப் பொறுப்­பேற்றுச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு பதில் பாது­காப்பு அமைச்சர் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. அதனால் இந்த தாக்­குதல் சம்­பவம் நடை­பெற்ற பின்­ன­ரேயே தாக்­குதல் குறித்து முன்­னெச்­ச­ரிக்கை அனுப்­பப்­பட்­டுள்­ளது என்­பதை பிர­தமர் அறிந்­து­கொண்டார். அவரைப் போன்றே இங்­கி­ருக்­கின்ற பெரும்­பான்­மை­யான அமைச்­சர்கள் இவ்­வி­டயம் தொடர்பில் அறிந்­தி­ருக்­க­வில்லை.

ஆனால் தாக்­குதல் இடம்­பெற்ற பின்னர் பிர­தமர் தேசிய பாது­காப்­புச்­சபைக் கூட்­டத்தைக் கூட்­டினார். எனினும் தேசிய பாது­காப்­புச்­சபை அதி­கா­ரிகள் பிர­த­மரின் பணிப்­பு­ரையை ஏற்று அல­ரி­மா­ளி­கைக்கு வருகை தர­வில்லை. எனவே உட­னடி அபா­ய­கர நிலையைக் கருத்­திற்­கொண்டு பிர­தமர் பாது­காப்பு அமைச்­சிற்கு விஜயம் செய்து தேசிய பாது­காப்­புச்­சபைக் கூட்­டத்தை நடத்­தி­யி­ருந்தார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பல­வ­ருட கால­மாக தேசிய பாது­காப்­புச்­ச­பையின் கூட்­டங்­களில் பங்­கு­பற்றி வரு­பவர் என்­ப­துடன், இவ்­வி­ட­யத்தில் அவரைப் போன்ற அனு­ப­வ­மு­டைய வேறெ­வரும் இருக்­க­மு­டி­யாது. நேற்று முன்­தினம் தேசிய பாது­காப்­புச்­சபைக் கூட்­டத்தில் ஆலோ­ச­னை­களை வழங்­கிய பிர­தமர் மீண்டும் நண்­பகல் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை நடத்­தினார்.

ஜனா­தி­பதி நேற்­றைய தினம் நாடு திரும்­பிய பின்னர் மீண்டும் தேசிய பாது­காப்­புச்­சபைக் கூட்­டத்தை ஏற்­பாடு செய்து, அர­சியல் நெருக்­க­டிக்குப் பின்னர் முதன்­மு­றை­யாக அதில் கலந்­து­கொள்­வ­தற்கு பிர­த­ம­ருக்கு அழைப்பு விடுத்­த­துடன், பிர­த­மரும் மறுக்­காமல் கலந்­து­கொண்டார்.

முன்­னெச்­ச­ரிக்­கையை கருத்­திற்­கொள்­ளாமை குறித்து ஆராய வேண்டும்
இந்­நி­லையில் தாக்­குதல் குறித்து முன்­ன­ரேயே எமக்கு அனைத்து விப­ரங்­களும் கிடைக்­கப்­பெற்­றி­ருந்தும் கூட, அதனைத் தடுக்க முடி­யாமல் போயுள்­ளது. முதலில் இது தொடர்­பி­லேயே விசா­ரிக்க வேண்டும். அதற்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி ஆணைக்­குழு இவ்­வி­டயம் பற்றி முழு­மை­யாக ஆராய வேண்டும். தாக்­குதல் இடம்­பெறப் போவ­தாக யாருக்கு முன்­ன­றி­வித்தல் கிடைக்­கப்­பெற்­றது? அவை பிர­த­ம­ருக்கு நேற்று முன்­தினம் வரை அறி­விக்­கப்­ப­டா­தது ஏன்? பாது­காப்பு அமைச்­சினால் இவ்­வி­டயம் குறித்து முன்­னெ­டுக்­கப்­பட்ட முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைகள் என்ன? உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட வேண்டும். ஊட­கங்­களில் இந்த முன்­னெச்­ச­ரிக்கை வெளி­வந்த பின்­னரும் கூட நாங்கள் அது குறித்து அறி­ய­வில்லை என்­பது ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கின்­றது. ஆனால் நேற்று முன்தினம் இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றதிலிருந்து எம்மாலான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

உள்நாட்டு குழுவால் மாத்திரம் தாக்குதலை நடத்தியிருக்க முடியாது
தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை உள்நாட்டைச் சேர்ந்த குழுவொன்றினால் மாத்திரம் நடத்தியிருக்க முடியாது. இத்தாக்குதலில் பின்னணியில் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட, மிகப்பாரியதொரு தீவிரவாத வலைப்பின்னல் இருக்குமென்று கருதுகின்றோம். அவ்வாறில்லாமல் இவ்வாறான தொடர் தாக்குதலை நடத்துவதென்பது அத்தனை இலகுவான காரியமல்ல. எனவே இவ்விடயம் குறித்து முறையானதும், விரைவானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

பொலிஸ்­மா­அ­திபர் பதவி விலக வேண்டும்

நாட்டின் பாது­காப்பு செயற்­பா­டு­க­ளுக்கு பொலிஸ்­மா­அ­திபர் பொறுப்­பா­னவர் என்ற அடிப்­ப­டையில், ஏற்­க­னவே முன்­ன­றி­வித்தல் கிடை­க்­கப்­பெற்­றி­ருந்தும் இத்­தகைய பாரிய தாக்­கு­தலைத் தடுப்­ப­தற்கு எவ்­வித நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அவ்­வா­றி­ருக்­கையில் உண்­மை­யி­லேயே பொலிஸ்­மா­அ­திபர் பதவி வில­கி­யி­ருக்க வேண்டும். பொலிஸ்­மா­அ­திபர் பூஜித ஜய­சுந்­த­ரவை பத­வி­யி­லி­ருந்து நீக்கி, வேறொ­ரு­வரை நிய­மிக்­கும்­படி நாங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.